எனக்கு பிடித்த அந்த நாட்கள்..

 



எனக்கு பிடித்த அந்த நாட்கள்..
 


  கடிதங்களே அந்த நாட்களில் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும் சாதனமாக இருந்தது.

என் அம்மாவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அப்பாவுடன் பிறந்தவர்கள் 7பேர். இவர்கள் எல்லாரிடமிருந்தும் கடிதம் வாரம் முழுதும் வரும். எழுத்துக்களை நுணுக்கி நுணுக்கி எழுதி ஒவ்வொரு கடிதமும் பல கதை சொல்லும்.

அந்நாளைய கூட்டுக் குடும்பங்களில் மாமியார் மாமனார் தம்மை நடத்துவதை, தான் படும் கஷ்டங்களை வெளியாரிடம் சொல்ல முடியாமல் தன் மனதுக்கு பிடித்த உடன் பிறந்தவர்களிடமோ பெற்றோரிடமோ சொல்ல கடிதங்கள் மட்டுமே ஒரே வழி.  எனக்கு 19 வயதில் திருமணமாகி உத்திர பிரதேசம் மாறிப் போனபின் என் அம்மா எழுதும் கடிதங்கள் மட்டுமே என்க்கு மகிழ்ச்சி தரும். கடிதம் வர கொஞ்சம் நாளானாலும்...அம்மா அப்பாவுக்கு என்னாச்சு?...என்று மனம் பதறும்.

இன்றும் அந்தக் கடிதங்களை படிக்கும் போது அவர்களையே நேரில் பார்ப்பது போலும் பேசுவது போலும் தோன்றும். அம்மா அத்தனை கடிதங்களையும் ஒரு நீளமான கம்பியில் சொருகி வைப்பார்.  யாருக்கு எப்போது திருமணம் நடந்தது, வளைகாப்பு நடந்தது என்பதெல்லாம் அதிலிருக்கும் பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.நமக்கு பிடித்தமானவரை உடனே நேரில் பார்த்து பேசத் தோன்றும். அவர்களை எப்போது பார்க்கலாம் என்ற ஆவல் ஏற்படும். அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தங்கி விட்டு திரும்ப செல்லும் போது கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்து அனுப்புவோம்.

இப்பொழுது

  தினமும் வாட்ஸப்பிலும் ஜுமிலும் பார்த்து பேசுவதால் அந்த ஆவல் குறைந்து விட்டதாக எண்ணுகிறேன்.



  சந்திப்பு குறைவாக இருந்த போது பாசமும் நேசமும் அதிகம் இருந்ததோ எனத் தோன்றும்.

இப்பொழுது எவரையும் நேரில் பார்க்கும் ஆசை குறைந்து விட்டது. முன்பெல்லாம் உறவினர்கள் வந்தால் இரவு முழுதும் பேசிக் களிப்போம். அவர்கள் திரும்பிப் போகும்போது மனம் கனத்து அழுது வழியனுப்புவோம்.

நாங்கள் சென்னையில் நுங்கம்பாக்கத்திலும் என் பெரியம்மா குடும்பம் அடையாறிலும் இருந்தார்கள். நானும் பெரியம்மா பெண்ணும் ஒரே வயது. பள்ளித் தேர்வுகள் முடிந்ததும் என்னை அப்பா அவர்கள் வீட்டுக்கு கொண்டு விடுவார். விடுமுறை முடிந்து வரவே மனம் வராது. அவளும் எங்கள் வீட்டுக்கு வருவாள்.

இப்பொழுதுள்ள குழந்தைகளை பெரியம்மா சித்தி மாமா வீடு போகலாமா என்றால்...அதெல்லாம் வேண்டாம். எங்காவது டூர் போய் ஜாலியா ஹோட்டலில் சாப்பிட்டு சுற்றி பார்த்து வரலாம்...என்கிறார்கள்.

அறுபது எழுபதுகளில் தொலை பேசி இன்று போல் எல்லா வீட்டிலும் கிடையாது. அப்பொழுது தெரிந்தவர் வீட்டில் தொலை பேசி இருந்தால் அவர்களிடம் அனுமதி பெற்று சில நொடிகளே பேச முடியும். அவர்களும்...ரொம்ப நேரம் பேச வேண்டாம்...என்பார்கள். பொது தொலைபேசி இடத்தில் பெரிய வரிசை இருக்கும். ஒவ்வொருவரும் பேசுவதற்குள் போதும் என்றாகி விடும்.


  இன்று எல்லா வசதியும் கை அருகில் இருப்பதால் மனிதர்கள் நம்மை விட்டு விலகி தொலை தூரம் போய் விட்ட உணர்வே ஏற்படுகிறது.

ஒரு சந்தோஷம் இப்போது பலரின் குழந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் எந்த நேரமும் அவர்களைப் பார்க்கவும் பேசவும் முடிகிறது. ஆனாலும் வயதானவர்களுக்கு ஒரு தலைவலி வந்தாலும் 'குழந்தைகள் அருகில் இல்லையே' என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அதனால்தான் இன்று நிறைய வயதானோர் குடியிருப்புகள் பெருகியுள்

ளன.


  நெருங்கிய உறவுகள் தூரத்தால் மட்டுமல்ல...


  மனதாலும் கூட விலகிப் போன உணர்வு எல்லாருக்குள்ளும் உள்ளது போலும்.

இன்று வசதி வாய்ப்புகளும், பணமும் நிறைய இருந்தாலும்

  மனதில் ஒரு வெறுமை

இருப்பதை உணர முடிகிறது.  இரண்டு வருடமாக இந்தக் கொரோனா வந்தபின் ரொம்பவே மனம் நிம்மதியின்றி இருப்பதை பலரும் சொல்கிறார்கள்.


  அந்த நாளில் சந்தோஷமாக வளர்ந்த உறவுகள் இன்றைய நவீன சாதனங்களாலும்,  நாகரிக மோகங்களாலும் விலகலையே அதிகம் உருவாக்குகின்றன என்பதே என் எண்ணம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1