மகன்/மகள்
கண்ணே! கண்மணியே!
உன் சின்னஞ்சிறு கால்களால் என்னை சிணுங்கியபடி உதைக்கும்போது உன்னை அள்ளி எடுத்து அழுந்த முத்தமிட்டேனடி!
பாலூட்டி தாலாட்டி உன் ஒவ்வொரு அசைவிலும் உலகமே என்கையில் இருப்பதாக எண்ணி உனை உச்சிமுகர்ந்து உடல் சிலிர்த்தேனடி!
மூன்று வயதில் சீருடையில் இரட்டை பின்னல் அசைய நீ பட்டுப்பாதங்களால் நடந்து செல்வதைக் கண்டு என் தங்கத்திற்கு பாதம் வலிக்குமே என்று உன்னை பள்ளிக்கு தூக்கி அழைத்துச் செல்வேனடி!
பதின்மவயதில் மருத்துவக் கல்லூரி சென்றபோது 'என் மாணிக்கம் நாளை உயிர் காக்கும் மருத்துவர்'என்று மனதில் எண்ணி மனங்குளிர மகிழ்ந்திருந்தேனடி!
நீ மணமகளாய் நின்றபோது 'உன்னைப் பிரிந்து எப்படி இருப்பேன்' என்று உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்தேன்! நீ தாயானபோது நான் பெற்ற மகிழ்ச்சியை உன்னிடம் கண்டேனடி!
இன்றும் நீ அம்மா என்று ஓடி வந்து அணைக்கும்போது 'இவள் என் மகள்' என்ற பாசத்தில் பிரிய மனமின்றி கண் கலங்குகிறேன்! அன்புமகளே! வாழ்க நீ பல்லாண்டு!
மகனுக்கு//
கண்ணான கண்ணா!
என் அன்பின் பொக்கிஷமே!இனிதான மழலை பேசி
எனை மயக்கிய கண்மணியே!
தலைமகனாய் பிறந்தாய்! என்
தாய்மையை உணர வைத்தாய்!
என் மடிமீது விளையாடி
தோள்மீது துயில் கொண்டு
கண்பொத்தி கதைபேசி
எனை மகிழ வைத்த
மாணிக்கமே!
கருமமே கண்ணாகக் கற்று
கல்வியில் சிறப்பானாய்!
இனிமையாகப் பேசுவதும்
இதமாகப் பழகுவதும் உன் கைவந்த கலை!
எதிலும் உறுதியாக நின்று உயரத்தை அடைந்திட்டாய்!
மதிநுட்பம் மிகக் கொண்டு
அனைத்துமே அறிந்திட்டாய்!
பார் போற்ற நாளும் புகழ் பெறுவாய் என் அன்பு மகனே!
நாள்தோறும் உனை நினைத்து
நலம் வாழ வாழ்த்துகின்றேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக