ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

 


ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!(1)

இன்று நம் சிங்காரச் சென்னைக்கு 382வது பிறந்தநாள்! Madras Day என்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி  கொண்டாடப்
படுகிறது.சென்னையின் மெரினா கடற்கரையும் மகாபலிபுரமும் உலகப் புகழ் பெற்ற இடங்களாயிற்றே!

சென்னை..என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் சென்னையில்தான் ஆரம்பித்தது. அதை மறப்பதெப்படி? அன்றைய மதராஸ்க்கும்...
இன்றைய சென்னைக்கும்..
அடேயப்பா..எத்தனை மாற்றங்கள்!

1961 முதல் '71வரை சென்னை வாசம். நாங்கள் குடியிருந்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கத்துக்கு
நடுவில் இருந்த சூளை
மேட்டில், பஜனை கோவில் தெருவில்.

நான் ஐந்தாம் வகுப்பு வரை கார்ப்பரேஷன் பள்ளியிலும், பின்  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அந்த நாட்கள் கவலையின்றி இருந்த கனாக்காலம்!

பள்ளி வீட்டிற்கு அருகில்..மதியம்  வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன். நான்தான் பள்ளித் தலைவி. நான் நன்றாகப் பாடுவேன் என்பதால் தினமும் கடவுள் வாழ்த்து பாடுவதோடு பள்ளியின் எல்லா நிகழ்ச்சிகளிலும்  நான்தான் பாடுவேன். பள்ளியின் ஆஸ்தான பாடகி!

கே.பாலாஜியின் முதல் வெற்றிப்
படமான ‘தங்கை’ படத்தில் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்த அந்நாளைய நடிகை ஜெய
கௌசல்யா என் பள்ளியில் படித்தார். என்னை விட சீனியர். அவர் 'சிலநாள்' மட்டுமே பள்ளிக்கு வரும்போது நாங்கள் அவரை  வாய்பிளக்க 'ஆ'வென்று  பார்ப்போம்!!

பின்னணிப் பாடகர் மறைந்த திரு S.P.பாலசுப்ரமணியனீ அவர்களின்  அத்தை வீடு எங்கள் வீட்டின் பின்புறம் இருந்தது.அங்கு வரும் அவர் 'இயற்கை எனும் இளைய கன்னி' பாடல் மற்றும் தெலுங்கில் அவர் பாடிய பாடல்களையும்  பாடிக் கொண்டிருப்பார்.  நடந்துதான் செல்வார். அவர் இன்று இத்தனை பெரிய பாடகராவார் என்று தெரிந்திருந்தால் அன்றே அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம்!
இன்றைய மொபைல் அன்று இருந்திருந்தால் அவரோடு இணைந்து நின்று புகைப்படம் எடுத்திருக்கலாம்!

அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீவெங்கட்ரமண பக்தசபாவில்
சங்கீதம் கற்றுக் கொண்டேன். அங்கு ஸ்ரீராமநவமி, தியாகராஜ உத்சவமெல்லாம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அந்த இடம் அக்ரஹாரம் மாதிரிதான். மார்கழி முழுதும் நகர் பஜனை உண்டு. பாட்டில் நான் தேர்ச்சி பெறக் காரணம் #பெருமைமிகு சென்னைதான்!

எங்கள் வீடு அந்நாளைய சென்னை வீடுகள் போல் ரயில்வே கம்பார்ட்மென்ட் மாதிரி வரிசையாக மூன்று அறைகள். கட்டில்,சோபா எல்லாம் கிடையாது. இரண்டே வீடுகள். வாசலில் பெரிய மைதானம் உண்டு. அதுதான் எங்கள் விளையாடுமிடம்.
அந்தப் பெரிய வாசலில் அழகான  கோலங்களை என் அம்மா வழிகாட்டுதலில் நான் கற்றுக் கொண்டது #கவின்மிகு சென்னையில்தான்!

நாங்கள் பத்து ஆண்டுகள் அதே வீட்டில்தான் இருந்தோம்.
வீட்டுக்காரர் ஒருநாளும் வந்து பார்த்ததில்லை. நான்தான் ஒவ்வொரு மாதமும் வாடகையை அந்தத் தெரு கடைசியிலிருந்த அவர் வீட்டில் கொண்டு கொடுத்து வருவேன். நாங்கள் காலி செய்தபோது வாடகை 50 ரூபாய் கொடுத்தோம்.

எல்லா வேலைகளும் கிணற்றில் தண்ணீர் இழுத்து தான் செய்ய வேண்டும். பக்கத்தில் துவைக்கும் கல். என் அம்மா தோய்க்கும் போது நான்தான் தண்ணீர் இழுத்துக் கொடுப்பேன். வெந்நீர் அறையில் அடுப்புப் புகையில் கண் எரியக் குளிப்பதற்குள் போதும் என்றாகிவிடும். அங்கு தண்ணீர் கஷ்டமே வந்ததில்லை. குடிக்க, சமைக்க எல்லாம் அந்தத் தண்ணீர்தான்.

அன்று மிக்ஸி, கிரைண்டர்,
டி.வி.இல்லாத நாட்கள். தினமும் மாலை பள்ளியிலிருந்து வந்து நான்தான் கல்லுரலில் இட்லி தோசைக்கு மாவரைக்க உதவுவேன்! ரேடியோவில்தான் பாட்டு,நாடகம், நியூஸ்,சினிமா (3மணிநேர சினிமா 1மணி நேரத்தில்!)எல்லாமே கேட்போம்.

முத்துக்குவியலும் பாப்பா மலரும் அதில் பேசும் வானொலி அண்ணாவின் குரலும் இன்றும் என் நினைவலைகளில்! வேளை தவறாமல் செய்திகள் கேட்போம். வானொலியில் செய்தி வாசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி எங்கள் உறவினர் என்று என் தோழிகளிடம் சொல்லி பெருமை பட்டுக் கொள்வேன்!சென்னை ஞாபகங்கள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)