ஊரடங்கில் நாம்..சமையலறை
சமையலறை சந்தோஷங்கள்!(1)
சமையல் செய்ய மையல் இருந்தாலே சிறப்பாக ருசியாக அமையும். ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லாமல் மனமொன்றி சமைக்க வேண்டும். கொரோனா வந்தாலும் வந்தது. இந்த இளைய தலைமுறையை மாற்றி விட்டது.
தனிக் குடித்தனம் செய்யும் எல்லா ஆண்களும் பெண்களும் சாப்பிட ஹோட்டல்கள் இல்லாமல் போக, சமையல், வீட்டு வேலைக்கு வருபவர்களும் நின்றுவிட வேறு வழியின்றி கரண்டியைக் கையில் பிடித்து சுயம்பாகம் செய்ய ஆரம்பித்து விட்டார்களே! Swiggy, Zomato என்று என்ஜாய் செய்து கொண்டு சமையலறைக்கு பூட்டு போட்டிருந்த பலரையும் சமையல்காரர்களாக மாற்றிவிட்டது இந்த lock down!!
ஆனால் வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கோ இரட்டிப்பு வேலை. காலையில் கம்ப்யூட்டர் முன் போய் கணவனும், மனைவியும் வேலை செய்ய அமர்ந்து விட்டால் வீடு, சமையல் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு பாவம் படாதபாடு படுகிறார்கள்.
என் உறவுப் பெண்மணி ஒருவர் தான் காஃபி போட்ட கதையை சிரித்துக் கொண்டே கூறுவார். மிக நன்றாக சமையல் செய்யும் அவர் திருமணமானவுடன் அவர் மாமியார் 'ஃபில்டர்ல காபிப்பொடி போட்டு மேல தண்ணீர் விட்டா டிகாக்ஷன் கீழ இறங்கும்' என்றாராம். இவரும் மாமியார் சொன்னதை சிரமேற்கொண்டு காஃபி போட்டாராம். எப்படி? ஃபில்டரில் வெந்நீர் விடணும் என்று மாமியார் சொல்லாததால் பச்சைத் தண்ணீரை விட்டு விட்டாராம்! அதன்பின் மாமியாரிடம் டோஸ் வாங்கினதை கதையாகச் சொல்வார்!!
இன்னொரு பெண் அவர் பாயசம் செய்த கதையை பரவசமாக சொல்வார். அவருக்கு நெடுநாள் குழந்தையில்லாததால் பெரியவர் ஒருவர் ரவை பாயசம் வைத்து பத்து சின்னக் குழந்தைகளுக்கு கொடுக்கச் சொன்னாராம். அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ரவா வேண்டும் என்று தெரியாமல் 1 கிலோ ரவை வாங்கிப் பாயசம் வைத்தால் அதற்கு பால் விட விடப் போதவில்லையாம்! வீட்டிலிருந்த சர்க்கரை முழுவதும் காலியாம்! 50 பேர் சாப்பிடும் அளவு பாயசம் இருந்ததாம்!
நான் திருமணமான புதிதில் ஒருமுறை பிட்டு செய்தபோது அது உதிர்ந்த பிட்டாக இல்லாமல் மொத்தையாகி விட்டது. மறுபடி அரிசி வறுத்து வேகவிட்டு கலந்தபோது தித்திப்பு குறைந்து விட்டது. என்ன செய்வது? அதில் காராமணி வறுத்து வேகவிட்டு சேர்த்து காரடை தட்டி வேகவிட்டு மாலை டிஃபனாக்கி விட்டேன். ..என்ன இன்னிக்கு நோன்படை பண்ணிருக்க..
என்ற என்னவரிடம்..ஆசையா இருந்தது. பண்ணினேன்..
என்று சொல்லிவிட்டேன்!
திருமணமான புதிதில் சாம்பார் கெட்டியாக இல்லாவிட்டால்...இன்னிக்கு குழம்பில் அலைமகள் கடாட்சம் நிறைய...என்றும் அரிசியில் ஒரு கல் வாயில் கிடைத்தால் (அந்நாட்களில் அரிசி வாங்கி அதிலுள்ள கற்களை பொறுக்கிதான் சமைப்போம்)...மலைமகள் நம்மாத்திலயே குடியிருக்கா...என்றும் சொல்வார் என் கணவர்!
பிறகுதான் எனக்கு இதன் அர்த்தம் புரிந்தது! சாப்பாட்டில் உப்பு இல்லை என்றால் சொல்ல மாட்டார். அவர் இலையில் உப்பு போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர் என்பதால் அதை சேர்த்து சாப்பிட்டு விட்டு ஆஃபீஸ் போய்விடுவார். மாலை வந்ததும் கேட்டால்...நான் பெற்ற இன்பம் நீயும் பெற வேண்டாமா...என்று சிரிப்பார்! என்ன ஒரு வில்லத்தனம்!
என் அம்மா மிக அருமையாக ஸ்வீட் எல்லாம் செய்வார். பாதுஷா ஸ்வீட் கடைகளில் இருப்பது போல் டேஸ்ட் சூப்பராக இருக்கும். நான் பலமுறை செய்து பார்த்தும் சரியாக வராத இனிப்பு பாதுஷா மட்டுமே. இது என் வீட்டில் அதிகம் விரும்பாததால் செய்யும் வாய்ப்பு குறைவு. என் அப்பாவுக்கு மோர்க்கூழ், மெதுவடை எல்லாம் மிக விருப்பம். அப்பா என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் செய்து கொடுப்பேன். ..ஏம்பா தினமும் மோர்க்கூழ், வடை பண்ணினாலும் சாப்பிடுவாய் போலிருக்கே..என்று கிண்டல் செய்வேன். ருசித்து சாப்பிடுவார். மாலை வேளை டீ சாப்பிடும்போது..ரெண்டு அரிசி அப்பளம் சுட்டுக் கொடு..என்று அத்துடன் டீயை ருசித்துக் குடிப்பார்!
வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.
தஞ்சாவூரை சேர்ந்த பையனுக்கு ஒரு பாலக்காட்டு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்களாம்! இரண்டு வீட்டு முறைகளிலும் பேச்சு முதற்கொண்டு வித்யாசமாக இருக்கும். மாமியார் ஒருநாள் மருமகளிடம் அரிசியைப் பாத்திரத்தில் போட்டு
...கொல்லையில் போய் அரிசியைக் களைந்து கொண்டு வா.சாதம் வைக்கணும்...என்றாராம்! அவளோ எல்லா அரிசியையும் கொட்டிவிட்டு வெறும் பாத்திரம் கொண்டுவர, மாமியார் அரிசி எங்கே? என்றபோது
...நீங்கதான களையச் சொன்னேள்?...என்றாளாம்!
களைவது என்றால் தமிழில் அரிசியை சுத்தம் செய்வது.
மலையாளத்தில் கொட்டி விடுவது என்று பொருள்!
மொத்தத்தில் சமையலறையில் சந்தோஷமும் உண்டு..சங்கடமும் உண்டு..சந்தர்ப்பவாதங்களும் உண்டு..அவ்வப்போது சண்டையும் உண்டு!!
கருத்துகள்
கருத்துரையிடுக