இடுகைகள்

6.கைப்பை

படம்
  என் அப்பா அலுவலகம் செல்லும் வரை ஒரு கைப்பை எடுத்துச் செல்வார். அதில்தான் அலுவலக விஷயங்கள் பர்ஸ் மதிய சாப்பாடு அத்தனையும் அழகாக எடுத்துச் செல்வார். ஓய்வு பெற்ற பின்பும் தனக்கு வேண்டிய முக்கியமான ஃபைல்களை அதில்தான் வைத்திருந்தார்.  அப்பாவின் அந்த ஒழுங்கும், சுத்தமும், எதையும் அதனதன் இடத்தில் சரியானபடி வைக்கும் குணமும் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயங்கள்!

7.பர்ஸ்

படம்
எனக்கு தெரிந்து என் அப்பா மூன்றோ அல்லது நான்கு பர்ஸ்தான் உபயோகித்திருப்பார் என நினைக்கிறேன். எளிதில் பர்ஸை மாற்ற மாட்டார். ஒரு வசதியான உறுதியான பர்ஸைத்தான் வாங்குவார்! அதில் ரூபாய் நோட்டுக்கள் சில்லறைகளைத் தனித்தனியாக எளிதில் எடுக்கும்படி வைத்துக் கொள்வார். பல நேரம் வேட்டியை கட்டி சொருகும் இடத்தில் பர்ஸை சுற்றி அதை இறுக்கமாக இடுப்பில் சொருகிக் கொண்டு மேலே சட்டை போடுவதால் எளிதில் கீழே விழாது..யாரும் பர்ஸைத் திருடவும் முடியாது என்பார்! அப்பாவின் திறமைகள் இப்படி பலப்பல!

8.கடிகாரம்

படம்
தினமும் காலை அலாரம் வைத்திருந்தாலும் அப்பா அதற்கு முன்பே எழுந்து விடுவார். பரீட்சை நேரங்களில் காலை நான்கு மணிக்கு அப்பா அலாரம் வைத்து எழுப்ப, அம்மா தேநீருடன் நின்றிருப்பார்.  அன்று ஆரம்பித்த இந்த விடிகாலை எழும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. மிக்க நன்றி அப்பா!

9. சுத்தியல்

படம்
  அப்பா சில ஆயுதங்களை மிக பத்திரமாக எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பார்.கத்தி கத்தரிக்கோல் சுத்தியல் ஆணி போன்ற எல்லா ஆயுதங்களும் அப்பா வசம் உண்டு! எதில் கோளாறு வந்தாலும் அதை தன் ஆயுதங்களை வைத்தே சரி செய்யும் திறமை அப்பாவுக்கு உண்டு! நல நேரங்களில் ஒழுகும் குழாயையோ, சரியாக எரியாத அடுப்பையோ மிக சுலபமாக அப்பா சரி செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். என் அப்பாவின் திறமை யாருக்கு உண்டு என்று இறுமாந்த தருணங்கள் அவை!

10.பரிசு..கிஃப்ட்

படம்
  ஒருமுறை அப்பாவுக்கு...அப்பா இன்னிக்கு தந்தையர் தினம். இந்தா உனக்கு கிஃப்ட்...என்று ஒரு வேட்டி சட்டை கொடுத்து நமஸ்கரித்தேன். அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி...அட அப்பாக்கள் தினமெல்லாம் உண்டா? எனக்கு தெரியாதே...என்றவர்,  ...எனக்கு நீயே ஒரு கிஃப்ட்தான். தீர்க்காயுசா இரு.. என்றவர் உடனே வேட்டியைப்  பிரித்து கட்டிக் கொண்டு சட்டையைப் போட்டுக் காட்டினார். அதற்கடுத்த வருடம் தந்தையர் தினத்துக்கு முன்பே அப்பா மறைந்து விட்டார். 

இசை

படம்
இசையில் மயங்காத மனிதரும் உண்டோ? தன்னையே மறக்கச் செய்வது இசை! இதழ்களின் இனிமையான உச்சரிப்பு  இசை! மனம் முழுதும்  நிறைந்து இன்பம் தரும்  இசை! தாலாட்டில் குழந்தையை மயங்க வைக்கும் இசை! பிறப்பு முதல் இறப்பு வரை வி தவிதமான இசை! இறைவன் படைத்த அதியங்களில் ஒன்று  இசை!

11.கடிதம்

படம்
அப்பாவுக்கு ஒரு கடிதம் அப்பா..உங்கள் அன்பு கடல் போன்றது.. வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். அப்பா..உங்கள் அன்பை விட சிறந்த அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை!. அப்பா..உங்களுக்கும், கடவுளுக்கும் சின்ன வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்! உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை! அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த அன்பும் இந்த உலகில் இல்லை! அப்பா..உங்களை வணங்குகிறேன்..உங்கள் ஆசியை வேண்டு கிறேன்..என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்!