தலை தீபாவளியின் ஹீரோ!

தீபாவளி என்றாலே மனம் குதூகலிப்பதை மறுக்க முடியாது. அதிலும் தலைதீபாவளி என்றால் ஸ்பெஷல் ஆச்சே! நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டாலும் இன்றும் அந்த தீபாவளி நினைவுகள் மனதில் சுழல்வதை மற(று)க்க முடியுமா! என் தலை தீபாவளி ஒரு மறக்க முடியாத தீபாவளி.


என் புகுந்த வீடு திருச்சி. என் கணவர் அங்கிருந்த வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் பெற்றோர் முசிறியில் இருந்தார்கள். முசிறி சிறிய , இயற்கை அழகுகள் நிறைந்த  கிராமம்.அந்தணர்கள் மட்டுமே  இருந்த  அந்தக்காலத்து அக்ரஹாரம். நல்ல அகலமான தெரு. அகண்ட காவேரி ஓடும் அழகான ஊர்.

என் அப்பா கரூர் வைஸ்யா வங்கியில் மேனேஜராகப் பணி புரிந்தார். பெரிய விசாலமான அந்தக்கால வீடுகள்.  நாங்கள் குடியிருந்த வீடும் அச்சு அசலான அக்ரஹாரத்து வீடு. வாசலில் பெரிய திண்ணை, ரேழி, கூடம், தாழ்வாரம், கிணறு, நீண்ட கொல்லைப்புறம் என்று பெரிய வீடு. அந்த வீட்டில்தான் என் திருமணம் நடந்தது.

திருச்சியிலிருந்து முசிறி ஒருமணி நேரப் பயணம்.  தீபாவளிக்கு முதல்நாள் காலை எங்களை அழைத்துச் செல்ல என் தம்பி வந்திருந்தான்.  பஸ்ஸிலிருந்து இறங்கியவன், தான் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லி விரைந்து சென்றுவிட்டான். 'எதற்கு இப்படி ஓடுகிறான்' என்று எனக்கு ஆச்சரியம்! நாங்கள் வீட்டை நெருங்கும்போது பட்டாசு, வாணம் என்று என் மூன்று தம்பிகளுமாக வெடிக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு ஒரே பட்டாசு சத்தம். எல்லா வீட்டிலிருந்தவர்களும் வெளியில் வந்து பார்க்க, எனக்கோ பெருமை தாங்க

வில்லை. எப்படிப்பட்ட வரவேற்பு மாப்பிள்ளைக்கு!

என் கணவர் மச்சினன்களுடன் வெடிக்க ஏகப்பட்ட வெடி, ராக்கெட் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அன்று இரவு ராக்கெட் வைக்க பாட்டிலெல்லாம் ரெடி செய்து கொண்டு வெடிக்க ஆரம்பித்தார்கள். அந்த நாட்களிலெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் இரவும் வெடிக்கும் வழக்கம் உண்டே. எனக்கு எப்பொழுதும் பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் கிடையாது. நானும், என் அம்மாவும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் வீட்டில் நிறைய பட்டாசு இருப்பதைப் பார்த்து பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டில் இருந்த என் தம்பிகளின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள உற்சாகம் அதிகரித்தது. ஆளுக்கு ஒரு பாட்டிலில் ராக்கெட்டை வைத்து, சற்று இடைவெளி விட்டு நின்று , சேர்ந்து பற்றவைத்தார்கள். ஒவ்வொன்று ஒவ்வொரு திசையில் போக, அதிக உயரம் செல்லாத ராக்கெட் ஒன்று நேராக எங்கள் வீட்டு எதிரில் இருந்த தோட்டத்தில் போய் விழுந்து, பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது. வெளியில் இருந்த முள்வேலி காய்ந்து இருந்ததால் நிமிடத்தில் நெருப்பு சரசரவென்று பெரிதாக எரிய ஆரம்பித்து விட்டது.

முள்வேலியைத் தாண்டிச் செல்ல தயங்கியபடி  எல்லோரும் விலகி நிற்க என் கணவர் சட்டென்று பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் வேலியைத் தாண்டிச் சென்று நெருப்பில் கொட்டினார். என் அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்தார்கள். அத்தனை வாளித் தண்ணீரும் கொட்டிய பின் கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கு பிறகே நெருப்பு அணைந்தது.

அவசரமாக ஓடிய என் கணவர் காலில் செருப்பு போட்டுக் கொள்ளாமல் சென்றுவிட்டார். கால் முழுதும் வேலி கிழித்து காலில் முள் குத்தி நடக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து விட்டார். எனக்கோ அழுகையே வந்து விட்டது. முழங்கால் வரை முள் கீற்றி ஒரே ரத்தம். மாப்பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று என் அப்பா மிகவும் கவலையாகி விட்டார். காலைத் துடைத்து மருந்து போட்டு விட்டேன்.

தெருவில் இருந்தவர்கள் வந்து விசாரித்ததோடு, "வெறும்காலோடு போய் முள்ளைக் கூட கவனிக்காமல் தண்ணீர் கொட்டினாரே. உன் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர். சமயத்தில தன்னைப் பத்தி நினைக்காம வேகமா ஓடினாரே. நல்லவேளை..கொஞ்சம் தாமதிச்சிருந்தாலும் தோட்டம் முழுக்க நெருப்பு பிடிச்சிருக்கும்" என்று அவரைப் பாராட்டியபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!

'அட..சாதுவான இவருக்குள் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா' என்று ஆச்சரியமும், நல்ல மனிதர் என்று மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

மறுநாள் தீபாவளி விசாரிக்க வந்தவர்கள் எல்லாரும் எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் வீரம் பற்றி புகழ்ந்து என்னவரை ஹீரோவாக்கி விட்டார்கள்!

பாசத்தோடும்,  பெருமையோடும் நான்  அவரைப்  பார்க்க, காதலோடும், கனிவோடும் அவர் என்னைப் பார்க்க அந்த தலைதீபாவளி எங்களால் என்றும் மறக்கமுடியாத தலைசிறந்த தீபாவளியாகிற்று! வருடங்கள் கடந்தாலும் எங்கள் காதலும், பாசமும் அன்று போன்றே உள்ளது!

சின்ன வயதில் பெற்றோர், உடன்பிறந்தவர்களோடு அம்மா செய்யும் பட்சணங்களோடு உல்லாச தீபாவளி! திருமணத்திற்குப் பின் கணவர், குழந்தைகளுடன் உற்சாக தீபாவளி! இப்பொழுது பிள்ளை, மாட்டுப் பெண்,பேரக் குழந்தைகளுடன் சந்தோஷ தீபாவளி!

அன்பு  தோழிகளே! அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)