ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)

 


சென்னையின் நினைவுகள் சொல்லி மாளாது!

1965ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்தபோது 'சங்கு ஊதும் போதெல்லாம் வெளியில் யாரும் வரக்கூடாது. தெருவில் அப்படியே படுத்து விட வேண்டும்' என்ற அறிவிப்பு ரேடியோவில் கேட்கும்போது வெளியில் போகவே பயமாக இருக்கும்.


வெளியூர் சொந்தங்களின் வீட்டுக்கெல்லாம் போனால் 'நீ மெட்ராஸ்காரியாச்சே' என்பார்கள்! நாங்கள் கோடம்பாக்கம் அருகில் இருந்ததால் 'சிவாஜி, M.G.R., பத்மினி, K.R.விஜயாவை

யெல்லாம் பார்த்திருக்கியா' என்று விழி விரியக் கேட்பார்கள், நாங்கள் ஏதோ ஸ்டூடியோவிலேயே குடியிருப்பது போலவும்,

அவர்கள் எங்கள் வீட்டு வழியே தினமும் நடந்து செல்வது போலவும்!!


சென்னையை சுற்றிப் பார்க்கவென்றே அடிக்கடி உறவினர்கள் வருவார்கள்! LIC  கட்டிடம் அந்நாளைய கண்காட்சித் தலம்! அதைக் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ஆச்சரியப் பட்டதுண்டு!இன்று அதைவிட உயரமான அடுக்கு மாடிக் கட்டிடங்களில் குடியிருக்கிறோம்!


ஒருமுறை விஜய வாஹினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்த்ததுண்டு. ஒரே காட்சியை பல தடவை திரும்பத் திரும்ப  நடித்ததைப் பார்த்து 'ஐயோபாவம் நடிகர்கள்' என்ற எண்ணம்தான் தோன்றியது! 


அப்பொழுது கோடம்பாக்கத்தில் பல ஸ்டூடியோக்கள் உண்டு. அவை இப்பொழுது அடுக்குமாடிக் கட்டிடங்களாகிவிட்டது.


அப்பொழுதெல்லாம் நிறைய கடவுள் படங்களும் சிறுவர்களுக்கான நல்ல படங்களும்  வரும். எதையும் விட்டதில்லை! 


திருவிளையாடல், திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம், தெய்வம், துணைவன், ஆதிபராசக்தி கந்தன்கருணை

பாமா விஜயம், பணமா பாசமா, எதிர் நீச்சல், வாராஜாவா, அன்பு சகோதரர்கள், தில்லானா மோகனாம்பாள், சிவந்தமண், உயர்ந்த மனிதன்,வியட்நாம் வீடு, இரு‌ கோடுகள்...இப்படி நல்ல பல படங்களுக்கு என் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள். 


எங்களின் அன்றைய அபிமான தியேட்டர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த லிபர்ட்டி, ராம்தான்! 


தேவி தியேட்டர் ஆரம்பித்தபோது அதில் குளிர்சாதனம், பின்னால் சாயும் நாற்காலி (Pushback Seat) எல்லாம் பார்க்க ஆசைப்பட்டு  'உத்தரவின்றி உள்ளே வா' படத்துக்கு என் அப்பா அழைத்துச் சென்றார்! அந்த சீட்டுகளைத் தடவிப் பார்த்ததும், சாய்ந்தால் விழுந்துவிடுவோமோ என்று பயந்ததும் இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது!


மாதம் ஒருமுறை மெரினாபீச் விஸிட் உண்டு! உலகின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான அதன் அன்றைய அழகே அழகு! அலையை விட்டு நகரவே மனம் வராது! விடுமுறை நாட்களில் மகாபலிபுரம், வேடந்தாங்கல், திருக்கழுகுன்றம், திருநீர்மலை செல்வோம். வடபழனி, சிவவிஷ்ணு ஆலயம், கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோயில்களுக்கு விசேஷ நாட்களில் செல்வோம். மயிலை அறுபத்துமூவர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் செல்லத் தவறியதில்லை. பல கச்சேரிகள், கதாகாலட்சேபங்களுக்கும் என் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள்.. 


