ஊரடங்கில் நான்..ஊர் சுற்றுவோமா..

என் கனவு நனவானது!

பயணங்கள் நம்மை உற்சாகப்படுத்துகின்றன... உயிர்ப்பூட்டுகின்றன! வாழ்வை ரசிக்க வைக்கின்றன.எனக்கு பல நாடுகளை சுற்றிப் பார்ப்பது மிக பிடித்தமானது. என் பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் அவற்றை சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது! கிட்டத்தட்ட பதத்து நாடுகளுக்கு மேல் சென்றிருந்தாலும் என் மனம் கவர்ந்த நாடு கம்போடியா.


என் பிள்ளை சிங்கப்பூரில் இருந்தபோது கம்போடியாவுக்கு சென்றோம். இந்திய அரசர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட அங்குள்ள அங்கோர்வாட் ஆலயம்தான் உலகின் மிகப் பெரிய கோயில் என போற்றப்படுகிறது! எந்த இடம் சென்றாலும் அங்குள்ள சிறப்புகளைப் படித்து எழுதி வைத்துக் கொண்டே செல்வேன்.

அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து,
வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோ
வினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது.


முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக காம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு,
தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது காம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1400) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.

அங்கோர் என்ற நகரம் அந்நாளில் 'க்மேர்' பேரரசின் தலைநகரமாக விளங்கியது.ஒரு லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்டிருந்த இவ்வூர் உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

ஆயிரம் லிங்க நதி..

இங்கு அரசாண்ட மன்னர்கள் சைவம், வைணவம், பௌத்தம் என்று பல மதங்களை கடைப் பிடித்தனர். ஆலயங்களையும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாகக் கட்டியுள்ளனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் சிவபக்தனாக விளங்கினான்.

நாம்குலேன் என்ற மலையில் நதியில் பல சிவலிங்கங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றவன்.'பால் ஸ்பீன்' (Khbal Spean) மற்றும் 'நாம் குலேன்' (Khnam Kulen)  என்ற மலைகளில் ஓடும் நதி 'ஆயிரம் லிங்க நதி' எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும், கிரீச்சிடும் பல பூச்சிகளும் நிறைந்த கரடு முரடான காட்டு மலைப் பாதையில் சுமார் 2 கி. மீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரேவடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். இது தவிர நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன்,
கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

இந்நதி கம்போடியாவின் மிகப் புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்நதி நீரே நாட்டின் பல தேவைகளுக்கு உதவுகிறது.இந்த தெய்வச் சிற்பங்களின் வழியே ஓடி வரும் இந்த நீரால் நாடும்,மக்களும் புனிதம் அடைவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இப்படிப்பட்ட தெய்வ உருவங்கள் அங்கு செதுக்கப் பட்டதாம்.

இம்மலை ஏறிச் செல்வது சற்று கடினம் என்றாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம். கம்போடியா செல்பவர்கள் கண்டிப்பாக கண்டு ரசிக்க வேண்டிய இடம் இது. நாம்குலேனில் ஒரு அழகிய அருவியும், புத்தர் ஆலயமும் உள்ளது.

இரண்டாம் சூர்ய வர்மனால் உருவாக்கப்பட்ட அங்கோர்வாட் ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாலயத்தைக் கட்டி முடிக்க 37 ஆண்டுகள் ஆயிற்றாம். அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இந்து மதத்திலிருந்து மகாயான புத்த மதத்தைத் தழுவி அங்கோர்வாட் ஆலயத்தின் உள்ளிருந்த இந்துக் கடவுள்களை அகற்றி புத்தரின் திருவுருவங்களை நிறுவினான். அவனுக்குப் பின் கடைசியாக ஆட்சி செய்த எட்டாம் ஜெயவர்மன் மீண்டும் இந்து மதத்தைப் பின்பற்றி இந்துக் கடவுள்களைப் பிரதிஷ்டை செய்தான்.

சீர்குலைந்த கம்போடியா
பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் சயாம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளால் அடிக்கடி தாக்கப்பட்டதால் கம்போடியா சீர்குலைந்து, தம் சிறப்புகளை இழந்து காடுகளுக்குள் மறைந்து போனது. அவ்வழியே யாத்திரை சென்ற புத்த பிட்சுக்கள் இவ்வாலயத்தை தியானம் செய்யும் இடமாக கொண்டனர். பல நூறு ஆண்டுகள் காடுகளுக்குள் காணாமல் போயிருந்த அங்கோர்வாட் ஆலயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை மேற்கத்தியரான 'ஹென்றி மோஹாட்' என்பவரையே சேரும். 1860ல் அவர் கண்டுபிடித்த பின்பே, அங்கோர்வாட் ஆலயங்களின் பெருமையும், அழகும் வெளி உலகத்துக்குத் தெரிந்து, சீரமைக்கப்பட்டு சுற்றுலாத் தலமாக மாறியது.

அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள்.500 ஏக்கர் அளவில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் பார்ப்பவரை பிரமிக்க   வைக்கிறது. உலகின் மிகப் பெரிய ஆலயம் என்ற பெருமை பெற்ற இவ்வாலயத்தின் சிறப்பான அமைப்பு மேரு மலைக்கு இணையாகக் கூறப்படுகிறது.  65 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தை சுற்றிலும் நான்கு சிறிய கோபுரங்களைக் கொண்ட இதன் சுவர்கள்   மணற்பாறைகளால் கட்டப்பட்டது.வெளிச் சுவர்கள் நான்கறை  மீட்டர் உயரத்தில்,30 மீட்டர் சுற்றளவில் பெரிய மைதானமும், அதைச் சுற்றிலும் 190 மீ. அகலமுள்ள அகழியும் கொண்டது.பெரிய அகழிக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலய வெளிச் சுவர் 1300 மீட்டர் நீளமும், 1500 மீட்டர் அகலமும் கொண்டு, ஒரு  கிலோ மீட்டர் சதுர பரப்பளவும் கொண்டதுநான்கு பக்க நுழைவுவாயில்கள் நகர வீதிகளுடன் இணைக்கப்பட்டு அளவெடுத்தாற்போல் அழகு, உயரம் இவற்றுடன் அமையப்பெற்று காணப்படுகிறது. ஆலயத்தை வெளியிலிருந்து காணும் போதே அதன் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.

சிங்க நுழை வாயில்
இரண்டு சிங்கங்களைக் காவலாகக் கொண்ட மேற்கு வாயில் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். அகழியைக் கடக்க பாலம் உள்ளது. நீண்ட ஐந்து, ஏழு தலை நாகங்களைக் காவலாகக் கொண்டு, நீண்ட பிரகாரங்கள், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரங்கள், கல்தூண்களால் கட்டப்பட்ட வரிசையான சன்னல்கள், செங்குத்தான மிகக் குறுகிய படிகள் கொண்ட இவ்வாலயங்
களின் அழகு நம்மை வியக்க வைக்கிறது.

வெளியிலிருந்து பார்த்து அதிசயித்த நம்மை  உள்ளே சென்றதும் அங்கு காணப்படும் சிற்பக் கலை நம்மை மெய்மறக்கச் செய்கிறது. அழகாக வித்யாசமான வடிவங்களில் அமைக்கப் பட்டிருக்கும் சதுர வடிவ ஜன்னல்களும், பூக்கள் வரையப்பட்ட மேல் விதானங்களும் நம் கண்களுக்கு அற்புதமான  விருந்து. மூன்று நிலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரமும், அதனைச் சுற்றி அமைந்துள்ள நான்கு கோபுரங்களும் மேருமலையைக் குறிக்கிறது. சூரிய வர்மனின் தலைநகரமாக விளங்கிய 'அங்கோர்வாட்' விஷ்ணுவின் ஆலயமாகும்.

ஆலயச் சுவர்களில்
'அப்சரஸ்' எனும் தேவ மங்கையரின் விதவிதமான தோற்றங்களைக் காணலாம். கோபுர நுழைவு வாயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கோவிலில் மட்டும் 2000 அப்சரஸ் சிற்பங்கள் உள்ளதாம்.

கீழ்நிலையின் சுற்றுச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள குருக்ஷேத்திரப் போர், ராமாயணக் காட்சிகள், சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கங்கள் மற்றும் தேவாசுரர் பாற்கடல் கடையும் காட்சியும், சூரியவர்மன் எதிரி நாடுகளுடன் போரிட்ட காட்சிகளும் தத்ரூபமாக மனம் கவரும் விதத்தில் காட்சியளிக்கின்றன.

இவ்வாலயத்தில் மட்டும் 8 கைகள் கூடிய 15 அடி உயர விஷ்ணு சிலை காணப்படுகிறது.
அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இரண்டு மதத்தையும் மாறிமாறிப் பின்பற்றியதால் நீண்ட காதுகள், உயர்ந்த கொண்டைகளுடன் கூடிய புத்தரைப் போன்ற தோற்றத்தில் மகாவிஷ்ணு சிலை வித்தியாசமாகக் காணப்படுகின்றது.

