அன்றும் இன்றும் பெண்கள்..
என் எண்ணம்..என் எழுத்து
அன்றும் இன்றும் பெண்கள்..
அந்நாளைய பெண்கள் தம் பிறந்த வீட்டில் மட்டுமே சுதந்திரமாக இருந்தார்கள். கல்யாணத்திற்குப் பின் தம் சுயம், மதிப்பிழந்து அடுத்தவருக்காய் தம் ஆசைகளை புறந்தள்ளி பிடிப்பில்லாமல் வாழ்ந்ததாக நிறைய பேர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் இப்பவும் சிலர் இப்படி வாழ்வது மனதிற்கு வருத்தமாகதான் இருக்கிறது.
பெண்களுக்கு தம் மனப் பொறுமலை கஷ்டங்களை யாரிடமும் பேச முடிவதில்லை. கேட்பவரும் இல்லை.
கணவரிடம் சொன்னால்
'எனக்கு வேலையில் ஆயிரம் பிரச்னை.இந்த ஸில்லி(silly) மேட்டர்லாம் என்ட்ட கொண்டுவராதே' என்ற பதில்.நமக்கோ அது சில்லி(chilly) மேட்டராச்சே!
பெற்றோரிடம் சொன்னாலோ 'உன் வீட்டில் பிரச்னைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்.நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்' என்பார்கள்.திருமணம் செய்து கொடுத்ததோடு அவர்கள் கடமை ஓவர்!
பக்கத்து வீடு,நண்பர்களிடம் சொன்னாலோ 'வீட்டுக்கு வீடு வாசல்படி.எங்க வீட்டில இல்லாததா'என்று அவர்கள் கதையை சொல்ல ஆரம்பித்தால் 'நாம் எதற்கு இவர்களிடம் சொல்ல வந்தோம்' என்று வெறுத்துப் போய்விடும்.
பிள்ளைகளோ 'ஏம்மா..உனக்கு வேற வேலை இல்லையா. அப்போவே நீ அவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்
கலாமே' என்று சுலபமாக சொல்வார்கள், ஏதோ நாம சொல்லி அவங்க கேட்கற மாதிரி!
பெண்ணோ 'நானாயிருந்தால் அந்த வீட்டை விட்டு வெளியே போயிருப்பேன்.நீ பயந்தாங்குளி' என்பாள். இநதக் காலத்தில் அது ஈஸி!
அப்படியெல்லாம் ஒரு பெண் வெளியேறுவது அந்தக் காலத்தில் சுலபமா? இன்றும் வேலைக்கும் போய்க் கொண்டு இது போன்ற கஷ்டங்களை அனுபவிக்கும் பெண்கள் உண்டு.
கணவரைப் பற்றி நினைக்காவிட்டாலும் பெற்ற பிள்ளைகளை வளர்க்க வேண்டுமே. அதனால்தான் பெண்கள் பொறுமையோடு இருந்து, தம் ஆசைகளை விட்டு குடும்பத்திற்காக வாழ ஆரம்பித்தனர்.அதை ஆண்கள் உணர நிறைய வருடங்கள் ஆகிறது.
பல வருடங்கள் தன்னை மறந்து வாழ்ந்த பெண்களுக்கு ஐம்பது வயதிற்குப் பின் பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையை வாழ வெளியேற, உடல் தளர்ந்து நோய்கள் உட்புக, 'நமக்காக நாம் வாழவில்லை' என்ற எண்ணம் ஏற்படுகிறது.
'அன்று கணவர் நமக்கு ஆதரவாக இல்லையே' என்ற எண்ணம் கணவரிடம் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்த வார்த்தைகள் தடித்து, மீண்டும் வாழ்க்கை ரணகளமாகிறது.
சஷ்டி அப்த பூர்த்தியான தம்பதிகள் கூட சமயத்தில் ஒன்றுமில்லாத விஷயத்திற்கு அடுத்தவர் எதிரிலேயே சண்டை போடுவதன் காரணம் இளமையில் தன் ஆசைகள் நிறைவேறாத இயலாமையில்
தான் என்பது என் எண்ணம்.
இந்தக்கால பெண்களாக இருந்தால் உடனே டைவர்ஸ் செய்து விடுவார்கள். அந்நாட்களில் நாம் அதையெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதே!
யாரிடமும் மனம் விட்டு தம் ஆசைகளை சொல்ல முடியாததால்தானோ, ஒரு வடிகால் வேண்டியே இது போன்ற பதிவுகளில் பெண்கள் மனம் திறந்து எழுதுகிறோம் போலும் என்பது என் எண்ணம்.
ஆண்களோ 'உத்யோகம் பருஷ லட்சணம்' என்பதற்கேற்ப தாம் உண்டு தம் தொழில் உண்டு என்றே வாழ்பவர்கள். வீட்டு வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்து வீட்டுப் பெரியவர்களையும் கவனித்துக் கொண்டு, யார் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் கடமையே கண்ணாக பெண்கள் வாழவேண்டும் என்று இருந்தது அந்தக் காலம். இப்பவும் சிலரை அதுபோல் பார்க்க முடிகிறது.
வயதானபின்பு (சாப்பாட்டிற்கு இந்த மனைவியைதானே எதிர்பார்க்க வேண்டியுள்ளது!) தன் மனைவிக்கு உதவியாக இருந்து வீட்டு வேலைகளில் உதவும் நிறைய கணவர்களையும் இப்போ பார்க்க முடிகிறது.
என் தோழி ஒருத்தியின் கணவர் ரொம்ப strict. அதிகம் அவளை வெளியில் அனுப்ப மாட்டார். எங்களுடன் பேசக்கூட அனுமதிக்க மாட்டார்.சமீபத்தில் அவள் வீட்டுக்கு சென்றபோது தாசானு தாசனாக வேலைகளை செய்தார்!
அவளிடம்'என்னாச்சு உன் கணவர் இப்படி வேலை செய்யறார்.மாறிட்டாரா?' என்றேன். 'என்னை சின்ன வயதில் என்னபாடு படுத்திருக்கார். இப்ப ஃபீல் பண்றார்.நடுவில் நான் உடம்புக்கு வந்து நடக்க முடியாமல் போனதிலிருந்து மாறிவிட்டார்' என்றாள்.
அந்தக் காலத்தில் ஐ லவ் யூ சொல்லத் தெரியாத, ஹனிமூன் போகாத, மனைவியிடம் காதலுடன் பேசத் தெரியாத ஆண்கள்...நிறையபேர் உண்டு போலும்!
என் கணவரிடம்...இந்தக் காலம் மாதிரி அந்த நாளில் நீங்கள் என்னிடம் ஐ லவ் யூ சொன்னதில்லையே...என்றால்,
...எதிரில் என் அம்மா இருக்கும்போது அதெல்லாம் எப்படி...என்பார்!
...உங்கம்மா என்ன பண்ணிருப்பா...
என்றால்,
...அதுக்கப்பறம் அந்த வீட்டில் இருந்திருக்க முடியாது...என்றார்!
...ஓ.அப்போ ஜாலியா தனிக்குடித்தனம் பண்ணிருக்கலாமே!..என்றேன்!
...வீட்டில் இருந்திருக்க முடியாதுனு சொன்னது நம்மை இல்ல.உன்னை...என்றார்!
அந்நாளைய ஆண்களைச் சொல்வதும் தவறில்லை. பொறுப்புகளை சுமக்க ஒரு சுமைதாங்கி வந்து விட்டாள் என்று சுகமாக தம் கடமைகளைச் செய்தார்கள். மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள், சரியாகச் செய்வாள் என்று முழு நம்பிக்கை வைத்தார்கள்.அந்த நம்பிக்கைதான் அன்றைய பெண்களின் பலம்.
அவளுக்கும் ஆசைகள் உண்டு அவளுக்கு ஆதரவாக இருப்போம் என்பதை மட்டும் ஏனோ அவ்வப்போது மறந்துவிட்டார்கள்!
ராதாபாலு
கருத்துகள்
கருத்துரையிடுக