மாமியாரின் மறுபிறப்போ!
என்னை என் அம்மாவோடு பார்ப்பவர்கள் ..அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாய்..என்பார்கள்! சிலர் ..நீ அப்படியே அப்பா ஜாடை.. என்பார்கள்! ஆனால் எனக்கு என் அப்பா ஜாடையே அதிகம் தெரியும்.
என் கண், மூக்கு, காது எல்லாம் என் அப்பா மாதிரி என்று என் அம்மாவே சொல்வார்.அப்பா ஜாடையில் பெண் இருந்தால் மிக அதிர்ஷ்டமாக இருப்பாள்' என்று சொல்வார். அது என்னவோ நிஜம்தான்! ஆக அப்பாவுக்கு நெருக்கமானவர்களுக்கு அவரைப் போலவும் அம்மாவின் உறவினர்களுக்கு அம்மா ஜாடையும் தெரியுமோ!
என் குழந்தைகள் என் கணவரின் ஜாடைதான். ஒரு மகனுக்கு மட்டுமே என் சாயல் கொஞ்சம் உண்டு. என்னைப் போல யாரும் இல்லையே என்பது எனக்கு கொஞ்சம் வருத்தமே! என் பெரிய பிள்ளையும், பெண்ணும் அப்படியே என் கணவரைப் போலவே இருப்பார்கள்.
ஜாடை இருப்பது போலவே குணங்களும் நம் முன்னோரைப் போலவே இருக்கும் என்பதும் உண்மைதான். என் அப்பாவுக்கு சட்டென்று கோபம் வரும். என் தாத்தா அப்படி இருப்பாராம்!
என் அம்மா மிக திருத்தமாக அழகாக அலங்காரம் செய்து கொள்வார். நானும் அப்படியே! என் பெண்ணுக்கும் அதே ஆசை! அத்துடன் என் பேத்தியும் அழகழகாக அலங்காரம் செய்து கொள்வாள்! இதுதான் வழிவழியாக வரும் ஜீன் போலும்!
என் கணவரும் பிள்ளைகளும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான அபிப்ராயம் கொண்டிருப்பார்கள். என் மூத்த பிள்ளை அப்படியே என் கணவரின் மறு அவதாரம்.
எனக்கு சில விஷயங்களில் சந்தேகம் வந்து..இப்படி செய்ய வேண்டாமே..என்பேன்.என் பெண்ணுக்கு மட்டுமே என்னைப் போன்ற எண்ணங்கள் உண்டு. அந்த காரியம் சரியாக நடக்காத போது என் மருமகள்..எப்படிம்மா அம்மாவும் பெண்ணும் ஒரே மாதிரி யோசிக்கிறீர்கள்?..என்பாள்...அதுதான் ஒரே ஜீன்..என்பேன்!
சின்ன வயதில் எனக்கு நீண்ட தலைமுடி உண்டு. வெளியில் சொல்லும் போது எனக்கு பின்னலை முன்னால் விட்டுக் கொள்வேன். என் அம்மாவுக்கு அது பிடிக்காததால் அனுமதிக்க மாட்டார்.
என் தம்பியின் மகனுக்கும் அப்படியே. அவன் அம்மா பின்னலை முன் பக்கம் போட்டாலே பிடிக்காது. இன்னும் பல விஷயங்களில் என் அம்மா மாதிரியே என்பாள்.
என் அம்மாவைப் போல் நான் நன்றாக சமைப்பேன். என் கணவர் அவர் தாத்தா போல நண்பர்களை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு விடுவார்.நான் கேட்டால் 'என் தாத்தா அந்த காலத்தில் நூறு வருடங்களுக்கு முன்பு தெருவில் போகும் வழிப்போக்கர்கள், சன்யாசிகளைக் கூப்பிட்டு மனைவியை சமைத்துப் போடச் சொல்வாராம். நான் நண்பர்களைத்தானே கூப்பிடுகிறேன்' என்பார். இது எப்படி?!
என் மாமியார் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இறந்தார் . அவருக்கு என் கணவர் ஒரே மகன். அவரிடம் மிகவும் பாசம். அவர் ஒரு வருடம் படுத்த படுக்கையாய் இருந்தபோது அடிக்கடி மகனைக் கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்.
அவர் இறந்ததும் நாங்கள் 'எப்படிதான் மகனை விட்டுப் போனாரோ' என்று பேசிக் கொள்வோம்! பாசமுள்ள பெரியவர்கள் இறந்த கொஞ்ச நாளிலேயே தன் பெண், பிள்ளைகளுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்கள் என்று சொல்வதுண்டு.
அது எங்கள் வீட்டில் நிஜமானது. என் மூன்று மருமகள்களும் அடுத்தடுத்து கர்ப்பமானது வேடிக்கையாக இருந்தது. முதல் பேத்தி மாமியார் இறந்த பதினோராம் மாதமும், அடுத்த இரண்டு பேத்திகள் மூன்று மூன்று மாத வித்யாசத்திலும் பிறந்தனர்.மாமியார் மூன்று பேராக வந்து விட்டாரோ என்பேன்!
முதலில் பிறந்த பேத்திக்கு என் கணவரை மிகவும் பிடிக்கும். தாத்தாவிடம்தான் சாப்பிடுவாள்..தூங்குவாள்! அவரை அதிகாரமாக என் மாமியாரைப் போன்றே பாலு என்று கூப்பிடுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இரண்டு வயதுவரை அப்படித்தான் கூப்பிட்டாள். அவளது பிடிவாதம் எனக்கு என் மாமியாரை நினைவுபடுத்தும்.
இப்பவும் அடிக்கடி ஃபோனில் தாத்தாவுடன் பேசுவாள். 'தாத்தா..எப்போ இங்க வருவ?' என்பாள். இந்த அனுபவம் மறைந்த பெரியவர்கள் திரும்ப வருவார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக