நான் பார்த்து வியந்த தேலதை..


ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது அந்தக் காலத்தில் இருந்த நிலைமை. அது பொய்யில்லை என்பதை பல முதிய பெண்மணிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையும் சமாளித்து வாழ்ந்த பெண்களும் அந்நாளில் அதிகமே.


அந்த விதத்தில் தான் புக்ககத்தாரால் வஞ்சிக்கப்பட்டு இழந்த வாழ்க்கையை தானே முயற்சித்து தனியாக தைர்யமாக யார் உதவியுமின்றி தன்னை உயர்வாக்கிக் கொண்ட என் புக்ககத்து சித்திபாட்டியே என் கதாநாயகி! இன்று அவர் இல்லையெனினும் என் நேரே நின்று பேசுவது போல உணர்கிறேன்.

என் கணவரின் சித்திப் பாட்டி அதாவது என் மாமியாரின் சொந்த சித்தி. தர்மாம்பாள் என்ற அவரை தம்முப் பாட்டி என்றுதான் நாங்கள் அழைப்போம்.அந்த நாளையப் பெண்ணான அவரது தைர்யமும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்த விஷயங்கள்!

அவர் சமையல் கலையில் வல்லவர். அவர் சிறு வயதில் கற்றுக் கொண்ட சமையல்தான் அவர் வாழ்க்கைக்கே ஆதாரமாக இருக்கப் போகிறது என்று அவர் நினைத்திருப்பாரா?

குடந்தையில் நாங்கள் இருந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஜாங்கிரி, முறுக்கெல்லாம் செய்து
தருவார்! விசேஷங்களுக்கு சமையல் செய்வதுடன், இனிப்பு கார வகைகளும் செய்து தருவார். பேசிக் கொண்டே படபடவென்று அவர் கை வேலை செய்வது எனக்கு வியப்பாக இருக்கும்! உதவி என்றால் உடன் வந்து எவருக்கும் உதவும் நற்குணம்! அவர் பட்சணம் செய்யும்போது நானும் கற்றதோடு அவரின் வாழ்க்கை பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன்.

அவர்  ஒரு நூற்றாண்டிற்கு முன்பு பிறந்தவர். என் மாமியாரைவிட சில மாதங்களே பெரியவர். என் மாமியாரின் அம்மாவும், அவர் பாட்டியும் ஒரே நேரம் கர்ப்பமாயிருந்ததாகவும்,என் மாமியாரின் அம்மா மாப்பிள்ளை எதிரில் வரவே மிகவும் வெட்கப்படுவார் என்றும் சொல்வார்!

ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து 15 வயதில் திருமணம் நடந்தது. அந்தக்கால முறையில் திருமணம் நடந்தது முதலே மடிசார். வீட்டு வேலைகள் அனைத்தும் அவர் தலையில். அவர் புகுந்த வீட்டில் பட்ட கஷ்டங்களைக் கேட்டால் மனம் கலங்கிவிடும். அவரை மருமகளாக அல்ல..ஒரு பெண்ணாகவே நடத்தியதில்லை என்பார்.

மாமியாரின் கொடுமை மட்டுமல்லாது அவரது இரண்டு புக்ககத்து விதவை அத்தைகளும் படுத்திய பாட்டை கதை கதையாக சொல்லி வருத்தப் படுவார். வீட்டு வேலைகள் அத்தனையும் செய்துவிட்டு ஒருவேளை சாப்பாடு கூட சரியாகப் போடாமல் கஷ்டப் படுத்துவார்களாம்.

'உங்க ஆத்துக்காரர்ட்ட சொல்ல மாட்டேளா'ன்னு கேட்டால், 'என்னை அவர்கூட பேச விட்டால்தானே' என்பார். அவருக்கு காஃபி கொடுக்கும்போது பேசலாம்னு பார்த்தா மூன்று பெண்களும் சேர்ந்து பேச வந்து விடுவார்களாம்.

தனியாகப் பேசுவதைக் கண்டாலே..'அவனை மயக்கப் பார்க்கறியா' என்பதோடு அவர்களைத் தனியாகப் படுக்கவும் அனுமதிக்க மாட்டார்களாம். அவர் கணவரும் பயந்து கொண்டு அவர்கள் சொல்வதைத்தான் கேட்பாராம்.

ஏழெட்டு மாதமாகியும் கர்ப்பமாகவில்லை என்ற சாக்குடன் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட, அவரின் பெற்றோர் திரும்ப சமாதானம் செய்து கொண்டுவிட, இப்படியே இரண்டு வருடங்களாக... 'உங்கள் பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் நாங்கள் வேறு திருமணம் செய்யப் போகிறோம்' (அவரோடு படுத்தால்தானே எனக்கு குழந்தை பிறக்கும் என்பார் பாட்டி!) என்று சொல்லி மொத்தமாக திருப்பி அனுப்பிவிட, பாவம் அவர் வாழாவெட்டி என்ற பெயரோடு பிறந்தவீட்டில் இருந்த நாட்களின் கொடுமையை சொல்லும்போது என் கண்கள் கலங்கிவிடும்.

17 வயதில் ஒரு பெண் மணமாகி வாழாமலிருப்பது எத்தனை கஷ்டமான விஷயம். அதிலும் ஊராரின் ஏச்சு பேச்சு வேறு. இந்தக் காலம் போல் இன்னொரு திருமணமும் செய்ய முடியாத நிலை.

'இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறக்காவிட்டாலும், அவள் சாமர்த்தியமாக இருந்து விட்டாள். நான்தான் ஏமாளி' என்று அழுவார். பெற்றோர் காலத்துக்கு பின் உடன் பிறப்புகளுடன் அவர்களுக்கு சுமையாக இருக்க முடியாதவர் வெளியிடங்களுக்கு சென்று பட்சணம், சமையல் செய்து கொடுத்து சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தாராம்.

இடையில் கணவரின் மரணம் கேட்டு அந்தக்கால முறையில் மடி செய்து விட்டார்களாம். அவருடன் வாழாவிட்டாலும் இதுதான் 'அவரால் நான் பெற்ற கோலம்' என்பார். ஆனால் வருடம் தவறாமல் அவர் இறந்த அன்று திதி செய்து அவருக்கு சாப்பாடு போட்டு விடுவேன் என்பார்!

அவருக்கு 35 வயதாக இருந்தபோது இவரைப் பற்றி அறிந்த ஒருவர் 'அரசு வேலையில் இருந்த உங்கள் கணவருக்கு பென்ஷன் கிடைக்கும்' என்று சொல்ல, 'அதற்கு ஆதாரம் இல்லையே?'என்றபோது, 'இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு கிடைக்காது' என்றபோது யோசித்திருக்கிறார்!

தன்னைத் திருமணம் செய்து கொண்டு ஒழுங்காக வாழ்க்கை நடத்தாததால்தானே தான் இன்று இப்படி எல்லோராலும் ஏசப்படுகிறோம் என்று நிறைய அழுதபின் ஒரு முடிவுக்கு வந்தாராம். அந்த மனிதரின் பென்ஷனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற உறுதியுடன் தனியாக அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

அவர் கணவர் ஆசிரியராக
பணி புரிந்த பள்ளியில் சென்று விபரங்களை சொல்லி அவர் வேலை பற்றிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு, பென்ஷன் அலுவலகத்திற்கு சென்று அந்தப் பெயரில் யாராவது பென்ஷன் வாங்குகிறார்களா என்று விசாரித்ததில்,  இல்லை என்பதை அறிந்தார். தான் அவரது மனைவி என்பதை நம்பாதவர்கள் சாட்சிகளைக் கேட்டனராம்.

தன்னிடமிருந்த திருமணப் பத்திரிகை, கணவரின் புகைப்படம் மற்றும் அவர் பள்ளியில் பெற்ற விபரங்களுடன் பலமுறை சென்றாராம். அந்நாளில் யாரும் கோர்ட்டுக்கு போய் விவாகரத்து செய்யாததால் பத்திரம் இல்லாததோடு, மீண்டும் அவர் திருமணம் செய்ததற்கான சாட்சியும் இல்லாததால், இவரே அவர் வாரிசு என்று நிரூபணம் செய்திருக்கிறார். யாருடைய துணையுமின்றி தானே அத்தனை விபரம் சேர்த்து  பென்ஷன் வாங்கிய அவர் தைரியமும் தன்னம்பிக்கையும் என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள்.

அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அரியர்ஸ் சேர்ந்து வர, பாட்டி ஒரே நாளில் பணக்காரியாகிவிட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே! ஆனால் அதற்காக தான் பல வருடங்கள் நடந்த நடையும், அவர்களுக்கு கொடுத்த லஞ்சமும் வீண் போகவில்லை என்று மிகப் பெருமையாக சொல்வார்!

'ஏன் பாட்டி! இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பென்ஷனை ஏன் வாங்கினேள்?' என்றால்,...என்னைக் கடைசிவரைக் காப்பாற்றுவேன் என்று என் கைப்பிடித்தவர் தைரியமில்லாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு நடுவில் விட்டதால்தானே இந்த கஷ்டம். இன்று நான் அவர் பணத்தில் வாழ்கிறேன் என்ற நினைவே நான் பெற்ற வெற்றி. ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பழி வாங்கிய சந்தோஷம்... என்றபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

வெறும் மூன்றாவது வரை படித்தவர் தனியாக,
தைரியமாக இத்தனை விபரங்களை சேகரித்து மாதாமாதம் பென்ஷன் வாங்கியது எவ்வளவு பெரிய விஷயம். அந்த நாளில் இப்படிப்பட்ட பெண்களைக் காண்பதே அபூர்வம்தானே? பதினைந்து வருடம் முன்பு அவர் மறைந்த விஷயம் என் மனதை மிகவும் பாதித்தது.

என்னைப் பொறுத்தவரை இவர் கணவனோடு வாழ கொடுத்து வைக்காவிட்டாலும், தன் திறமையால் கணவர் பெயரால் கிடைத்த பணத்துடன் வாழ்ந்த இவரும் ஒரு தேவதையே என்பேன்!


கருத்துகள்