அப்பா உங்களுக்காக...

 

அப்பா உங்களுக்காக...
அப்பா..அவர் ஒரு சரித்திரம்

அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும் போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..!

முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு.

என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்திலிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்!

நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அதைப் பொருட்படுத்தவில்லை.

எனக்கு பத்தொன்பது வயதில் திருமணம் முடிப்பதில் அப்பா உறுதியாக இருந்தார். நான் திருச்சியிலும் என் பெற்றோர் முசிறியிலும் இருந்ததால் அடிக்கடி பெற்றோரைப் பார்க்கலாம் என்ற ஆசையில் இருந்தேன்.ஆனால் சில மாதங்களிலேயே உத்திர பிரதேசத்தில் மதுராவுக்கு மாறிப் போன போது ரயில் நிலையத்தில் என் அப்பா கண்கள் கலங்க நின்றது இன்னும் என் மனதில் நிற்கிறது. இனி நினைத்தால் பெண்ணை பார்க்க முடியாதே என்று அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டாராம்.

என் அப்பா கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா பாட்டுகளும் பாடுவார். ராகம் தாளம் எல்லாம் தெரியும். ராக ஆலாபனை செய்து என்னைப் பாடச் சொல்லி கேட்பார். நான் பாடகியாக வேண்டும் என்ற ஆசை என் அப்பாவுக்கு உண்டு. அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு, திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது, என் சஷ்டி அப்த பூர்த்திக்கு வந்து வாழ்த்தியது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்!

நான் அப்பாவைப் பார்க்க போகிறேன் என்றால் என் தம்பியிடம் 'ரயில் எப்ப வரும்? ஸ்டேஷனுக்கு போகலியா?' என்று பத்து முறை கேட்பார் என்று என் தம்பி பரிகசிப்பான்!

நான் சென்றாலே அவருக்கு ஒரு சந்தோஷம். பழைய கதையெல்லாம் சொல்லுவார். 'இன்னும் பத்து நாள் இருந்துட்டு போ' என்பார். 'உன் மாப்பிள்ளைக்கு சமைத்து போடணுமே' என்றால் அவரையும் அழைத்து வந்து விடு என்பார்! இருவருமே வங்கியில் பணி புரிந்ததால் என் கணவருடன் அலுக்காமல் வங்கி விஷயங்களைப் பற்றிப் பேசுவார்!

அவருக்கு பிடித்த சமையலை செய்து போடுவேன். மோர்க்களி, புளிப்பொங்கல், அரிசி நொய் உப்மா, மெதுவடை எல்லாம் என் அப்பாவுக்கு பிடித்தவை. மாம்பழ சீசனில் என் கணவர் எல்லா வகை மாம்பழமும் வாங்குவார். தினமும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு சர்க்கரை ஏறிவிட்டதா என்று டெஸ்ட் பண்ணுவார்!

நான் 2013 டிசம்பரில் ஜெர்மனிக்கு என் பிள்ளை வீட்டுக்கு என் மருமகள் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது என் அப்பாவுக்கு மூச்சு விட முடியாமல் வெண்டிலேட்டரில் இருப்பதாக ராஜமுந்திரியில் இருந்த என் தம்பி சொன்ன
போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதாவது ஆகிவிட்டால் அப்பாவைப் பார்க்கக்கூட முடியாதே என்று கடவுளிடம் எதுவும் ஆகாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக இரண்டு நாளில் சரியாகி வீடு வந்து விட்டார் என்றபோதுதான் நிம்மதியாயிற்று.

திரும்பி பிப்ரவரியில் வந்ததும் மறுநாளே கிளம்பி ராஜமுந்திரி
சென்றோம். அப்பா சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார். ..என்னப்பா இப்படி வெண்டிலேட்டர்க்கல்லாம் போய் பயமுறுத்திட்டியே... என்றபோது,.. அதைவிடு.அது முடிஞ்ச கதை. நீ லண்டன்லாம் பார்த்தியா? லண்டன் ரொம்ப அழகான நகரமாமே? ராணியைப் பார்த்தியா?...என்றெல்லாம் ஆர்வமாகக் கேட்டார்.

..ஏப்ரலில் திருச்சி வந்துவிடு. டிக்கெட் வாங்குகிறேன்.. என்றபோது..கண்டிப்பா வரேன். தாத்தாச்சாரி கடை மாம்பழம் சாப்பிடணும்.. என்றவருக்கு மார்ச் மாதம் மீண்டும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தம்பி சொன்னதும் மறுநாளே கிளம்பிச் சென்றோம்.

22 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தவர் உடல்நிலை மோசமாகி ICUவில் இருந்தபோது அசைவே இல்லை. ஏப்ரல் 5ம்தேதி காலை எங்கள் திருமண
நாளானதால் நானும் என் கணவரும் கோயிலுக்கு சென்று விட்டு அப்பாவைப் பார்த்து வர ஆஸ்பத்திரி போனபோது டாக்டர்..நிலைமை மோசமாகி விட்டது..என்று சொன்னார். எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னைத் தாலாட்டி சீராட்டி பாராட்டி வளர்த்து திருமணத்தின்போது கண்கலங்கிய அப்பா இப்படி கண் திறக்காமல் இருக்கிறாரே என்ற வருத்தத்தில் அவரைத் தொட்டு அப்பா..அப்பா என்று கூப்பிட்டதும் சடாரென்று திரும்பி சில நிமிடம் என்னைப் பார்த்தவர் அப்படியே கண்ணை மூடிக் கொண்டார்.

அன்று மதியம் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்தபோது கதறி விட்டேன். அவருடன் இருந்து அவருக்கு பணிவிடை செய்தது என்னால் மறக்க முடியாத நாட்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புவரை என்னுடன் பழங்கதையெல்லாம் பேசியவர் போய்விடுவார் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை இன்றும் சிறப்பாக  வாழவைப்பதை உணர்கிறேன்.
அப்பா ஒரு சம்பவம் அல்ல...ஒரு சரித்திரம்!
அப்பாவின் அன்பு சிறுதுளி அல்ல..பெரும் சமுத்திரம்!

அப்பாவின் நினைவுகளை எழுதச் சொல்லி தலைப்பு கொடுத்த மாம்ஸ்பிரஸ்
ஸோவுக்கு நன்றி🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

என் இனிய தோழி!