விடுமுறைகளில் அடையாரில் இருந்த என் பெரிமா வீட்டுக்கு செல்வேன். நானும் என் பெரிமா பெண்ணும் கொரிப்பதற்கு ஏதாவது எடுத்துக் கொண்டு பஸ்ஸில் காந்தி மண்டபம் செல்வோம். அங்கு ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு பொழுது போக்கிவிட்டு வருவோம்.

அப்பொழுதெல்லாம் தனியாக வெளியில் செல்ல பயந்ததே இல்லை. இந்தக் காலத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பக் கூட பயமாக இருக்கிறது.


1968ல்  திரு அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தது. அச்சமயம் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களான  திருவள்ளுவர்,   ஔவையார், கம்பர், G.U.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் கண்ணகிக்கும் சிலை அமைக்கப்பட்டது.  அச்சமயம் நம் தமிழின் பெருமையை கலைகள் சங்ககாலக் கதைகள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெருமைகளை உரைக்கும் விதமாக நடந்த அலங்கார ஊர்திகளைக் காண  என் அப்பா அழைத்துச் சென்றார். காணக் கண்கொள்ளாக் காட்சி!


அதே ஆண்டு நடந்த உலக வர்த்தகக் கண்காட்சி மிக அருமையான ஒன்று.  உலகநாடுகளின் சிறப்புகளைப் பற்றி யாவரும் அறிய அது ஒரு காரணமாக அமைந்தது. மிகப் பெரிய அந்தப் பொருட்காட்சியைக் காண நாங்கள் இருமுறை சென்றோம். அந்தப் பொருட்காட்சி நடந்த இடமே இன்றைய அண்ணாநகர்.இவை சீர்மிகு சென்னையின் பெருமைக்கு மேலும் மெருகு சேர்த்தன! 


தேர்தல் நேரங்களில் வாசலில் ஓட்டு கேட்க வந்த காமராஜர், MGR, அண்ணாதுரை, கருணாநிதி எல்லாரும் வருவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களைச் சுற்றி இத்தனை கூட்டமுமில்லை..பாதுகாப்பும் கிடையாது. அருகில் சென்று பார்த்து சந்தோஷப் பட்டதுண்டு!


சென்னையில்தான் இனி இருக்கப் போகிறோம் என எண்ணிய என் அப்பா அன்றைய தாம்பரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ரூ. 500ல் ஒரு இடம் வாங்கினார். அப்பொழுது தாம்பரம் அடுத்த ஊர் மாதிரி இருந்தது. மாற்றல் வந்ததால் அதை வேறு நண்பரிடம் விற்றுவிட்டார்.  


'71அக்டோபரில் என் அப்பாவுக்கு வங்கியில் பதவி உயர்வு கொடுத்து ஈரோடு மாற்றலாகியது.  11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் நான். 


நான் மாநில முதல் இரண்டாமிடம் வாங்குவேன் என்று எதிர் பார்த்த சென்னை பள்ளி ஆசிரியைகள் என்னை இங்கேயே படிப்பைத் தொடரச் சொன்னார்கள். நானும் என் தோழிகளும் WCCயில் படிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டிருந்தோம். 

ஆனால் இடையில் வந்த இந்த மாற்றம் என் வாழ்க்கையில் கல்லூரிப் படிப்புக்கே இடமில்லாமல் செய்துவிட்டது.


என் அம்மா சென்னையில் எங்களுடன் தனியாக இருக்க விரும்பவில்லை. ஈரோடிலிருந்த கலைமகள் கல்வி நிலையம் பள்ளியில் பரீட்சை எழுதி என்னை அங்கு சேர்த்து விட்டார் என் அப்பா.  அத்துடன் மனம்கவர்ந்த மதராஸ் வாசம் முடிந்தது. 


பின் 40 வருடங்களுக்குப் பின் 2011ல் மீண்டும் சென்னை வாசம்! அது பற்றிய பதிவு தொடரும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)