வார இறுதி கதை..

 


அரவிந்த் காதலிக்கிறான்..


அவளும் கோபமா இருக்காளே..அம்மாவும் கோபமா இருக்காங்களே..இப்ப என்ன செய்யலாம்?

அரவிந்துக்கு எதுவும் புரிய வில்லை. அரவிந்த் அவன் பெற்றோருடன் தாம்பரத்தில் இருக்கிறான். ஒரு வெளி நாட்டு தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் நல்ல வேலை. அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாட்டுப் பயணம் செல்வான். அப்பா ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி.

அவனுக்கு ஒரே அக்கா அனிதா. இரண்டு வயதே பெரியவள். திருமணமாகி மைலாப்பூரில் கணவருடன் வாசம். நேற்று ஞாயிற்றுக் கிழமை. அனிதா வீட்டுக்கு வந்திருந்தாள். எப்பொழுதும் போல் அம்மாவும் அனிதாவும்
அரவிந்தின் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

அனிதா ஜாதகம் சேர்ந்திருப்பதாகப் பல புகைப்படங்களைக் காட்டினாள். நல்ல வேலை, அழகு, நல்ல பணவசதி இருப்பவர்கள், நிறைய சீர் செனத்தி செய்பவர்கள் என்று சில பெண்களை சொல்லி பெண் பார்க்க போகலாமா என்றாள். அரவிந்த் எதிலும் பிடி கொடுக்காமல் பேசினான்.

...என்னடா அரவிந்த் பெண் எப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறாய்?.z அம்மா.

...இத்தனை ஃபோட்டோவில் யாரையுமே பிடிக்கலையா?...கேட்டது அனிதா.

...அவனுக்கு யாரையாவது பிடிச்சிருக்கோ என்னவோ? அதை நீங்க ரெண்டு பேரும் கேக்கலியே?...என்றார் அப்பா.

அனிதா வேகமாக...உங்ககிட்ட அப்படி ஏதாவது சொன்னானாப்பா?...என்றாள்.

...அவனையே கேளு...

....ஏன் அரவிந்த் நீ யாரையாவது லவ் பண்றியா?..

...ஆ..மாம்...

...பாத்தியாம்மா. நாம இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு தேடித் தேடி பொண்ணு பார்க்கிறோம்.இவன் இப்படி சொல்றானே?...

...ஏன்மா. அவனுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்றதுல உனக்கென்னம்மா கஷ்டம்?...இது அப்பா.

...ஏங்க. உங்களுக்கு முன்னாலயே தெரியுமா? ஏன் எங்ககிட்ட சொல்லல?...

...எனக்கும் நேற்று தான் தெரியும். அவனோட வேலை பார்க்கற பெண்ணை விரும்பற்தா சொன்னான். நான்தான் இன்னிக்கு அனிதா வரப்போ சொல்லிடுன்னேன்...

...யாரு அவ. நல்ல வசதியான குடும்பமா? முப்பது,நாப்பது பவுன் நகை போட்டு பெரிய கல்யாண மண்டபத்துல நல்லா கல்யாணம் பண்ணுவாங்கல்ல?...

...என்னை சொல்ல விடும்மா. அவங்க பணக்காரங்க இல்ல. சாதாரண குடும்பம். அவளுக்கு அப்பா இல்ல. அவங்கம்மா சமையல் வேலை செய்து அவளை படிக்க வெச்சு இந்த வேலைக்கு வந்திருக்கா. ரொம்ப நல்ல சுபாவம். எனக்கு பிடிச்சிருக்கு. இந்தாக்கா அவ ஃபோட்டோ. பேரு அட்சயா. மாடம்பாக்கத்தில குடியிருக்காங்க...

புகைப்படத்தைப் பார்த்தவள் அம்மாவிடம் கொடுத்தாள்.
...அம்மா எனக்கு மரியாதை இல்லாத இந்த வீட்டுல எனக்கென்ன வேலை. அவன் யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும். நான் கிளம்பறேன்...

...அவனுக்காக நீ ஏண்டி கிளம்பற? இது உன் பிறந்த வீடு. உனக்குதான்  உரிமை. இருந்துட்டு நாளைக்கு போ அனிதா...

அனிதா எதையும் காதில் வாங்காமல் கிளம்பி விட்டாள். அவன் அம்மாவும் கோபித்துக் கொண்டு அவனுடன் பேசவில்லை. அப்பாதான் அவனுக்கு ஆதரவு. இரண்டு நாளாக இருவருக்கும் கோபம் குறைந்த மாதிரி தெரிய
வில்லை. அரவிந்த் மனது மிகவும் வேதனையாகி விட்டது

அன்று அலுவலகத்திலிருந்து வந்தவன் அப்பாவிடம்...என்னப்பா. ரெண்டு பேரும் எதுவும் பேசலையே? நீங்க கேட்டீங்களா?...என்றான்.

...உன் அம்மாக்கு எடுத்து சொல்லிருக்கேன். உங்கக்காகிட்ட ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்.எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதே...

உடை மாற்றிக் கொண்டு வந்தவன்...அம்மா காஃபி கொடு...என்றதும் கொடுத்தவள்,...அந்தப் பெண்ணைதான் கல்யாணம் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டயா?...

...அம்மா பேசிட்ட. ஆமாம்மா. நீ அவளை நேர்ல பார்த்தா பிடிக்கும்மா. ரொம்ப நல்ல சாதுவான பொண்ணு. ஆனா அவங்ககிட்ட வரதட்சணை சீர் செனத்தியெல்லாம் எதிர்பார்க்காத. உனக்கு ஏத்த மருமகளா இருப்பா...

அவனது மொபைல் ஒலிக்க எடுத்தவன்...அக்கா.எப்படி இருக்க?...என்றதும்...நாளைக்கு நான் அங்க வரேன்...என்றதும்...ஹை எங்கக்கா பேசிட்டா!...என்றான்!

...அவளை..அவ பேர் என்ன சொன்ன?...என்றதும்
...யார் பேரைக் கேக்கற?...என்றான்!
...தெரியாத மாதிரி பேசாத.நீ காதலிக்கறயே அவ பேர்...
...அட்சயாக்கா. ஏன் கேக்கற?...என்றவனிடம்...அவளை நாளைக்கு வரச் சொல்லு. உனக்கு பொருத்தமான
வளானு பாக்கறேன்..என்றாள்.
...சரிக்கா. சொல்லிடறேன். பை...என்றவன் அவள் சொன்னதை அம்மாவிடம் சொன்னான்.

...ஏண்டா எங்களைப் பத்தி தப்பா நினைச்சுட்ட இல்ல. நாங்க உனக்குப் பிடிச்சவளை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணிட்டோம். உன்னிடம் சொல்லாம சஸ்பென்ஸா இருக்கதான் இரண்டு நாளா உன்கூட பேசல.  அனிதா அவளுக்காக ஒரு பட்டுப் புடவையும், கொலுசும் வாங்கிருக்கா. நாளைக்கு அவங்க அம்மாவையும் அழைச்சுகிட்டு வரச் சொல்லு...

...அம்மா. ரொம்ப தேங்க்ஸ்மா. இப்பவே அட்சயாகிட்ட சொல்றேன்...என்றவன் அப்பாவைப் பார்த்து கண்களால் நன்றி சொன்னான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)