ஜிமிக்கி கம்மல் கதை
சத்யாவின் வீட்டு வேலைகளைச் செய்யும் மரகதத்தின் மகள் அஞ்சு. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளி விடுமுறைகளில் அம்மாவுடன் வருவாள். அஞ்சலையுடன் சேர்ந்து தேய்த்த பாத்திரங்களை அழகாக அலம்புவாள். விளக்குமாற்றால் வாசலில் பெருக்கி சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து மிக அழகாகக் கோலம் போடுவாள்.
அவள் கோலம் போடுவதை சத்யாவின் மகள் ரம்யா கண் விரியப் பார்ப்பாள். அவளுக்கு கோலமெல்லாம் போட வராது. தன் கைபேசியில் இருக்கும் கோலங்களை காட்டி அது போல் போடச் சொல்வாள். அஞ்சுவுக்கோ ரம்யா போட்டிருக்கும் முத்துத் தோடுடன் இணைந்த குடை ஜிமிக்கியின் மேல் மிகவும் ஆசை. அதைத் தன் கையால் தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள்.
ரம்யா அவளிடம் ..உனக்கு இந்த ஜிமிக்கி பிடிச்சிருக்கா? இந்தா வெச்சுக்கோ..என்று கழற்றிக் கொடுத்து விட்டாள். ..உனக்கு வேண்டாமா?..என்றதும், ..என்கிட்ட நிறைய இருக்கு நீ வெச்சுக்கோ..என்று கொடுத்து விட்டாள்.
இரவு அவள் காதைப் பார்த்த சத்யா திடுக்கிட்டு..தோடு எங்கே?..என்று கோபமாகக் கேட்டாள். ரம்யா..அம்மா அஞ்சு பாவம்மா. அவளுக்கு ஜிமிக்கியே இல்லையாம். அதான் என்னோடதைக் கொடுத்துட்டேன்.. என்றாள்.
இதைக் கேட்ட சத்யாவுக்கு அதிர்ச்சி. ..அது பவுன் தோடு. அதை ஏன் கொடுத்தாய்?.. என்று அதட்டினாள். ரம்யா..அம்மா. நீதானம்மா இல்லாதவாளுக்கு நாம கொடுக்கணும்னு சொல்லுவ. என் தமிழ் பாடத்துல 'அறம் செய விரும்பு'னு வருமே. அதுக்கு அப்படித்தான நீ பொருள் சொல்லிக் கொடுத்த? ..என்றாள்.
குழந்தைகளின் மனதில் நாம் சொல்வது எவ்வளவு அழுத்தமாகப் பதிகிறது என்று எண்ணிக் கொண்டாள் ரம்யா. அஞ்சலையிடம் விசாரிக்க வேண்டும்.அவள் பத்து நாட்களாகத்தான் வேலைக்கு வருகிறாள். அவள் வீட்டு விலாசமும் தெரியாது. அவள் குணமும் தெரியாதே என்று யோசித்தவளை மரகதத்தின் குரல் கலைத்தது.
..அம்மா என்னை மன்னிச்சுடுங்கமா. எம்பொண்ணு உங்க பாப்பா தோட்டை வாங்கிட்டு வந்துட்டாமா. அதைப் பார்த்தா பவுன் மாதிரி இருந்ததால எடுத்துட்டு ஓடியாந்தேன்..என்றபடி கொடுத்தாள். அவள் நேர்மை ரம்யாவிற்கு மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
சுருங்கிப் போன அஞ்சுவின் முகத்தைப் பார்க்க ரம்யாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் மனம் இதையே யோசித்துக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து வந்த ரகுவிடம் விஷயம் சொன்னாள் சத்யா.
..இதுக்கு என்ன யோசனை சத்யா? நம்மிடம் தேவைக்கு பணம் இருக்கே. அதே போல் அந்தக் குழந்தைக்கு ஒரு தோடு வாங்கிக் கொடுத்துடு...என்றான். அவனது பெரிய மனது அவளுக்கு ஆச்சரியமாகவும், மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மறுநாள் நகைக் கடைக்கு சென்றவள் அதே போன்ற ஜிமிக்கி தோட்டை வாங்கிக் கொண்டு வந்தாள். மறுநாள் அஞ்சு மரகதத்துடன் வந்த போது அதை அவளிடம் கொடுத்தாள். அந்தக் குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கணுமே! ஆசையாக வாங்கி உடனே அம்மாவிடம் கொடுத்து போட்டுக் கொண்டாள்.
ரம்யாவுக்கும் ஒரே சந்தோஷம். ...எங்கம்மா உனக்கும் வாங்கிக் கொடுத்திருக்காங்க பாரு. பிடிச்சிருக்கா?..என்றாள்.
மரகதம்..அம்மா கால் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கோ..என்றபடி இருவரும் வணங்கினார்கள்.
ரம்யாவுக்கு ஒரே சந்தோஷம். ...வா நாம விளையாடலாம்...என்று அவள் கை பிடித்து அழைத்துச் சென்றாள்.
குழந்தை மனம் என்பது இதுதானோ? அஞ்சுவின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. இல்லாதவர்களுக்கு நாம் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது என்று நினைத்தவளை ரகுவின் கைபேசி அழைத்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக