கணவரும் டெய்லரும் என் கையில்..
திருமணமான புதிதில் என் கணவர் சொல்வதை 'பூம்பூம் மாடு' மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு கேட்டவள் நான்! இப்போது நான் சொல்வதைக் கேட்டு, கேட்டதை வாங்கித் தரும் என் கணவர் என் கையில் என்று நினைக்கிறேன்! இந்த நினைப்பு பல நேரங்களில் நிஜமாகும்..சில முறை பல்டி அடித்து விடும்!
என் கணவர் ஒப்புக் கொள்வார் என்று சில விஷயங்களை செய்து விடுவேன். அவர் என்னைப் பாராட்டுவார் என்று பரம சந்தோஷமாக அவரிடம் சொல்வேன்! அவரோ...இதை இப்படி நீ செய்தது சரியில்லை...என்பார். நான் செய்தது சரிதானே என்று அழுத்தி சொல்வேன். அவர் அதைப் பொறுமையாக விளக்கி..நான் சொன்னதை புரிந்து கொண்டாயா?..என்கிற போது எனக்கு என் தவறு புரிந்துவிடும்.
நான் சொல்வதை செய்யும் என் கணவர், நான் சொல்லாத
தையும் செய்து என்னை அசத்துவதில் கில்லாடி! அமேசானில் ஏதாவது ஒரு பொருள் வேண்டுமென்று கார்ட்டில் போட்டு வைப்பேன். இரண்டு நாளில் அது வரும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் எப்படி வந்தது என்று!
என் கணவரிடம் கேட்டால்..நீ கார்ட்டில் மட்டும்தான போட்டாய்! நான் அதை என் ஹார்ட்டில் நினைவு வைத்து உன்னை ஸர்ப்ரைஸ் பண்ண ஆர்டர் செய்தேன். இப்ப சந்தோஷமா?..என்று கிறங்கிப் போய் கேட்கும்போது, என் மனதும் காதலில் துள்ளும்! என் பேச்சுக்கு எதிர்மாறாக இல்லாமல் நான் எதிர் பாராததையும் செய்து கொடுக்கும் என் கணவர் வரம் தானே!
இனி டெய்லர்...இவர் அமைவது இறைவன் கொடுத்த வரம் என்று தோன்றும்! ரவிக்கை சுற்றளவு பெரிதாக இருந்தால் பக்கங்களில் தையல் போட்டு சிறிதாக்கலாம்! சின்னதாக தைத்தால் எப்படி அணிய முடியும்? டெய்லரிடம் கொடுப்பதும் அதை ஆல்டர் செய்ய அலைவதும் படா பேஜாரான வேலையாகி விடும்!
விலை அதிகமான புடவைக்கான ரவிக்கை தைக்க நான் அளவு கொடுத்து டிசைனும் சொல்லி தைக்கக் கொடுத்த ரவிக்கையை அணிந்து கொள்ளும் நாளுக்காக ஆவலாகக் காத்திருக்க, அவர் தைத்த லட்சணம்..கடவுளே சகிக்கவில்லை. கை, கழுத்து என்று எதுவும் சரியில்லை. திரும்ப சரி செய்யக் கொடுத்தும் ஒன்றும் சரியில்லை. அப்பொழுது ரெடிமேட் ப்ளவுஸ் வாங்கி அணிந்ததுண்டு. ஆனால் புடவையுடன் ப்ளவுஸ் மேட்சாக இருப்பதால் அவை சரி வருவதில்லை.
நாங்கள் மும்பையில் இருந்தபோது அங்குள்ள டெய்லர் மிக கச்சிதமாக அளவாக சல்வார் குர்த்தா, ரவிக்கை எல்லாம் அழகாக தைத்துத் தருவார். அதன்பின் போபால் வாசம். அருமையான டெய்லர். பல விதமான டிசைன்களில் ரவிக்கை தைத்துக் கொண்டேன். பார்ப்பவர்கள் பாராட்டும்படி இருந்தது.
அதன்பின் இருந்த ஊர்களில் டெய்லர் சரியில்லை. யோசித்தேன்! சிறு வயதில் கற்றுக் கொண்ட தையல் கைகொடுக்க விதவிதமான தினுசுகளில் யூட்யூப் பார்த்து தைக்க ஆரம்பித்தேன்.சம்கி வேலை, முத்து வேலை, எனக்குப் பிடித்தபடி Long sleeves, short sleeves, பஃப் கை, பாகுபலி டிசைன், பின் கழுத்தில் பல டிசைன்கள் என்று தைத்து அணிந்தேன். பார்ப்பவர்கள் 'எங்கே தைத்தாய்?'என்று விசாரிக்கும் அளவுக்கு தைப்பேன்.
இப்பொழுதெல்லாம் டெய்லரிடம் தைப்பதே இல்லை. என் கைவண்ணத்தில்தான் என் ரவிக்கைகளை தைத்துக் கொள்கிறேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது! ஆஹா..நாம் இவ்வளவு அழகாகத் தைத்திருக்கிறோம் என்ற பெருமையும் கூட!
இப்பொழுது கணவரும் டெய்லரும் என் கையில்தானே!
கருத்துகள்
கருத்துரையிடுக