மின்னல் வேக வலைப்பதிவு

 


தூக்கம் வருதே..

அன்று பெற்றோர் சிவகாமி, சுந்தரேசனுடன் ஆஷாவைப் பெண் பார்க்கச் சென்றான் ரவி. இதுவரை நான்கைந்து பெண்களைப் பார்த்தும் எதுவும் சரியாக அமையவில்லை. ரவிக்கும் வயதாகிக் கொண்டே செல்வதால் சிவகாமிக்கு இரவு தூக்கம் வருவதில்லை. ரவி அவர்களின் ஒரே மகன். இதுவாவது சரியாக இருந்து பெண்ணைப் பிடித்து திருமணம் நடக்க வேண்டுமே என தன் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள் சிவகாமி.

ஆஷா பார்க்க நன்றாக இருந்தாள். கல்லூரிப் படிப்பு படித்தாலும் வேலைக்குப் போக விரும்பவில்லை என்றும், ஒரே பெண் என்பதால் தமக்கு மிகவும் செல்லம் என்றும் சொன்னார்கள் அவள் பெற்றோர் சுந்தரியும், ரகுபதியும்.

சிவகாமி அவளிடம் சில கேள்விகள் கேட்டாள். பாட்டு, நடனம் என்று எதிலும் விருப்பம் கிடையாது என்றதோடு, சமைக்கவும் தெரியாது என்றது சிவகாமிக்கு வேடிக்கையாக இருந்தது.

...நீங்கள் சமையல் உங்க வீட்டு முறைப்படி சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வாள்...என்றாள் சுந்தரி.

...ரவி படிக்கும்போதே நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், விளையாட்டிலும் பல  பரிசுகள் வாங்கியிருக்கிறான். பள்ளியில்
முதலாக வந்து என்ஜினியரிங் படித்து பெரிய கம்பெனியில் வேலையாய் இருப்பதோடு விடுமுறை நாளில் பலருக்கு டியூஷனும் சொல்லித் தருகிறான்...என்றாள் சிவகாமி.

ரவி ஆஷாவுடன் தனிமையில் பேச ஆசைப்பட, இருவரும் பேசினார்கள். ஆஷா அதிகம் எதுவும் பேசவில்லை. அவள் பேச மிகவும் கூச்சப் படுவதாக சொன்னான் ரவி. திருமணமானால் சரியாகி விடும் என்றாள் சிவகாமி.

நல்ல நாளில் திருமணம் நன்கு நடந்தது. இரு வீட்டாரின் அழைப்புகள், உறவினர் வீடுகள் விஜயம் எல்லாம் முடிந்து இருவரும் தேனிலவுக்கு சிம்லாவுக்கு சென்றனர்.

ரவி அவளிடம் பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டான். அவளோ...எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு. தூங்கப் போகிறேன்...என்று படுத்து விட்டாள்.


இடமும் புதிது, உடலும் அலுப்பாக இருக்கும் என எண்ணி ரவி அவளைத் தொந்தரவு செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து இருவரும் திரும்பினர். ஆஷாவுக்கு அவர்கள் வீட்டு முறைகளைத் தெரிந்து கொள்ளும் ஆவல் இல்லை. காலை மெதுவாக எட்டு மணிக்குதான் எழுந்தாள். அதற்குள் ரவி ஆஃபீஸ் கிளம்பி  விடுவான். கணவனுக்கு வேண்டியவைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் சிறிதும் இல்லை.

சிவகாமி இந்த விஷயம் பற்றி சுந்தரியிடம் கேட்டபோது
...அவள் ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்து விட்டாள். நீங்கள் கற்றுக் கொடுங்கள். செய்வாள்...என்றாள்.

சிவகாமியும், சுந்தரேசனும் 15 நாட்கள் புனித யாத்திரை செல்வதாகக் கிளம்பினார்கள். அந்த நேரம் அவள் வேலைகளைச் செய்து பழகிக் கொள்வாள் என்று நினைத்தும் பயனில்லை. ரவியிடம் கேட்டபோது அவனும் சொல்லி மிக வருத்தப் பட்டான்.

இதனிடையில் ஆஷா கர்ப்பமாக வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் முடிந்து பிரசவத்துக்கு பிறந்த வீடு சென்றாள். அழகிய ஆண் குழந்தை பிறந்தது. நான்கு மாதம் முடிந்து புக்ககம் வந்தாள்.

இனியாவது தூக்கம் குறைந்து மாறிவிடுவாள் என்று நினைத்த சிவகாமிக்கு கிடைத்தது ஏமாற்றமே.குழந்தை அழுவது கூட தெரியாமல் தூங்குவாள். வீட்டு வேலைகளோடு குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொள்ள, சிவகாமிக்கு உடல்நிலை முடியவில்லை.

ஒருநாள் கட்டிலில் குழந்தையுடன் படுத்திருந்தவள்  குழந்தை கீழே விழுந்து அழுவது கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்க, எல்லோரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். குழந்தையை கவனிப்பதும் சிவகாமியின் வேலை ஆகிவிட்டது.

இது ஏதோ ஒரு நோய் என்பதை அறிந்து அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றபோதுதான் தெரிந்தது இது ஒரு  தூக்கநோய் என்பது. இது வெகு சிலருக்கே வரும் என்ற மருத்துவர் அதற்கான சிகிச்சை ஆரம்பிக்க அவள் குணமடைய ஆறு மாதங்களுக்கு மேல் ஆயிற்று.

இப்பொழுது அவள் குழந்தையையும் குடும்பத்தையும் அழகாக நிர்வகிப்பதுடன், நல்ல மனைவியாக, மருமகளாக, தாயாக விளங்குகிறாள்.
(இது ஒரு உண்மை நிகழ்ச்சியின் கதையாக்கம்.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு