என் முடிவு என் கையில்

 

பானுவுக்கும் சதீஷுக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சதீஷ் அவன் அம்மா சரஸ்வதிக்கு ஒரே பிள்ளை. சாந்தி, சங்கரி என்று இரண்டு அக்காக்கள். அவனது இரண்டு வயதிலேயே அவன் அப்பா இறந்து விட்டதால் அவன் அம்மாவுக்கு அவனிடம் பாசம் அதிகம். அவன் எது செய்தாலும் தன் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவள்.


இரண்டு அக்காக்களும் உள்ளூர்தான். வேலைக்கு செல்லவில்லை. நினைத்த போதெல்லாம் அம்மா வீட்டுக்கு வந்து டேரா போட்டு விடுவார்கள்! திருமணத்திற்கு பின் தம்பி மாறி விடுவானோ என்ற பயத்தில் அம்மாவுக்கு தூபம் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

பல பெண்களைப் பார்த்து ஒவ்வொன்றிலும் ஒரு குறை சொல்லி தடுத்துக் கொண்டிருந்தார்கள். பானுவைப் பார்த்தவுடன் சதீஷுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அவள் ஒரு பெரிய கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிந்து கொண்டிருந்தாள். நல்ல சம்பளம். அவள் பேசிய, நடந்து கொண்ட விதம் எதையும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வாள் என்று தோன்றியது.

ஒரு நல்ல நாளில் பானு திருமதி சதீஷ் ஆனாள். கூட்டுக் குடும்பத்தில் இருந்த அனுபவத்தால் அவள் வீட்டு வேலைகளை செய்வதில் ஒரு சுத்தமும், நேர்த்தியும் இருந்தது.

சரஸ்வதிக்கு மருமகளை  மிகவும் பிடித்தது. பானுவை அம்மா  புகழ்ந்து பேசுவது சாந்திக்கும் சங்கரிக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. அவளைக் குற்றம் சொல்வதையே வேலையாகக் கொண்டிருந்தார்கள். இது பானுவுக்கு புரிந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அன்று இருவரும் வழக்கம் போல் அம்மாவைப் பார்க்க வந்தார்கள். ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடும் பானு அன்று ஆறு மணியாகியும் வரவில்லை.

'உன் மருமகளுக்கு ரொம்பவே இடம் கொடுத்திருக்கிறாய். உன்னை மதிப்பதே இல்லை. இத்தனை நேரமாக கல்லூரியில் என்ன செய்கிறாள்?' என்று சொல்ல, சரஸ்வதிக்கும் கோபம் வந்தது.

சதீஷுக்கு ஃபோன் செய்து சாந்தி சற்று கோபமாகவே கேட்டாள்
..எங்கே உன் பெண்டாட்டியை இன்னும் காணுமே? நானும் சங்கரியும் மதியம் வந்தோம். டிஃபன் சாப்பிட்டு கிளம்பணும்..

..வேலையினால் நான் சொல்ல மறந்து விட்டேன். அவள் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் பார்க்க போயிருக்கிறாள். இரண்டு நாளில் வந்து விடுவாள்..

..என்னது இரண்டு நாளா? இங்கு யார் சமையல் வேலையெல்லாம் செய்வது?அம்மா எப்படி தனியா செய்வா?..

..நான் இப்போ வேலையா இருக்கேன். வந்து பேசலாம்..என்றபடி சதீஷ் ஃபோனை வைத்து விட்டான்.

அவர்கள் பேசிய விதம் அவனுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. சாந்தியும், சங்கரியும் அவ்வப்போது தன்னை அதிகாரமாய் பேசுவதையும்,சரஸ்வதி அவளிடம், இந்த வீட்டில் அவர்களுக்கும் உரிமை இருப்பதால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்று  சொன்னதையும் பானு சொன்னபோது அவன் கண்டுகொள்ளவில்லை. இப்போது அதன் அர்த்தம் அவனுக்கு புரிந்தது.

வீட்டுக்கு வந்தவனிடம் சகோதரிகள் இருவருமாக பானுவைப் பற்றி சொல்லி கோபித்தார்கள்.

..நீ அவளுக்கு ரொம்பவே இடம் கொடுத்து விட்டாய். அம்மா வீட்டுக்கு போவதை நம் அம்மாவிடம் சொல்லி கேட்டிருக்க வேண்டாமா?நாளை எங்கள் யாரையும் அவள் மதிக்கப் போவதில்லை..என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

பெண்கள் இருவரும் ஏற்றியதால் சரஸ்வதியின் மனதிலும் பானுவைப் பற்றிய தவறான எண்ணம் ஏற்பட்டது. தன்னை விட்டு மகனைப் பிரித்துக் கொண்டு போய்விடுவாள் என்ற எண்ணம் வலுத்தது.

நடந்த விஷயங்களை பானுவிடம் சதீஷ் சொன்னபோது அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவள் வேலைகளை அவள் சரியாக செய்து கொண்டிருந்தாள்.

அன்று கல்லூரி முதல்வர் அழைத்து அவளை ரசாயன வகுப்பு அவள் மிக சிறப்பாக நடத்துவதை பாராட்டினார். வாரம் மூன்று நாட்கள் மாலை நேர திறந்தநிலை பல்கலைக் கழக வகுப்புகளில் ரசாயனப் பாடம் எடுக்கும்படி கேட்டபோது அவளால் அதை மறுக்க முடியவில்லை.

மாலை வீடு வந்து வேலைகளை முடித்தவள் சதீஷிடம் விஷயத்தை சொன்னாள். அவளைப் பாராட்டியவன் 'நான் ஒன்று சொன்னால் கோபிக்காதே. எனக்கு இதில் சம்மதம். ஆனால் எங்க அம்மாகிட்ட ஒரு வார்த்தை எதுக்கும் கேட்டுட்டு செய்யேன்.'

'நீங்களுமா?' என்று அவனை ஏறிட்டவள், 'அம்மாவிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன். இதனால் நம் வருமானம் கூடும். இந்த வாய்ப்பை நான் விடுவதாக இல்லை. அதனால் நான் இதை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்து விட்டேன். உங்கள் அக்காக்களிடம் நான் அனுமதி பெற அவசியமில்லை' என்றாள்.

அவள் மாமியாரிடம் சொல்லி, பெண்கள் காதுக்கு செல்ல, மறுநாள் பானு கல்லூரியிலிருந்து வந்தபோது நாத்தனார்கள் இருவருமாக மாலை நேர வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் 'வீட்டை நன்கு கவனித்துக் கொண்டால் போதாதா'  என்றார்கள்.

'வேலைக்கு போவதும் போகாததும் என்னுடைய மற்றும் என் கணவரின் விருப்பம். நான் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. என்னால் வேலையில் இருந்து கொண்டு என் கணவர், மாமியாரைப் பார்த்துக் கொள்வதோடு வீட்டையும் நன்கு பராமரிக்க முடியும்' என்றபோது சரஸ்வதி மனதிலும் ஒரு சலனம்.

தன் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்து  விட்டதைப் புரிந்து கொண்டவள், நீ சொல்வதை நான் புரிந்து கொண்டேன் பானு. நீ தாராளமாக அந்த எக்ஸ்ட்ரா வேலைக்கு ஒப்புக்கொள்' என்றதும் பானு 'நீங்கள் என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றிமா' என்றவள், நாத்தனார்களைப் பார்த்து, 'இருங்க. சமையல் செய்யறேன். சாப்பிட்டு போகலாம்' என்றாள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு