அப்பா அன்றும்..இன்றும்


அப்பா என்றாலே ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் மனதில் வந்து உட்காருகிறது. ஒவ்வொரு தலைமுறை அப்பாக்களில் வித்யாசம் இருந்தாலும் அவர்களின் பாசத்தில் அப்பழுக்கிருக்காது. குடிசையோ கோபுரமோ அப்பாவின் அன்பு வெளிக் காட்டாவிட்டாலும்  அளவில்லாதது. நான் பார்த்து ரசித்த அந்நாளைய, இந்நாளைய அப்பா..


1940-'50 களில்...
என் தாத்தா..அம்மாவின் அப்பா மிகவும் ஸ்டிரிக்ட் என்பார் என் அம்மா. அவருக்கு 4 பெண்களும் 3 பிள்ளைகளும். மனைவி இளவயதில் இறந்து விட தன் நான்கு பெண்களையும் தாயில்லாமல் வளர்ந்த பெண்கள் என்பதனால் யாரும் குறை சொல்லக் கூடாது என்று மிக கட்டுப்பாடாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்தார். என் தாத்தா முன்னால் அவர்கள் குரல் உயர்த்தியும் பேச மாட்டார்கள்.

1960-'70 களில்...
என் அப்பா நான் ஒரே பெண் என்பதால் என் தம்பிகளிடம் காட்டிய கண்டிப்பு என்னிடம் கிடையாது. அந்தக் கால typical அப்பா. பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகவும் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்! ஆனால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை..
தேவையானவற்றுக்கு
மறுப்பு சொன்ன
தில்லை.

மாதம் ஒருமுறை பீச், எக்ஸிபிஷன், பாட்டுக் கச்சேரி, நல்ல சினிமாக்கள், ஏப்ரல் மாத விடுமுறையில் சுற்றுப் பயணம் என்று எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்.தன் குழந்தைகள் எல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம்.👨‍👧

எங்கள் ஆசைகளை நைஸாக அம்மா மூலம் அப்பாவுக்குத் தெரிவித்து நிறைவேற்றிக் கொள்வோம்! நாங்கள் settle ஆனபின் அப்பாவின்...தான் சாதித்து விட்டோம். குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்...என்ற சந்தோஷத்தைப் புரிந்து கொண்டேன்.👴

1980- '90 களில்..
என் கணவருக்கு அவரது நான்கு மாதத்திலேயே அப்பா மறைந்துவிட்டார். அப்பாவின் முகமே தெரியாது. அதிலும் துரதிர்ஷ்டம் என் மாமனாரின் புகைப்படமே கிடையாது. அப்பா இல்லாதது அவருக்கு மிகவும் குறை என்று வருந்துவார். அப்பாவின் அன்பை அனுபவிக்காததால் தன் குழந்தைகளிடம் மிக அன்பாக நடந்து கொள்வார்.

எல்லா வீடுகளிலும் குழந்தைகள் அம்மா வழியாகத்தான் தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். என் வீட்டில் நேரெதிர்! சிறு வயதிலிருந்து அவர்கள் நியாயமாகக் கேட்டதை என்ன விலையானாலும் வாங்கித்தரத் தவறியதில்லை. நான் கோபித்தால்
..எனக்குதான் அந்தக் கொடுப்பினை இல்லை. என் குழந்தைகளுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்?..என்பார்.

'குழந்தைகளை எப்போதும் சந்தேகப் படாமல் அவர்கள் எடுக்கும் முடிவுகளிலுள்ள தவறுகளை சுட்டிக் காட்டி ஆலோசனை சொல்லலாம். அவர்கள் விருப்பங்களில் நாம் தலையிடக் கூடாது. தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும்'  என்று சொல்வார் என் கணவர். இன்றும் 'அப்பாவுக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்தில் அவர்கள் எந்த ஆலோசனை தேவையென்றாலும் அப்பாவைக் கேட்டே செய்வார்கள்.

என் பெண்ணும் பிள்ளைகளும் காதலித்தபோது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியவர் என் கணவர். நான் மறுத்துப் பேசியபோது..என் குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு..என்று திடமாக நம்பியவர். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை.  மிகச் சிறப்பாக வாழ்கிறார்கள்!

இக்கால அப்பாக்கள்..
இந்தக்கால அப்பாக்களான என் பிள்ளைகள், மற்றும் மாப்பிள்ளை குழந்தைகளுக்கு நிறையவே சலுகைகள் தருகிறார்கள்.
அவர்கள் கேட்பதெல்லாம் தட்டாமல் வாங்கித் தருகிறார்கள். ஒரு விஷயம் குழந்தைகளிடம் சொல்லிவிட்டால் அதை உடன் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள் மனம் நொந்து விடுவார்களாம்.

ஜெர்மனியில் இருக்கும என் பிள்ளை ஒருமுறை என் பேத்தியை வெளியில் அழைத்து செல்வதாகக் கூறியிருந்தான். அதுவும் ரெடியாகிக் காத்துக் கொண்டிருந்தது. அவனுக்கு அன்று வேலை அதிகம் என்பதால் முடியவில்லை. வேலையை முடித்தவன் ..கிளம்பும்மா வெளில போகலாம்..என்று சொல்ல, நானோ..நீ டயர்டா இருக்கயே. நாளைக்கு போய்க்கலாமே..
என்றேன்.
..நான் உன் பேத்திட்ட சொல்லிட்டேன். அழைச்சுண்டு போகாட்டா'அப்பா நம்மை அழைச்சுண்டு போகல. அப்பா சொல்வதை நம்ப முடியாது'னு அவ மனசுல எண்ணம் வந்துடும்..என்றான்.
அடேயப்பா! இந்தக் கால அப்பாக்களின் எண்ணம் வித்யாசமாதான் இருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

சினிமாவில் காட்டும் அப்பாக்கள் மட்டுமே தன் பெண் காதலித்தால் அறையில் அடைத்து தன் சுயநலத்துக்காக பணக்காரனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதும் காதலித்தவனை கொலை செய்ய ஆட்களை ஏவுவதுமான கொடுமைக்கார அப்பாக்கள் என்று நினைத்திருந்தேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி வேற்றுமதக் காரரை காதலித்து மணந்ததற்காக அவளிடம் 'எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் சொத்தில் பங்கு கேட்க மாட்டேன்' என்று எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாராம் அவள் அப்பா! இப்படியும் அப்பாக்கள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)