எந்தன் தாய்மை எந்தன் வழி

 


எந்தன் தாய்மை எந்தன் வழி என்று நீங்கள் இருப்பதற்கு தடையாக குடும்பத்தில்/சமூகத்தில் இருக்கும் சிக்கல்கள்..


என் பெண்ணை நான் உருவாக்கினேன்..!

ஒரு பெண் முதல் முறை தாயாகும் போதே தன் குழந்தை  ஆணோ பெண்ணோ எப்படி வளர்க்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் கூடவே வளர்வதைத் தடுக்க முடியாது. தன்னைப் போல் கட்டுப் பெட்டியாய் வளர்க்கக் கூடாது, வேலைக்கு செல்லும் பெண் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணங்களுடன்தான் எல்லா அன்னையரும் தம் பிள்ளைகளை வளர்ப்பார்கள்.

நானும் அப்படித்தான் என் குழந்தைகளை வளர்க்க ஆசைப் பட்டேன்..அதைப் போலவே வளர்த்தேன்..இன்று அவர்களின் அம்மா நான் என்று பெருமையும் கொள்கிறேன்.

குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் பங்கு உண்டே!  என் கணவர் இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டு சிதம்பரம் காலேஜில் சேர்ந்து raggingனால் பாதியில் படிப்பை தொடர முடியாமல் வந்து பின் B.Sc படித்தவர். அதன் காரணமாக தன் பிள்ளை இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தன் ஆசைப்படி என் முதல் மகனைப் படிக்க வைத்தார். என் மகனுக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் நன்கு படித்து நல்ல  மார்க்குகள் வாங்கி
+2வில் மாநில மூன்றாமிடம் வந்து பிலானியில் B.E. படித்து ஆராய்ச்சிப் படிப்பிலும் தேர்ச்சி பெற்று மூன்று Ph.Dக்கள் பெற்று பெர்லினில் பணி புரிகிறான்..

எனக்கு மருத்துவப் படிப்பில் எப்பொழுதும் ஆசை உண்டு. டாக்டர்களைப் பார்க்கும்போது கடவுளைப் போலத் தோன்றும்.  என் மகளை ஒரு டாக்டராக்க ஆசைப் பட்டேன். அவளுக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் +2வில் நிறைய மதிப்பெண் பெற்றாள். மணிப்பூர், ஜிப்மர், சென்னை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகள்எழுதி
னாள்.

அச்சமயம் நாங்கள் மகாராஷ்டிராவில் கோலாப்பூரில் இருந்தோம். மும்பை கல்லூரியில் கிடைத்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தபடி மும்பை  Grant Medical Collegeல்  தேர்ந்தெடுக்கப் பட்டாள். என் சந்தோஷம் சொல்லி முடியாது.

எல்லாருக்கும் இந்த விஷயத்தை தொலைபேசியில் சொன்னபோது என் நாத்தனார்...டாக்டருக்கு படிக்க எப்படி அட்மிஷன் கிடைத்தது? எப்படி செலக்ட் ஆனாள்? எத்தனை பணம் கொடுத்து சேர்த்தாய்?... என்று சந்தோஷப் படுவதற்கு பதில் ஏகப்பட்ட கேள்விகள். நானும் பொறுமையாக எல்லாவற்
றிற்கும் பதில் சொன்னேன்.

மெரிட்டில் கிடைத்தது என்றபோது நம்பாமல்
...அதெல்லாம் பணம் கொடுக்காமல் கிடைக்காது. அவளுக்கு எதற்கு இந்த படிப்பெல்லாம்? கல்யாணத்திற்கு சேர்த்து வைத்துக் கொள்ளாமல் ஏன் இப்படி செய்கிறீர்கள்?...
என்றார்.

கொஞ்ச நேரம் பொறுமையாகக் கேட்ட எனக்கு கோபம் அதிகமாயிற்று. நான்...அவள் என் பெண். அவளை எப்படி என்னவாக உருவாக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். அவள் படிப்பு, கல்யாணமெல்லாம் என் பொறுப்பு. நீங்கள் இதில் தலையிட வேண்டாம்...என்று சொல்லி விட்டேன்.

அவளுக்காக நாங்கள் மும்பை மாறிச் சென்று விட்டோம். என் மாமியார் எங்களுடன் இருந்தார். அவள் ஹாஸ்டலில் இருந்தாலும் அடிக்கடி வீட்டுக்கு வரும்போது...டாக்டர் படிப்பு என்ன வேண்டிருக்கு? ஏதோ B.Sc, B.Com படிக்க வெச்சு கல்யாணத்தைப் பண்ணி வெக்காம இப்படி செலவழிக்கணுமா...என்பார்.

என் பெண்ணோ...நீ யார் என்ன சொன்னாலும் காதில வாங்காத. வருத்தப் படாதே...என்பாள். அதே கல்லூரியில் படித்த மராட்டிய பையனை காதலித்தபோது என் மாமியார் என் கணவரிடம்...படிப்பை நிறுத்திவிட்டு நம்ம ஜாதில ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணு...என்றபோது என் கணவர்..அவள் எங்கள் குழந்தை. அவளுக்கு நல்ல அறிவைக் கொடுத்திருக்
கிறேன். அவள் செய்வது சரியாக இருக்கும்...
என்றார்.இன்று இரண்டு குழந்தைகளுடன், மாமியார் மாமனாரும் அவளுடன்தான் இருக்கிறார்கள். 'அவளைப் போல மருமகள் கிடைக்க மாட்டாள்' என்று பெருமையாக சொல்கிறார்கள்.

படித்து முதல் வகுப்பில் தேறியவள் பத்து வருடங்கள் மும்பையின் சிறந்த மருத்துவமனைகளில் பணி புரிந்தபின், தற்போது Clinical Research படித்து ஒரு வெளிநாட்டு Pharma Companyயில் உயர்பதவியில் இருக்கிறாள்.

அவள் டாக்டரானபின் நான் Histarectamy அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது அவள் உடனிருந்தது எனக்கு தைரியமாக இருந்தது. என் பெண்ணை 'எந்தன் தாய்மை எந்தன் வழி' என்று வளர்த்து அவளை நல்ல முறையில் உருவாக்கியதைப் பெருமையுடன் நினைக்கிறேன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு