அந்த நாள் நினைவுகள்



மரத்தடியில் பாடம் படித்தோம்!


அந்த நாள் நினைவுகள் எத்தனை..எத்தனை! சேலத்தில் முதல் வகுப்பு சேர்ந்து சில மாதங்களில் என் அப்பாவுக்கு சென்னை மாறுதல். நான் முதல் வகுப்பில்  நன்கு படித்ததால் இரண்டாம் வகுப்பு என்று அந்த தலைமை ஆசிரியர் எழுதிக் கொடுத்ததால் நான் சென்னையில் நுங்கம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.

அது பெண்களும் பையன்களும் இணைந்து படித்த பள்ளி. அறுபதுகளில் பெண் ஆசிரியைகள் மிகக் குறைவு. ஆண் ஆசிரியர்களே அதிகம். அப்பொழுதெல்லாம் எல்லா வகுப்பிலும் ஆசிரியர்கள் சரியாக படிக்கா விட்டாலோ, மதிப்பெண் வாங்கா விட்டாலோ ஒரு குச்சியால் அடிப்பதுண்டு. மாணவிகளை விட மாணவர்கள்தான் நிறைய அடி வாங்குவதோடு, சிவந்த அவர்களின் கைகளைப் பார்த்து எங்களுக்கே பாவமாக இருக்கும். 'என் பிள்ளையை ஏன் அடித்தீர்கள்?' என்று ஆசிரியர்களுடன் சண்டை போட்ட பெற்றோரும் உண்டு!

நான்காம் வகுப்பு படித்தபோது சில பையன்களுடன் நாங்கள் பெண்கள் நட்பாகப் பழகிய துண்டு. ஒரு பையன் அவன் அப்பா ஏதோ நெருப்புப் பெட்டி மேல் ஒட்டும் அழகான கலர்ப் படங்களை தயாரிப்பதாக சொல்லி, எனக்கு மட்டும் தருவதை பல பெண்கள் பொறாமையோடு பார்ப்பார்கள்! எனக்கு பெருமை! அதை பொக்கிஷம் போல் பல நாட்கள் வைத்திருந்தேன்! என் அம்மா அடிக்கடி சொல்வார் 'பசங்களோடு பழகாதே' என்று!

வகுப்பில் ஒருநாள் நாங்கள் ஒரு சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஒரு பெண் 'அதுல நடிச்சது சாவித்திரிடி' என்று சொல்ல, சரியாக ஆசிரியர் வகுப்பில் நுழைய, 'யாரு இங்க சாவியைத் திருடியது?' என்று கேட்க நாங்கள் பயந்து விட்டோம். பிறகு அவர் சிரித்துக் கொண்டே 'கிளாஸ்ல சினிமா கதையெல்லாம் பேசக் கூடாது' என்றார்!

பள்ளி வாசலில் எலந்தப் பழம், கொருக்காபுளிக் காய், நாகப்பழம், வேக வைத்த மரவள்ளிக் கிழங்கு, கலர் ஐஸ் எல்லாம் விற்கும். அவ்வப்போது 2பைசா, 3 பைசாக்கு (ஐந்து பைசாக்கு மேல் அப்பல்லாம் வீட்டில் கொடுக்க மாட்டார்கள்!) வாங்கி சாப்பிடுவோம்! அந்த சந்தோஷ நாட்களும் அவற்றின் ருசியும் இன்றைய நட்சத்திர ஹோட்டலில் கூட இல்லை என்பேன்.அவை இப்பொழுது கிடைத்தாலும் அன்று பயமின்றி சாப்பிட்டது போல் இப்பல்லாம் சாப்பிட முடிவதில்லை!

நான் படிக்கும் போதே அப்பள்ளி நடுநிலைப் பள்ளியாக மாறியது. ஆறாவது தேர்ச்சி பெற்றதும் என் அப்பா என்னை அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் சேர்க்க TC  வாங்கச் சென்ற போது தலைமை ஆசிரியர் நான் நன்றாகப் படித்ததால் என்னை அப்பள்ளியிலேயே படிக்க வைக்கக் கூறினார். ஆனால் என் பெற்றோர் Co-education பள்ளியில் நான் படிப்பதை விரும்பவில்லை.

ஆறாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை ஒரே பள்ளி. அங்கும் நான் முதலிடத்தைத் தவற விட்டதில்லை. அங்கு எந்த விழா நடந்தாலும் நடனங்களுக்கு நான்தான் பாட்டு பாடுவேன்!

நான் சேர்ந்த புதிதில் என் பள்ளிக்கூட வகுப்புகள் நடந்தது மரத்தடியில்! எங்கள் பள்ளி கட்டிடம் இல்லாததால் ஒரு பெரிய குடித்தனப் பகுதியில் சின்னச் சின்ன வீடுகளுக்கு நடுவில் 10,11 வகுப்புகளுக்கு மட்டுமே கிளாஸ் ரூம்கள். மற்ற வகுப்புகள் வெளியே மரத்தடியில்!

மழை வந்தால் எல்லோரும் அந்த வகுப்புகளில் நின்று விட்டு மழை நின்றதும் வீட்டுக்கு வர வேண்டியதுதான்!மழை நாளில் பல நாள் லீவுதான்! மற்ற நாட்களில் மரத்தின் மேலிருக்கும் காகங்கள் எங்கள் மேல் அசிங்கம் செய்து விட்டால் அருவருப்பாக இருக்கும்! நல்ல வேளையாக எட்டாம் வகுப்பு முதல் பள்ளி கட்டிடம் கட்டி பள்ளி மாறி விட்டதால் பிழைத்தோம்!

சிவாஜியுடன் என் தங்கை படத்தில் நடித்த ஜெயகௌசல்யா எங்கள் பள்ளியில் படித்தவர் என்று பெருமையாக சொல்லிக் கொள்வோம்! 10ம் வகுப்பு படித்த சமயம். ஆண்டு இறுதியில் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு நாங்கள் party கொடுத்து சீனியர்களுக்கு bye..bye..சொல்லி அனுப்புவது வழக்கம்! அவர்கள் தம் அனுபவங்கள், ஆசிரியைகளைப் பற்றி   பேசுவார்கள்.

அந்த முறை ஒரு மாணவி எங்கள் ஆசிரியைகளின் குணங்கள் மற்றும் அவர்கள் நடப்பது பேசுவது பற்றியெல்லாம் நடித்தும், மிமிக்ரி செய்தும் காட்டினாள். ஆசிரியைகளும் நாங்களும் ரசித்து சிரித்து மகிழ்ந்தோம்! ஒரு ஆசிரியை நடக்கும்போது இரு பாதங்களையும் இணைத்து வைத்து குனிந்தவாறே நடப்பார். மிக அமைதியானவர். அதிகம் பேசமாட்டார்.

மறுநாள் முதல் அந்த ஆசிரியை தன் நடையையே மாற்றிவிட்டார். அவர் மிக கஷ்டப்பட்டு நடையை மாற்றி நடப்பது புரிந்தது. எல்லா ஆசிரியைகளும் அந்த நிகழ்ச்சியை sportive ஆக எடுத்துக் கொள்ள அந்த ஆசிரியை மட்டும் தன்னைப் பரிகசிப்பது போல உணர்ந்து விட்டார் போலும். பள்ளி நாட்களை நினைக்கும்போது இந்த சம்பவம் என்னால்  மறக்க முடியாதது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)