மறக்க முடியாத 2021

 

2021 ஜனவரி பிறந்த போதே ஒருவித சந்தோஷம் மனதில்! எனக்குப் பிடித்த மாதிரியான வீட்டைக் குடந்தையில் வாங்கிக் கட்டி அதில் குடியேறிய சந்தோஷம் சொல்லி முடியாது!

எனக்கு பிடித்த மாதிரி பால்கனி முதல் பாத்ரூம் வரை ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்து கட்டிய புதிய வீட்டில் குடி வந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தது. புதிதாக எதை வாங்கினாலும் நம் மனம் ரெக்கை கட்டிப் பறக்கும்தானே!

என் பேரனுடன்..

பிப்ரவரியில் ஒரு வருடத்திற்கு பின் என் மகள் வீட்டுக்கு ஹைதராபாத் சென்று வந்தோம். என் மகள் டாக்டரானதால், எனக்கு காலில் varicose vein அறுவை சிகிச்சையை அங்கு சென்று செய்து கொண்டேன். அச்சமயம் இருபது நாட்கள் என்னை எந்த வேலையும் செய்ய விடாது வேளா வேளைக்கு என் கையில் கொண்டு வந்து சாப்பாடு கொடுத்த என் சம்பந்தியின் அன்பை மறக்க முடியாது.

என் சம்பந்தியுடன்..

என் புகுந்த வீட்டில் நெருங்கிய உறவினர்கள் இருவர் இறந்து விட்டதால் எந்தப் பண்டிகையும் கொண்டாட முடியவில்லை. கொரோனாவினால் எல்லோருக்கும் Onlineல் படிப்பு, வேலை என்றதால் சென்னையிலிருந்த என் மகன் குடும்பம் இங்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டு பேத்திகளுடன் மிக மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் பெரிய பேத்தி இந்தப் புதிய வீட்டில்  பருவம் அடைந்தது மிக சந்தோஷமாக இருந்தது. நல்ல நேரமாகத் தோன்றியது.

அக்டோபரில் என் கணவருக்கு பீமரத சாந்தி ஏற்பாடு செய்தோம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போய் விட்டது. இது போன்ற ஹோமங்களால் ஆரோக்யம், மனநிம்மதி, குழந்தைகளின் சந்தோஷமான வாழ்க்கை இவை சிறப்பாக இருக்கும் என்பதற்காக செய்வது.

இது அறுபதாம் கல்யாணம் போல் எழுபது வயதில் செய்யும் கல்யாணம்!

கல்யாணம் என்றாலே அனைவருள்ளும் ஒரு மகிழ்ச்சி பெருகுவதை உணர முடியும். அது இளவயது திருமணமோ.. அறுபதாம் கல்யாணமோ.. பீமரதசாந்தியோ..சதாபிஷேகமோ...அதன் சந்தோஷம் தனிதான்! எங்கள் திருமணநாளன்று என் கணவரது 27 வயதில் பார்த்த அதே காதல் பார்வை இந்த 72லும் தொடர்வதில் நான் கிறங்கிப் போனது நிஜம்! காதலுக்கு வயதில்லை!

அக்டோபர் 17ம் தேதி ஏகாதச ருத்ரஜபம், ஹோமமும் ,18ம் தேதி  எங்கள் பீமரத சாந்தியும்  (எழுபது வயது நிறைவு) நடைபெற்றது. கொரோனா வினால் எல்லா உறவினர் களையும் அழைக்க முடிய வில்லை. லண்டனிலும், ஜெர்மனியிலும் இருக்கும் என் இரண்டு பிள்ளைகள் வர முடியாதது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் இது இந்த வருடம் நடந்த மறக்க முடியாத சந்தோஷமான நிகழ்வு!

இதற்காக வந்திருந்த உறவினர்கள்  ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசுவதும், சிரிப்பதும், ஜோக்கடிப்பதுமாக இருந்தபோது, உறவுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழவே இது போன்ற சம்பிரதாயங்களை நம் முன்னோர் வைத்திருப்பார்கள் போலும் என்று தோன்றுகிறது!

என் பேத்தியுடன்..

என் பெண் பிள்ளைகள் இணைந்து எங்களுக்கு தெரியாமல் வாங்கிக் கொடுத்த பரிசுகள் எங்களை ஆச்சரியப் படுத்தியது. எனக்கு வைரத் தோடும், என் கணவருக்கு லேப்டாப் என்று வாங்கிக் கொடுத்தபோது...இது போன்ற பிள்ளைகளைப் பெற என்ன தவம் செய்தோமோ என்று நாங்கள் கண்கலங்கி விட்டோம்.

கல்யாணத்துக்கு பின் தேனிலவுதானே! நாங்கள் கூர்க் சென்று ரிஸார்ட்டில் தங்கி ஒரு வாரம் ஜாலியாக இருந்துவிட்டு வந்தோமே! எந்த வயதானாலும் சந்தோஷமாக இருக்க தடையில்லையே!! அத்துடன் தலைக்காவேரி, மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயங்களும் தரிசித்து வந்தோம்.

சென்ற ஆண்டு இது போன்ற சந்தோஷ நிகழ்வுகள் எங்கள் உற்சாகம் குறையாமல் இருக்கக் காரணமாயிற்று. இனி வரும் 2022ம் ஆண்டு உலகம் கொரோனா போன்ற தொல்லைகளிலிருந்து விடுபட்டு மக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வேண்டுகிறேன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு