அம்மாவுடன் கோல நினைவுகள்




எங்கள்கருத்துஉங்கள்எழுத்து

கோலம் போடும்போது எனக்கு தினமும் நினைவில் வருபவர் என் அம்மா. எட்டு வயதிலிருந்து எனக்கு கோலம் போட சொல்லிக் கொடுத்தவர். அச்செடுத்தாற் போல் கோலம் போடுவது என் அம்மாவுக்கு கைவந்த கலை. காலை நான்கு மணிக்கு தானும் எழுந்து என்னையும் எழுப்பி வாசல் தெளித்து கோலத்தை தேர்வு செய்து கொடுத்து போடச் சொல்வார்.

எல்லாம் அந்தக்கால கோலங்கள்..பாகற்காய்,அவரைக்காய், கிருஷ்ணன் தொட்டில்,சீப்பு, ராட்டினம், பிச்சோடா, சந்தனக் கிண்ணம், புஷ்பகவிமானம் நாரத்தைசுருளை என்று! அந்நாளைய பெண்களுக்கு இவை தெரிந்திருக்கும்! என் அம்மா கோலம் போட்டு வைத்திருந்த நோட் இன்னும் என்னிடம் இருக்கிறது.


அம்மா கோலத்துடன்..

கடவுள் பெயர்களை மெல்லிய தகரத்தில் ஓட்டை போட்டு அவற்றை நான்கு பக்கம் மடித்து கடைகளில் விற்கும் அச்சு போல் அழகாகச் செய்வார். அவற்றைக் கொண்டு சுவாமியின் முன்பு அழகாகக் கோலம் போடுவார். அதைப் பார்த்து பாராட்டாதவர் இல்லை. நானும் இந்த முறையில்தான் போடுவேன்.

என் அம்மாவின் கோல நோட்டு

தன் சிறு வயதில் குடந்தை பக்தபுரித் தெருவில் தன் தங்கைகளுடன் சாலையை நிறைத்து கோலம் போட்ட கதைகளை அம்மா சொன்னால் கேட்க அலுக்காது!என் அம்மா என் சித்தியை விடிகாலை 3 மணிக்கு எழுப்பி துணைக்கு கூப்பிடுவாராம். சித்தியோ சோம்பலுடன் தூங்கிக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தி

ருப்பாராம்! ..எழுந்து வந்து கோலம் போடு. தூங்காதே..என்று என் அம்மா அதட்டுவாராம். சில சமயம் என் மாமாக்களும் துணை இருப்பதுண்டாம்! வாசலை நிறைத்து பெரிய பெரிய கோலங்களைப் போட, அந்தத் தெருவில் அனைவரும் வந்து பார்த்து பாராட்டுவார்களாம்!

ஒரு நாள் 3 மணி என்று நினைத்து இரவு ஒன்றேகால் மணிக்கே எழுந்து இருவரும் வாசல் தெளித்து கோலம் போட ஆரம்பித்து விட்டார்களாம். அந்தத் தெருவில் இருந்த மூளை சரியில்லாத ஒருவன் இவர்கள் பக்கத்தில் வந்து நின்று ஏதோ பேச இருவரும் பயத்தி அலறி அடித்துக் கொண்டு கோலமாவு டப்பாவைக் கீழே போட்டுவிட்டு கதவை தாள் போட்டுக் கொண்டு உள்ளே ஓடி விட்டார்களாம். அதற்குப் பின் நாலைந்து நாட்களுக்கு பின்பே  கோலம் போட ஆரம்பித்தார்களாம், நான்கு மணிக்கு மேல்!

அந்த நாட்களில் விதவிதமான கலர்ப் பொடிகள் கிடையாதாம். அதோடு என் அம்மாவுக்கு கலர்க் கோலங்கள் பிடிக்காது. யானை, பூனை,ஜோக்கர் இதெல்லாம் போட்டால் கமெண்டே வராது! டிராயிங் மாதிரி இருக்கு என்பார்! புள்ளிகளைக் கோணாமல் வைக்க வேண்டும். சரியில்லையென்றால் கலைத்து விட்டு சரியாக வைக்கச் சொல்வார்.