இவ்வாலயங்களில் பிரதான தெய்வமாக சிவனும், மகாவிஷ்ணுவுமே இருந்திருந்தாலும், இன்று அங்கு இந்துக்களே இல்லாததால் அவ்வாலயங்களில் இறைவனும் இல்லை; வணங்குவதற்கு மக்களும் இல்லை. அதை எண்ணும்போது கண்கள் கசிந்து, மனம் கனப்பதைத்  தவிர்க்க முடியவில்லை. அன்றைய நாடு கடந்த இந்துமதத்தின் சிறப்பான சான்றாக மட்டுமே இவ்வாலயங்கள் நிற்கின்றன.

இடையில் பெளத்த மதமும் பரவியதன் காரணமாக இடைப்பட்ட மன்னர்களால் அந்த ஆலயங்கள் புத்தவிஹாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல இடங்களில் புத்த பெருமானின் சிலைகளே உள்ளன. பௌத்த குருமார்களும் நிறைய காணப் படுகிறார்கள். இவ்வாலயத்தின் பக்கவாட்டு பிரகாரங்கள் புத்த விஹாரங்களாக்கப் பட்டுள்ளன. இங்கும் ஒரு புத்தர் சிலை வழிபடப்படுகிறது. பல புத்தர் சிலைகளுக்கு தலை இல்லை. பல ஆவுடைகளில் சிவலிங்கம் இல்லை. இங்குள்ள படிகள் மிகக் குறுகியவை, செங்குத்தானவை. பக்கச் சுவரைப் பிடிததபடி மிகக் கவனமாக ஏற வேண்டும்.

ஒன்பது, பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் ஆண்ட அடுத்தடுத்த மன்னர்களால் கட்டப்பட்ட அங்கோர்தாம், பேயான், டா ப்ரோம், ப்ரேவிஹார், ப்ரே ரூப், நாம் பேகங், பன்ட்டி ஸ்ரே, பன்ட்டி க்டேய், பபுவான் என்று நம்மை வியக்க வைக்கும் ஆலயங்கள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது அங்கோர்வாட்தான்.

'பன்ட்டி ஸ்ரே என்ற' ஆலயம் 'பெண்களின் கோட்டை' எனப் புகழ் பெற்ற சிவாலயம். இங்குள்ள நுழைவுவாயில் சிற்பங்கள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. கம்ச வதம், காளிய நர்த்தனம், சிவபார்வதி சிற்பங்கள் அழகானவை.

இங்குள்ள ஆலயங்களில் நம்மைக் கவர்வது டாப்ராம் என்ற ஆலயம்.
ஏழாம் ஜெயவர்மன் தன் தாயாருக்காக 'ப்ரக்ஞபரிமித்ரா' என்ற சிலையுடன் கட்டிய ஆலயம் 'டா ப்ராம்'. 39 கோபுரங்களைக் கொண்ட இவ்வாலயம் நீண்ட பிரகாரங்கள்,
கலையழகு மிக்க நுழைவுவாயில்களுடன் புத்தரின் வாழ்க்கை வரலாறு, துவாரபாலகர், அப்சரஸ் சிலைகள் என்று இன்னமும் அழகாகக் காணப்படுகிறது.

செல்வச் செழிப்புடன் விளங்கிய இவ்வாலயம் புத்த விஹாரமாக இருந்ததாம். 3000 கிராமங்களை உள்ளடக்கியதாகவும் பல ஊழியர்கள் பணிபுரிந்த தங்க, வெள்ளி நகைக் கடைகளும் இங்கு இருந்ததாம். இவ்வாலயத்தில் தங்கமும், விலைமதிப்பற்ற முத்து, உயர்ரகக் கற்கள் இருந்ததாகவும் இவ்வாலயச் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது.

காட்டு மரங்களின் வேர்களும் கிளைகளும் ஆலயத்துடன் பின்னிப் பிணைந்து ஒரு அதி அற்புத இயற்கை காட்சியாக இந்த ஆலயம் காணப்படுகிறது. இவ்வாலய சீர்திருத்தப் பணியில் இந்தியாவும் பங்கு பெற்றுள்ளது. இது போலத்தான் எல்லா ஆலயங்களும் மரத்தினடியில் மறைந்து போய் காட்டுக்குள் இருந்ததை நாம் தத்ரூபமாக உணரும் பொருட்டு இவ்வாலயம் மட்டும் தற்போது காட்டுச் சூழலிலேயே காணப்படுகிறது.

அங்கோர்வாட்டின் அற்புத ஆலயங்களை ஆற அமர ரசிப்பதற்கு மூன்று நாட்கள் தேவை. இந்தியாவிலிருந்து அங்கோர்வாட் கோயில்கள் அமைந்துள்ள சியாம் ரீப்பிற்கு சிங்கப்பூர், மலேசியா வழியாகச் செல்லலாம். அங்கோர்வாட் சுற்றுலா பயணம் நிச்சயம் ஒரு வித்தியாசமான,
புதுமையான அனுபவத்தைத் தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு