நான் ஆசைப்பட்ட வீடு!

 



இப்படியும்பேசுவோம்..அப்படியும்பேசுவோம்

சொந்தவீடு அவசியம் வேண்டும்...வாடகை வீடே போதும்.


நான் ஆசைப்பட்ட வீடு!


சொந்த வீடா.வாடகை வீடா? எது வசதி என்று யோசிக்கும்

போது 'எலிவளை ஆனாலும் தனிவளை' என்பது போல் சொந்த வீடே சுகம் என்று தோன்றும். 


என் கணவர் வங்கியில் பணி புரிந்ததால் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊர் மாறுதல். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி வீடு. சில ஊர்களில் வீடு நன்றாக இருக்கும். தண்ணீர் வசதி இருக்காது. வெளியில் பக்கத்து வீடுகளுக்கு போய் எடுத்துவர வேண்டியிருக்கும். குடத்தில் தண்ணீர் பிடித்து தூக்கி வருவேன். இப்பொழுது நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.


சில வீடுகள் மழை வந்தால் அங்கங்கு ஒழுகும். அதற்கு வாளி, அண்டா, குண்டாவெல்

லாம் ஒழுகும் இடத்தில் வைத்து தண்ணீரைப் பிடித்து பின் வீடு முழுதும் துடைத்து...என் குழந்தைகள் மிகவும் சின்னவர்கள் என்பதால் கால் வழுக்கி விழுந்து அழ...அவர்களை உடை மாற்றி சமாதானம் செய்து...போதுமடா சாமி என்று இருக்கும்! ஆனால் போகும் ஊரிலெல்லாம் வீடு வாங்க முடியாதே! அங்கங்கு இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளதான் வேண்டும்! ஒருவிதத்தில் வாடகை வீட்டைப் பற்றிக் கவலையின்றி மூட்டையைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு கிளம்பி விடலாம்!


சொந்தமாக வீடு இருந்தால் இந்த கஷ்டமெல்லாம் இல்லையே என்று தோன்ற, குடந்தையில் என் கணவர் வேலையில் இருந்தபோது ஒரு வீடு கட்டினோம். அதில் எங்களுக்கு வசதியாக பார்த்துப் பார்த்து கட்டி கிரகப்ரவேசம் செய்து புது வீடு சென்றோம். நிறைய செடி மரமெல்லாம் வைத்து அழகு படுத்தினோம்.கஷ்டம் இல்

லாமல் வசதியாக இருந்ததே என்று சந்தோஷப் பட்டது கடவுளுக்கே பொறுக்க

வில்லை போலும்! 


அங்கிருந்து மதுரைக்கு மாற்றல். வீட்டை வாடகைக்கு விட்டோம். அவர்களுக்கு அந்த வீடு சரிவராமல் வேறு ஒருத்தர் குடி வர...அடுத்த வருடம் எங்களுக்கு மகாராஷ்டிரா மாற்றலாக....குடியிருப்பவர் பிரச்னை அதிகமாக அந்த வீட்டை விற்று விட்டோம். சொந்த வீட்டில் நாம் குடியிருக்காவிட்டாலும் பிரச்னை என்பது புரிந்தது.


பின் மும்பையில் பத்து வருடங்கள் இருந்ததால் அங்கு வீடு வாங்கினோம். அச்சமயம் என் பிள்ளைக்கு சென்னை மாற்றல். மருமகளுக்கு கைக் குழந்தை...அந்த வீட்டை என் மகளே வாங்கிக் கொள்ள...திரும்ப சென்னை வாழ்க்கை. 


ஒரு வழியாக குழந்தைகள் எல்லாம் செட்டிலாகி விட நானும் என் கணவரும் திருச்சியில் இருக்கலாமென்று அங்கு ஒரு ஃப்ளாட் வாங்கினோம். தென்னூரில் பரபரப்பான இடம். பஸ் போகும் பாதை. கீழே இறங்கினால் எதுவும் வாங்கலாம். ஆனால் சத்தம் தாங்க முடியவில்லை. என் குழந்தைகள் வந்தால் இரவு 11 மணிவரை...

விடிகாலை 4மணி முதல் ஒரே பஸ் ஹாரன் ஒலியில் தூங்க முடியவில்லை.


தனி வீடு வாங்கி செடி கொடியெல்லாம் போட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு. ஆனால் எந்த ஊரிலும் தனி வீடு பாதுகாப்பு இல்லை என்பதால் பிள்ளைகள் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு குடந்தை புண்யக்ஷேத்திரம் பற்றி தெரிந்தபோது எங்கள் மனதுக்கு பிடித்த மாதிரி வீடு தோட்டம் பாதுகாப்பு எல்லாம் இருந்ததால் இங்கு இடம் வாங்கி எங்களுக்கு பிடித்த மாதிரி வீடு கட்டினோம். 


கிராமத்து ஸ்டைலில் தூண் திண்ணை இவற்றோடு வீட்டினுள் நவீன வசதிகளோடு  இருக்கிறது. என் மகனும் ஒரு வருடமாக இருப்பதால் பேத்திகளும் நன்கு என்ஜாய் செய்கிறார்கள்! கிராம சூழ்நிலை. கறந்த பசும்பால், புதிய காய்கறிகள், மளிகை சாமான்கள் வீட்டு வாசலுக்கே வருவதால் இந்த ஊரடங்கு நேரத்தில் நாங்கள் வெளியில் செல்வதில்லை. 


சொந்த வீடு...சந்தோஷமான மனசு...வீட்டை சுற்றி தோட்டம்... காவிரிக்கரை...நமக்கு பிடித்தபடி வசதியோடு வீடு அமைந்தால்  வாழ்க்கை சொர்க்கம்தான்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)