நேர்கோட்டுக் கோலங்களை சுலபமாகப் போடும் எனக்கு சிக்கு கோலங்கள் வரவே வராது. நேர்கோட்டுக் கோலங்கள் இரண்டு இழையில் போட வேண்டும். போடும் நேரம் அதிகமாகும். சிக்குக் கோலம் ஒரு இழையில் போடலாம். இப்படியெல்லாம் விதிகள் உண்டு!

ஒன்று முதல் 25 வரை தான் புள்ளி வைத்துக் கொடுத்து சிக்கு கோலம்  போடச் சொல்லி விட்டு உள்ளே வேலை செய்யப் போய் விடுவார். எனக்கோ நாலு இழை போடுவதற்குள் கோலம் நிஜமாகவே சிக்கிக் கொண்டு, புள்ளியை அழித்து வைத்து என்று அந்த இடமே கேவலமாகி விடும். பயந்து கொண்டே அம்மாவைக் கூப்பிடுவேன்.

'இப்படி சுலபமாகப் போட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே நிமிஷமாக அந்தக் கோலத்தை முடித்து விடுவார். இப்பவும் சிக்குக் கோலம் மட்டும் என் கைக்குள் சிக்காமலே இருக்கிறது!

அம்மாவுக்கு பிடித்த கோலம்..நான் போட்டது..

புள்ளி வைக்காமல் போடும் கோலங்களில் என் அம்மா மாதிரி நானும் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். என் அம்மாவின் கோல ஆர்வம் அவரது அறுபது வயதில் தினமலர் கோலப் போட்டியில் என் அம்மாவுக்கு பிடித்த பெரிய கோலத்தைப் போட்டு பரிசு வாங்கியதைப் பெருமையாகச் சொல்வார்!

நானும் இதழ்களில் வைத்த கோலப் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றதுண்டு. இப்பொழுதெல்லாம் நான் மார்கழியில் கலம்காரி, வர்லி, சன்ஸ்கார் பாரதி போன்ற ரங்கோலி வகைக் கோலங்களை  தினமும்

விதவிதமாய்  போடுவேன்.

இப்பொழுதெல்லாம் தினுசு தினுசாகக் கோலங்கள் போடும் முறைகள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் கோலம் போடுபவரும் இல்லை. வீடுகளில் போட இடமும் இல்லை! 'கோலம் போடுவதால் டென்ஷன் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம்' என்று சமீபத்தில் படித்தேன்.

அழகான வளைக்கரங்கள் தான் அழகான கோலங்களைப் போட முடியும் என்பதை போட்டியாக வைத்து கோலத் திறமைகளை வெளிக் கொணர்ந்து நிறைய வார இதழ், மாத இதழ், தினசரிகளில் போட்டிகளை நடத்தி பெண்களின் திறமையை வெளிக் கொணர்வது சிறப்பான செயல்.

அன்புக் கோலம், ஆனந்தக் கோலம், உன்னதக் கோலம், அழுகைக் கோலம், ஆக்ரோஷக் கோலம்,  இளமைக் கோலம்,

திருமணக் கோலம், முதுமைக் கோலம், விதவைக் கோலம் என்று இப்படி எத்தனைக் கோலங்கள் மனிதருள்!

கோலம் மட்டுமன்றி  வாழ்க்கையை வாழ வேண்டிய சிறப்பான முறைகளை எனக்கு எடுத்துக் கூறி இன்று நான் ஒரு நல்ல மனைவியாகவும், சிறப்பான தாயாகவும்,  மனிதாபிமானமுள்ள மனுஷியாகவும் வாழ வழிகாட்டிய என் அம்மாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏

என் பேத்தி ப்ரியங்கா

என் மகளும் மிக அருமையாகக் கோலம் போடுவாள்.தீம் கோலமெல்லாம் போட்டு அசத்துவாள்! என் பேத்தி பிரயங்காவிற்கு கோலம் போட மிகவும் விருப்பம். அழகாகவும் போடுவாள்.

என் பெண் போட்டது..

மனதின் அழுத்தம் போக்கவும், குனிந்து நிமிர்ந்து போடுவதால் நல்ல உடற்பயிற்சியாகவும், மனம் ஒருமித்து போடுவதால் யோகா போலவும், அழகாகப் போடும் கோலத்தைப் பார்க்கும்போது மன மகிழ்ச்சியும் தரும் கோலக் கலையை அழியாமல் காப்பாற்ற வேண்டியது பெண்களின் கடமை !


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு