கண்ணும் கண்ணும் பேசியதும்❤️
என்னவரை முன் முதலாக பார்த்த போது..!நினைவலைகள்..2
ஆஹா..அந்த நாள் ஞாபகம் மனதில் வந்து ஏதேதோ எண்ண வைக்குதே! அந்த நாள் என் ஆசைக் கணவர் என்னைப் பெண் பார்க்க வந் நாள்! என் அம்மா பட்டுப் புடவை கட்டச் சொல்லியும் எனக்கு பிடிக்காததால் சாதாரண நைலக்ஸ் (எழுபதுகளில் வித விதமான கலர், டிசைன்களில் மிக பிரபலம்) புடவைதான் கட்டிக் கொண்டேன். எனக்கு வயது பதினெட்டு. கல்யாணத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை. முதல் பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பையனைப் பிடிக்க வில்லை என்று சொல்லி தப்பித்து விடலாம் என்று ஐடியா!
என் மாமாவும், என் அப்பாவழி சித்தப்பாவும் வந்திருந்தார்கள். என் அம்மா புது விதமாக சொஜ்ஜி பஜ்ஜி செய்யாமல் தயிர்வடை, மைசூர் பாகு செய்தார். மாலை என் கணவருடன், என் மாமியார், அவரது அப்பா, என் நாத்தனார் வந்தார்கள். அவர்கள் வந்ததும் சம்பிரதாயப் பேச்சுகள் முடிந்ததும் என் அப்பா, 'சாப்பிடுகிறீர்களா? என்றார். 'பெண்ணைப் பார்த்து விடுகிறோம்' என்றார் என் நாத்தனார்! பெண் பிடித்தால் நிறைய சாப்பிடலாம் என்று ஐடியாவோ!
இந்த பேச்சு வார்த்தை நடக்கும் போது நான் சமையலறையில் இருந்தேன். என் மாமா எனக்கு ஒரு ஐடியா கொடுத்தார். 'மாப்பிள்ளைக்கு கிச்சனிலிருந்து நீ பார்க்கிற மாதிரி chair போட்டிருக்கேன். நைஸா அவரை பார்த்துக்கோ' என்றார்!
சுவாரசியமாக அவர்கள் ஊர் உறவு குடும்பம் பற்றியெல்லாம் பேசும்போது நான் நைஸாக ஏதோ சாமான் எடுப்பது போல சென்று கூடத்து பக்கம் பார்க்கவும் அவர் பார்வை என்னைப் பார்க்க ஒரு நொடி கண்ணும் கண்ணும் கலந்து காதல் கதை பேசியதோ! அட..சாமர்த்தியக்
காரர்தான்! நான் அங்கிருந்து பார்ப்பேனென்று அவரும் கணக்கு பண்ணியிருக்கிறார்! இதெல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் தெரிந்தது!
பெண் பார்த்த போது
..உன்னை நான் பார்க்கும் போது விண்ணை நீ பார்க்கின்றாயே..மண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே..என்று திருமணத்திற்கு பின் நான் கேட்டபோது, 'நான் உன் வீட்டில் மாட்டியிருந்த ஃபோட்டோக்களில் (அந்த நாளில் வரிசையாக ஃபோட்டோ மாட்டும் பழக்கம் உண்டே) நீ இருக்கிறாயா என்று தேடினேன் என்றார்!
என்னைப் பெண் பார்த்து இரண்டு மாதங்களுக்கு பின்புதான் திருமணம். முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின்போது வாசலில் வந்து அவரைப் பார்த்தேன்.அந்த காதல் விழிகளில் சொக்கி விழுந்த நான் இன்றுவரை அந்த மயக்கத்திலிருந்து மீளவில்லை!
அவர் விருப்பப் படுவதால் அவர் நண்பர்கள் என்னையும் அந்த மாப்பிள்ளை அழைப்பு காரில் ஏறச் சொல்ல, எங்கள் இருவரின் தாத்தாக்களும் மாலை மாற்றும் முன்னர் இருவரும் இணைந்து அமரக் கூடாது என்று சொல்லிவிட, நம்மாளு முகம் போன போக்கைப் பாக்கணுமே! பாவமாகி விட்டது எனக்கு!
பெண் பார்த்த அன்று என்னை ஆசையுடன் பார்த்த அந்தப் பார்வையை மட்டும் இன்றுவரை என் கண்கள் மறக்கவில்லை..
மாறவும் இல்லை! இப்பவும் பலர் நடுவில் பேசும்போது எங்கள் பார்வையின் பொருள் எங்களுக்கு மட்டுமே புரியும்!
கருத்துகள்
கருத்துரையிடுக