சிங்கார சிங்கப்பூரில்ஜோடி ராதாஜோடிப்புறாவாக!!




என் ஜோடி..என் இனிய தோழி #ராதாநரசிம்மன்


சிங்கப்பூர் என்றதுமே என் மனம் குதூகலிக்கிறது. என் மகன் அங்கு வேலையில் இருந்தபோது ஏழெட்டு முறை போய் பல இடங்களுக்கும் சென்றதுண்டு. சிங்கப்பூரின் அழகும் தெருக்களின் சுத்தமும் அங்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளும் முதன்முறை
பார்த்தபோதே என்னைக் கவர்ந்தவை. அவற்றின் செயல்பாடும்  அரசாங்கத்தின் ஆணைகளை மதிக்கும் மக்களும் என்னை வியப்படைய வைத்த விஷயங்கள்.

சிங்கப்பூர் என்பதற்கு தமிழில் சிஙகத்தின் ஊர் என்பதோடு, மலாய் மொழியில் சிங்க என்றால் (சிங்கம்) புரா என்றால் (பூர்) இணைந்து சிங்கப்பூர் ஆயிற்று. சீனர்கள் வாழும் இடம் சைனா டவுன், இந்தியர்கள் வாழும் இடம் லிட்டில் இந்தியா அழைக்கப்படுகிறது.

நல்ல நாகரிகத்தினைக் கொண்ட மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் நடைபாதையில் வசிப்பவர்களோ, பிச்சைக் காரர்களோ கிடையாது. சாலைகள் படு சுத்தம்.. கழிவுநீர் கண்ணில் காண முடியாது!

தண்ணீர், மின்சாரத் தட்டுப்பாடு  கிடையாது. மலேசியாவிலிருந்து தண்ணீர் விநியோகம் ஆனாலும் எந்தச் சிக்கலை வைத்தும் தண்ணீர் தர மறுப்பதில்லை மலேசியா!

நடிகர்கள், திரைப்படங்கள் உண்டு. ஆனால், விளம்பரத் தட்டி இல்லை! தமிழ்ப் படங்களும் வரும். சுவர்களில் சினிமா மற்றும் எந்த  விளம்பரத்தையும் பார்க்க முடியாது. எதிலும் ஒழுங்கு, எங்கும் தூய்மை!

சட்டத்தை மதித்து, சாலை விதிகளைப் பின்பற்றுகின்
றனர்.  பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. தெரியாமல் சாலையில் குப்பைகளைப் போட்டாலும் 500 டாலர் அபராதம் உண்டு!.  பெற்றோர்கள் கூடக் குழந்தைகளை தண்டிக்கக் கூடாது! . இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. வலிமையான ராணுவம் இந்நாட்டின் சிறப்பு!

மற்ற நாடுகள் போலன்றி இங்கு தமிழும் எங்கும் பேச முடிவதால் நம்மை சிங்கப்பூர் ஈர்க்கிறது! அத்தனை இந்து தெய்வங்களுக்கும் அழகான ஆலயங்கள் நிறைய உண்டு.புத்தரும் உண்டு. புனித ஏசுவுக்கும், மனிதம் நிறைந்த முகமதுவுக்கும் ஆலயங்கள் உண்டு. அத்தனையும் படு சுத்தம்.


ஸ்ரீ ராமர் கோயில்

முருகன், மாரியம்மன், கணபதி என்று அனைத்து ஆலய இறைவனின் அழகும் அலங்காரமும் கண்களைக் கவரும்! இந்தியர் மட்டுமன்றி சீனர்கள், மலேசியர்கள் மற்றும் பல வெளிநாட்டினரும் பக்தியோடு கண்மூடி இறை வணக்கம் செய்வதைக் காணலாம். உண்டியலைப் பார்த்ததில்லை! இங்குள்ள ஆலயங்களில் முதியோர் வசதிக்காக கழிவறைகள் உண்டு. பிரசாத விநியோகம் நாள் முழுவதும் உண்டு!

சுற்றிப் பார்க்கவென்றே உருவாக்கப்பட்ட நகரம் சிங்கை!  இது தோட்ட நகரம் எனப்படுகிறது. Garden by the bayயில் பலவித தாவரங்களையும், நீர் ஊற்று
களையும் மாலை விளக்கொளியில் காணக் கண்கவர் காட்சியாக இருக்கும்!

இங்குள்ள மிருகக் காட்சி சாலை மிகப் பெரிது! இங்கு பலவித மிருகங்கள் உண்டு! வெள்ளைப்புலி, விதவிதமான பாம்புகள், நீர்வாழ் மிருகங்கள் பல உண்டு. நாங்கள் அங்கு  என் பேத்தியின் பிறந்தநாளை கொரில்லாவுடன் Breakfast சாப்பிட்டு  கொண்டாடியது
மறக்க முடியாதது!!


சென்டோஸாவில் இல்லாததே கிடையாது! சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள்! இங்கு காட்டப்படும் லேசர் ஷோ உலகப் பிரசித்தம்! குழந்தைகள் முதல் முதியோர் வரை லயித்து ரசித்து அனுபவிக்கலாம்! Bird parkல் உலகின் அத்தனை பறவைகளும் உண்டு!


யூனிவர்சல் ஸ்டுடியோ (Universal Studio) சிங்கப்பூரின் மிகப்பெரிய attraction! குழந்தைகளுக்கான Shrek, Minion, Puss in boots போன்ற பல ஷோக்கள்...இளம் வயதினருக்கான Adventure Rides என்று நிறைய்....ய! Madagascar ride, ஜுராசிக் பார்க் ரைட் மறக்க முடியாதது!


ஷாப்பிங்..அது இல்லாமலா! சைனா டவுன், லிட்டில் இண்டியா, ஆர்ச்சர்ட் ரோட், வைவோ சிட்டி, கிளார்க் க்வே, புகிஸ் மார்க்கெட் போன்ற இடங்களில் பத்து டாலர் முதல் பல்லாயிரம் டாலர் வரை பொருட்கள் கிடைக்கும். லிட்டில் இண்டியாவின் முஸ்தபா சென்டரில் காய்கறிகள் முதற்கொண்டு அத்தனை பொருட்களும் நியாயமான விலையில் கிடைக்கும். சிறிய பேனா முதல் தங்க, வைர நகைகள் வரை அத்தனையும் வாங்கலாம்!

சிங்கப்பூரை சுற்றியுள்ள அழகான நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்! மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம்,கம்போடியா போன்ற பல நாடுகள் உண்டு.

மீண்டும் மீண்டும் நான் போக விரும்பும் நாடான சிங்கார சிங்கப்பூரை நான் பலமுறை சென்று தங்கி சுற்றிப் பார்த்து ரசித்ததை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு