அன்றும் இன்றும் அதே காதல்
7நாட்கள்..7தலைப்புகள்
#மறக்க முடியாத தேதி..19.2.1976
காதல்...இந்த வார்த்தையே அந்நாளில் மிக மோசமான உச்சரிக்கக் கூடாத வார்த்தை! படித்தது பெண்கள் பள்ளி.பள்ளியில் தோழிக
ளுடன் காதலைப் பற்றி ரகசியமாகவே பேசுவோம்! சினிமா பாடல்களில் காதல் என்ற வார்த்தை வந்தாலே அதை வீட்டில் பாட அனுமதி கிடையாது! காதல் பயத்தில் பெற்றோர் கல்லூரிக்குக் கூட அனுப்பவில்லை! அதனால் சினிமா காதலைப் பார்த்து ரசித்ததோடு சரி...காதல் செய்யவே வாய்ப்பில்லை😗
சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா என்று கண்ணால் பேசிய அந்தநாள் ஞாபகம் மனதில் வந்ததே! பத்தொன்பது வயதில் நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி19 அன்று சுபயோக சுபதினத்தில் என் கணவர் என்னைப் பெண் பார்க்க வந்தார். (அப்பொழுதெல்லாம் காதலர் தினம் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்திருந்தால் கூட அதைக் கொண்டாட வாய்ப்பு இருந்திருக்காது!) குனிந்த தலை நிமிராமல் பாட்டு பாடி என் பேச்சுத் திறனை ப்ரூஃப் பண்ணி யாச்சு!!
..பையனை நன்னா பார்த்துக்கோ..என்று சொல்ல சுற்றி பத்து பேர் இருக்கும்
போது உற்று உற்றா பார்க்க முடியும்! ஏதோ நான் கண்ணை உயர்த்திப் பார்க்க அவர் தாழ்த்திப் பார்க்க ஒரு விநாடி கண்கள் கலந்தபோது பிறந்ததுதான் காதலோ!
என் மாமா பக்கத்து அறையில் மூடியிருந்த சன்னல் கதவை லேசாகத் திறந்து என்னை மாப்பிள்ளையைப் பார்த்துக் கொள் என்றார். என்னை
விட கலராக, தலையில் நிறைய முடியுடன் (இப்போ தேடிக் கொண்டிருக்கிறேன்!) நல்லவராக இருப்பார் எனத் தோன்றியது!! 'தில்தில்தில்' மனதில் ஒரு 'தல்தல்தல்' காதல் வந்தது!!
நான் பார்க்கும்போது 'ஜன்னல் ஓரமாய் மின்னல் போல வந்தாய்' என்று அவரும் பார்க்க, அண்ணலும் நோக்கினார்..இவளும் நோக்கினேன்! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து கணநேரம் கனவுகள் வசமாயிற்று!
திருமணம் நிச்சயமாகி பத்திரிகை அடித்ததும் முதல் பத்திரிகையை எனக்கு அனுப்பியிருந்தார் என்னவர்! அதைத் தொடும்போதே ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றி இதுதான் காதல் என்று என்னைக் கிறங்க வைத்தது!
திருமணத்தின்போது அவர் என் கையைப் பிடித்த அழுத்தத்திலேயே புரிந்தது அவரது காதல்! அதன்பின் குழந்தைகள் பிறந்த பின்னும் எங்களுக்கு வயதானதே தவிர அன்பு குறையவில்லை! இருவருக்குள்ளும் புரிதல் இருந்ததால் போராளிகளாக மாறவில்லை!!
எங்களுக்கு எதிலும் ஒளிவு, மறைவு கிடையாது. எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுப்போம்.இன்று நாங்கள் தனிக்குடித்தனம் நடத்தும் இந்த நேரத்திலும், நான் செய்யும் அத்தனை வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் நல்ல துணைவர்!
எனக்கு சில சமயங்களில் கோபம் வந்து ஏதாவது சொன்னாலும் அதைக் கண்டு கொள்ளாத கண்ணாளர்! ..ராதே உனக்கு கோபம் ஆகாதடி.. என்று பாடி என்னைக் கொஞ்சி மயக்குபவர்!
'உங்களுக்கு என்மேல் கோபம் வரவில்லையா' என்றால், 'உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்ட நாள் முதல் உன் கோபத்தையும் சேர்த்து காதலிக்க ஆரம்பித்து விட்டேன். உன் கோபத்துக்கும் நான் அடிமை' என்று வஞ்சப் புகழ்ச்சி வசனம் பேசி என்னை சிரிக்க வைக்கும் சிங்காரக் காதலர்!
கண்கள் நோக கண்களால் ஒருவரை ஒருவர் நோக்குவதையே நோக்கமாகக் கொண்டு கண்களால் பேசிக் கொள்வது எங்களுக்கு கை(கண்)வந்த கலை!!
பெண் பார்த்த அன்று அண்ணல் நோக்கிய அந்த சில நிமிடங்கள் கண்கள் கலந்தபோது காதல் திருக்கோலம் கொண்டு, மன்மத பாணங்களால் ஆசையில் மனம் தடுமாற 'தொப்'பென்று சம்சார சாகரத்தில் விழுந்தவளை இன்றுவரை பாசத்துடன் கைதூக்கி, ஆசையுடன் அரவணைத்து, நேசத்துடன் காதலித்து 'உன் கண்ணால் என்னை அன்றே கட்டிவிட்டாயடி...உன் சின்னப் புன்னகையால் விழ வைத்தாயடி...உன் அன்புக்கு நான் அடிமை'என்று மோகித்து இன்றுவரை இறையருளுடன் நடக்கும் இனிய நாதமான, ரசனையான வாழ்க்கையே எங்கள் சுகமான தாம்பத்யம்!
கருத்துகள்
கருத்துரையிடுக