#ஊரடங்கில் நாம்..மறக்க முடியாத உணவகங்கள்!
உணவகங்களைப் பற்றி நினைக்கும் போதே மனம் குதூகலிக்கிறது. அது ஒரு சின்ன ஹோட்டலோ அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலோ...அப்பாடா என்று சமைக்காமல் கொள்ளாமல் சாப்பிடும் அனுபவம் இருக்கே..அதுவும் தினம் என்ன சமைப்பது என்று திண்டாடும் பெண்களாகிய நமக்கு அது சுவர்க்க போகம் என்பேன்! கிராமம், நகரம் உள்நாடு வெளிநாடு என்று பல ஹோட்டல்களில் சாப்பிட்டு ரசித்த ருசித்த நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்!
சென்னையில் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் அவர்களின் Accord Metropolitan ஹோட்டலுக்கு என் பேத்தியின் பிறந்த நாளுக்காக சென்றிருந்தோம். ஆஹா..அருமையான அயிட்டங்கள்! விதவிதமாய் வண்ண வண்ணமாய் இனிப்புகள்! இட்லி தோசை அடை வடை பிரியாணி சப்பாத்தி சப்ஜிகள் என்று அத்தனை சாப்பாட்டு வகைகள்! எது வேண்டுமானாலும் சுடச்சுடச் செய்து பரிமாறுவார்கள்!
சைவ உணவை எதிர்பார்க்கும் நாங்கள் பல வெளிநாடு
களில் உணவகங்களைத் தேடிச் சென்றதுண்டு. அதிலும் கம்போடியா பாலி போன்ற இடங்களில் பெரும்பாலும் அசைவ உணவகங்களே அதிகம். கம்போடியாவில் அங்கோர்வாட் ஆலயங்களை சுற்றிப் பார்த்து அசந்துவிட்ட எங்களுக்கு நல்ல பசி! வழியில் கிடைத்த பழங்கள் போதவில்லை. அத்துடன் மொறுமொறுவென்று வறுத்த வண்டுகளும் பூச்சிகளும் கூடைகளில் விற்கப் படுகின்றன. அவற்றைப் பார்த்து குமட்டல் வந்துவிட்டது.
ஹோட்டலைத் தேடிக் கொண்டு போனபோது வழியில் தமிழ் பேசும் ஒருவரைப் பார்த்து (தமிழரைப் பார்த்தால் நாம் விடுவோமா!) இந்திய உணவு கிடைக்குமா என்றபோது..இப்படியே நேரா போனா திருநெல்வேலிகாரங்க தோசைக்கடை இருக்கு. விதவிதமான தோசைங்க.சூப்பரா இருக்கு...என்றதும் நேராக அங்கு போய்தான் நின்றோம்! ஆசை ஆசையாய் தோசை சாப்பிட்டு பசியடங்கினோம்!
மலேசியா போனபோது பிஸ்ஸாஹட் சென்றோம். அங்கு அசைவ பிஸ்ஸாக்கள்தான் அத்தனையும்! அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி வெறும் வெங்காயம் தக்காளி நறுக்கிப் போட்டு பிஸ்ஸா சாப்பிட்டதை ஆச்சரியமாகப் பார்த்தார் அந்த ஸர்வர்! அசைவம் சாப்பிட மாட்டீர்களா என்று விழியகலக் கேள்வி வேறு!
பாலிக்கு சென்றபோதும் இதே பிரச்னை. விதவிதமான மீன் உணவுகள் அங்கு அதிகம்! மொபைலை வைத்துத் தேடித்தேடி ஒரு இந்திய உணவகத்தைக் கண்டுபிடித்து சென்று ரொட்டி, சப்ஜி, நான் என்று சாப்பிட்டோம்! எங்களுக்கு வட இந்திய உணவு சாப்பிடப் பழக்கம் என்பதால் கஷ்டமில்லை. தென்னிந்திய உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு மிகவும் கஷ்டம்தான்!
கிளப் மஹீந்திராவில் அங்கத்தினர்களாக இருப்பதால் அந்த ஹோட்டலில் தங்குவதுண்டு. கொரோனாவுக்கு முன்பு 2019 டிசம்பரில் நானும் என் கணவரும் கொடைக்கானல் சென்றிருந்தோம். ஏற்கெனவே கொடைக்கானல் பார்த்த இடம்தான் என்றாலும் மூன்று நாட்கள் ஜாலியாக ரெஸ்ட் எடுத்து சாப்பிட்டு தூங்கி ரிலாக்ஸ் செய்து வரலாமென்று வரலாமென்று சென்றோம்! Le Paush என்ற அழகான பெரிய ஸ்டார் ஹோட்டல்! ஊரைவிட்டு தள்ளி சற்றே உயரமான இடம். கண்ணுக்கு அழகான இயற்கைக் காட்சிகள்! சுகமான குளிர்..சூப்பர் சாப்பாடு! இரவு உணவில் விதவிதமாய் 25 இனிப்புகள்! வித்யாசமான சாப்பாட்டு வகைகள்! ஆஹா..அற்புதமான நாட்கள்! மீண்டும் செல்ல எப்ப கொரோனா முடிந்து வாய்ப்பு கிடைக்குமோ என்று காத்திருக்கிறேன்!!
ஹைதராபாதில் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! சாப்பாடும் விதவிதமான சுவைகளில் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும்! சென்ற ஆண்டு தினம் ஒரு ஹோட்டலுக்கு சென்றோம்! என் தம்பியும் அங்கு இருப்பதால் எல்லோருமாக Gud Gudee (நாவில் நீர்வரவைக்கும் என்று பொருளாம்!) என்ற ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். புதிது புதிதான பெயர்களில் இங்கு சமையல் வகைகள் பரிமாறுவார்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக