“சுபா, இங்கே வா, இந்த வெற்றிலை, பாக்கு, பூ, ப்ளவுஸ்பீஸ் எல்லாம் வரிசையா, அழகா ட்ரேயிலே எடுத்து வை.” “இதோ வரேம்மா!” +2 படிக்கும் சுபா டீ.வி. யை அணைத்து விட்டு எழுந்து வந்தாள். காலை முதல் வித்யா இறக்கை கட்டிய மாதிரி பறந்து கொண்டிருந்தாள். இன்று சரஸ்வதி பூஜை. வித்யா வீட்டில் கொலு வைக்கும் பழக்கமில்லை. நவராத்திரி ஒன்பது நாளும் அம்மனுக்குப் பூஜை மட்டும்தான் செய்வாள். அவள் கணவன் சுந்தர் ஒரு நிறுவனத்தில் அதிகாரி. அடிக்கடி, ஊர் ஊராக மாறுவதால், சரஸ்வதி பூஜையன்று மட்டும் தெரிந்த பெண்மணிகளை அழைத்து மஞ்சள், குங்குமம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். கோவைக்கு வந்து மூன்று வருடங்களாகிறது. அடுத்த வருடம் எந்த ஊரோ? இங்கு சுந்தரின் அலுவலக நண்பர்கள், சுபாவின் சிநேகிதகள் மற்றும் தான் உறுப்பினராயிருந்த மாதர் சங்கத் தோழிகள் எல்லாரையும் இன்று அழைத்திருந்தாள். எதையும் அழகாக, பிறர் பாராட்டும்படி செய்ய வேண்டுமென ஆசைப்படுபவள் வித்யா. சிறு வயதில் அவள் தாய் வீட்டில் நவராத்திரியின் போது அவள் போடும் ரங்கோலியைப் பார்க்கவே அவ்வளவு பெண்களும் வருவார்கள். வித்யாவும் தினமும் ஒரு அலங்காரம் செய்து கொண்டு தெரிந்த...