ஊரடங்கில் நாம்..புது முயற்சி!
ஆய கலைகள் அறுபத்து நாலில் சமையலும் ஒன்று. பீம பாகம், நளபாகம் என்று ஆண்களே அக்காலத்தில் சமையல் வல்லுனர்களாக இருந்திருக்கிறார்கள். திரௌபதி ரொம்பவே சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்பாளோ!
ஐந்து கணவரும் வகை வகையாக சமைத்து
...திரௌபதி சாப்பிட வாம்மா...என்று அன்பொழுகக் கூப்பிட்டு ஆசையுடன் பரிமாறி இருப்பார்களோ!! நினைத்தாலே சந்தோஷமாக இருக்கே!
தமயந்தியும் கொடுத்து வைத்தவள்தான். நளன் ராஜ்ய பரிபாலனத்துடன் சமையலும் செய்திருப்பானோ!!இன்றும் திருமணம் போன்ற பெரிய விழாக்களில் ஆண்கள்தானே சமைக்கிறார்கள். அன்று
ஆண்கள் வசம் இருந்த சமையல் பெண்கள் மேல் திணிக்கப்பட்டதோ..
அல்லது பெண்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்களோ..
புரியாத புதிர்! விடை தெரியாத கேள்வி!!
கொரோனா வந்தது முதல் மூன்று மாதங்களுக்கு மளிகை சாமான் வாங்கிவிடுவதால் விதவிதமான சமையல், டிஃபன், ஸ்நாக்ஸ்! இப்பொழுது மா, பலா சீஸன் என்பதால் ஜாம், பாயசம், ஹல்வா, மில்க்க்ஷேக்தான் தினமும்!
வீட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமையல் பிடிக்கும். என் கணவருக்கு தினமும் ஸ்வீட் சாப்பிடும் பழக்கம்! பெரியவனுக்கு அசோகா, சின்னவனுக்கு அடை அவியல், கடைக்குட்டிக்கு சாட் வகைகள், பெண்ணுக்கு பர்ஃபி, பேரன் பேத்திகளுக்கு மைசூர்பாகு, காஜுகத்லி என்று பண்ணி நிறைய அயிட்டங்கள் கற்றுக் கொண்டு சமைக்க முடிகிறது.
என் கணவர் ஓரளவு அடிப்படை சமையல்கள் செய்வார். என் பிள்ளைகளும் நன்றாகவே சமைப்பார்கள். பெரிய பிள்ளை பொங்கல் செய்தால் அதில் ஏகப்பட்ட ட்ரைஃப்ரூட்ஸ் போட்டு நெய்யைக் கொட்டி பண்ணுவான்! டீயை பாலிலேயே கொதிக்க விட்டுப் போடுவான்! ப்ரெட், கேக் எல்லாம் சூப்பராக செய்வான்.
என் பெரிய மருமகள் வெளி நாட்டுப் பெண் என்பதால் இயல்பாகவே எல்லா ப்ரெட் வகைகள், பிஸ்கட், கேக் எல்லாம் மிக அருமையாக செய்வாள். விதவிதமாக பிஸ்ஸா நிறைய வெரைட்டி செய்வாள். நாங்கள் ஜெர்மனி சென்றால் எங்களுக்காக Eggless cake செய்வாள். என் 16 வயது பேத்தியும் கேக் மிக நன்றாக செய்வாள்.
அடுத்த பிள்ளை Bread making classக்கு சென்று கற்றுக் கொண்டும், YouTube பார்த்தும் விதவிதமாய் செய்கிறான். ஆர்கானிக் ப்ரெட் தயாரித்து கடைகளுக்கு supply செய்து கொண்டிருந்தான். கொரோனாவினால் தற்போது வெளியில் கொடுப்பதில்லை.
இரண்டாவது மருமகள் ப்ரெட், பட்டர் குக்கிஸ், டோனட், க்ரோசான்ட் , கப் கேக் எல்லாம் செய்வாள். ஆப்பம் வடைகறி, இடியாப்பம் , பிட்டு, கடலைக்கறி, நான், பராட்டா என்று எல்லா சமையல் செய்வதிலும் எக்ஸ்பர்ட். இவர்கள் தற்சமயம் எங்களுடன் இருப்பதால் தினம் ஒரு புது ரெசிபி செய்வாள்.
என் கடைசி பிள்ளைக்கு நான் தான் சமையல் குரு! என் சமையல் blog பார்த்து எல்லாம் செய்வான்! அவன் விதவிதமாய் சூப், பாஸ்டா, நூடில்ஸ் எல்லாம் செய்வான்!
என் மகளுக்கும் சமையலில் ஆர்வம் உண்டு. மராட்டிய உணவு வகைகளை செய்வதில் கெட்டிக்காரி! அவள் வடா பாவ், பானிபூரி, கப் கேக் என்று ஜமாய்க்கிறாள்! தினமும் அவர்கள் செய்த Lock down special ரெசிபிகளை எனக்கு வாட்ஸப்பில் அனுப்ப, நான் செய்ததை அவர்களுக்கு அனுப்புவேன். மொத்தத்தில் இந்த lock down சமையலில் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது எனலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக