நன்றி சொல்கிறேன் 🙏🏼



என்னை இவ்வுலகிற்கு கொண்டு வந்து என்னைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து நற்குணங்களையும் கல்வியையும் கொடுத்து என்னுள் மனிதத்தை உருவாக்கிய என் பெற்றோருக்கு முதல் நன்றி🙏🏼


பக்தி ஒன்றே உன்னை இறைவனிடம் நெருங்க வைக்கும் என்பதை உணர்த்திய என் இஷ்ட தெய்வத்திற்கு
நன்றிகள் பலப்பல கோடி🙏

நன்றி என்றதும் என் நினை
வுக்கு வருவது சமீபத்தில் எங்கள் நோயை சரி செய்த  ஹைதராபாத்தில் இருக்கும் என் மாப்பிள்ளையும் பெண்ணும்தான்.

ஆம். ஒரு மாதம் முன்பு எங்களை ஆட்டி வைத்த கொரோனாவிலிருந்து குணமடைய எங்களுக்கு சரியான நேரத்தில் விபரங்களைச் சொல்லி மருந்துகளைச் சொல்லி எங்களை அந்தக் கொடிய கொரோனாவிலிருந்து மீண்டுவர வைத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

சென்ற மாதம் ஒருநாள் என் கணவருக்கு உடல்வலி, தலைவலி இருந்தது. 'வேலையினால் இருக்கும்' என்று வலி மாத்திரை சாப்பிட்டவருக்கு மறுநாள் காய்ச்சல். என் பெரிய பேத்திக்கு தொண்டை வலி. எனக்கும் ஜலதோஷம் வர, என் மகளிடம் கேட்டோம்.

சாதாரண வலி காய்ச்சல் மாத்திரைகள் சாப்பிட்டும் குறையாமல் இருக்க, உடனே என் மாப்பிள்ளை RT-PCR Test எடுக்கச் சொன்னார். அதில் பாஸிடிவ் வர அடுத்து மருந்து மாத்திரைகளுக்கான Prescription அனுப்பினார். அடுத்த நாளே என் மகன் மருமகள் எல்லோருக்கும் இருமல், காய்ச்சல் என்று ஆரம்பிக்க, கொரோனா எங்கள் வீட்டிலிருப்போரை சுற்றி வளைத்து தன் வேலையை ஆரம்பித்தது.

உடல் முழுதும் வலி. நாக்கில் சுவையில்லை..மூக்கில் மணமில்லை. காய்ச்சலோடு இருமல். சாப்பாடு பிடிக்கவில்லை. தூங்கினோம்..தூங்கினோம்..


எழவே முடியவில்லை.சின்ன பேத்தி வரை அத்தனை பேருக்கும் காய்ச்சல் தலைவலி எல்லாம்.

எனக்கோ ஒரே டென்ஷன். வேண்டாத தெய்வமில்லை. ஆஸ்பத்திரி போகணுமோ..
அட்மிட் ஆகணுமோ என்றெல்லாம் ஒரே பயம். 'டாக்டரிடம் காண்பிக்க
ணுமா?' என்று நான் என் பெண்ணைக் கேட்க, 'அப்ப நான் யாரு? நாங்க சொல்ற மருந்தை சரியா சாப்பிடு' என்று மிரட்டினாள்.

என் மகள் மருந்து மாத்திரைகளின் Prescription அனுப்ப, மருந்துக் கடைக்கு ஃபோன் செய்து சொல்ல உடனே மருந்து மாத்திரைகள் வந்துவிடும். கொரோனா, ரத்தப் பரிசோதனைகள் வீட்டுக்கே வந்து எடுத்துச் சென்று ரிசல்ட் வந்துவிடும். ஒரு மாதமாக நாங்கள் எங்கள் வீட்டுப் படி தாண்டவில்லை.

அத்தனை பேருக்கும் என் மகன் அழகாக மருந்துகளைப் பிரித்துக் கொடுத்ததோடு, தானும் சாப்பிட்டு எங்களையும் 'மருந்து சாப்பிட்டாயா?' என்று தவறாமல் ஒவ்வொரு வேளையும் கேட்பான்! எங்களை மிக கவனமாக கவனித்துக் கொண்ட என் மகனுக்கும் நன்றி!

இங்கு  கேன்டீன் இருப்பதால் ஒரு வாரத்துக்கு அங்கிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டோம்.  வீடு பெரிதானதால் ஒவ்வொரு
வரும் தனி அறையில் தனிமைப் படுத்திக் கொண்டோம். நானும் என் கணவரும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதால் நான்கு நாளில் எல்லாம் குறைந்து சரியாகி விட்டோம். என் பிள்ளை மருமகள் ஊசி போடாததால் சரியாவதற்கு பத்து நாட்கள் ஆயிற்று.

சில நேரங்களில் கொரோனா சரியானாலும் ரத்தம் உறைவதற்கு வாய்ப்புண்டாம். அதனால் மீண்டும் பாதிப்பு வரலாம் என்பதால் என் மாப்பிள்ளை மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து எல்லாம் நார்மலாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்.எல்லாம் நார்மலானதும்தான் மனம் நிம்மதியாயிற்று. அத்துடன் உடல் பலவீனம் குறைய மூன்று மாதங்களுக்கு B,Cவைட்டமின் மற்றும் Zinc மாத்திரைகள் சாப்பிட வேண்டுமாம்.

இந்த இடம் அதிக மாசு இல்லாத அமைதியான இடம். வீடுகளும் தள்ளி இருப்பதுடன் மக்களும் குறைவு. நாங்கள் யாரும் வெளியில் செல்வதில்லை. போனாலும் மாஸ்க் இல்லாமல் போவதில்லை. அத்தனை பொருட்களும் உள்ளேயே கொண்டு கொடுப்பார்கள். அவர்களும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.  அப்படியிருக்க எப்படி கொரோனா வந்தது என்பது புரியாத புதிர்!

கொரோனாவிடமே கேட்டேன்...எங்கிருந்து எப்படி வந்தாய் என்று!...
...உங்கள் வீட்டின் அழகில் மயங்கி கொஞ்சநாள் உங்களுடன் இருக்க வந்தேன்!...என்றது! பதினைந்து நாட்கள் எங்களுடன் கூடிக் குலவி சந்தோஷமாக இருந்து விட்டு இருபது நாட்களுக்கு முன் பிரியாவிடை பெற்றுச் சென்றது!

கொரோனா வருவதற்கு சுற்றுப்புற சூழ்நிலையோ, மக்களோ காரணமில்லை என்பது மட்டும் புரிந்தது. தடுப்பூசியால் வராது என்பதும் நிச்சயமில்லை; வந்தால் சீக்கிரம் குணமாகலாம். காய்ச்சல் தலை, உடல் வலிகள் வந்தால் சாதாரண ஜுரம் என்று நினைக்காமல் உடன் கொரோனா பரிசோதனை செய்து சரியான மருந்துகளை சாப்பிட்டால் நிச்சயம் குணமடையலாம். தனிமைப் படுத்திக் கொள்வது அவசியம்.

கைகளை அடிக்கடி, சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

என் மகளும், மாப்பிள்ளையும் தினமும் இரண்டு வேளையும் ஃபோன் செய்து எங்கள் நிலைமையை விசாரித்து 'எல்லாம் சரியாகிவிடும்' என்று ஆறுதல் சொல்வார்கள். கொரோனா என்றாலே மிகக் கொடுமையான நோய்..மீண்டு வருவோமா' என்ற பயத்திலிருந்து எங்களை மீட்டு நிம்மதி தந்த கடவுளாகத் தெரிந்த என் மகள் டாக்டர் கிரிஜாவுக்கும் மாப்பிள்ளை டாக்டர் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)