என் செல்லப் பிள்ளைக்கு பிறந்தநாள்
எத்தனை குழந்தைகள் இருந்தாலும் ஒவ்வொரு பிரசவமும் ஒவ்வொரு மாதிரி. ஒவ்வொரு அனுபவமும் வித்யாசமானதே. என் முதல் பிரசவம் Forceps மூலம் நடந்த ஆயுதமுறை பிரசவம். இதில் பிரசவத்திற்கு பின் வலி அதிகம். புண் ஆற சில நாட்கள்ஆகும். அடுத்த பிரசவங்கள் நார்மல்தான்.
என் கடைசி பிரசவத்திற்கு முன் எனக்கு டாக்டர் கொடுத்த நாள் முடிந்தும் வலி எடுக்காததால் டாக்டரிடம் காட்டச் சென்றேன். அவர் சோதனை செய்துவிட்டு எல்லாம் நார்மலாதான் இருப்பதாயும், இன்னும் இரண்டு நாளில் வலி எடுக்காவிட்டால் அட்மிட் ஆகிவிடும்படியும் சொன்னார். அன்று இரவே எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. லேசாக வலி இருப்பது போல் தோன்றவே, விடிகாலையில் ஆஸ்பத்திரி சென்றேன். உடன் என் அப்பாவும் உதவிக்கு இருந்த மாமியும் வந்தனர்.
டாக்டர் மருத்துவமனையின் அடுத்த வீட்டிலேயே குடியிருந்ததால் உடன் வந்து பார்த்து காய்ச்சல் இறங்கினால்தான் பிரசவம் ஆகும் என்று சொல்லி ஊசி போட்டு விட்டு சென்றார்.
எனக்கோ காய்ச்சலுடன் சேர்ந்து பிரசவ வலியும் அதிகமாக வலி தாங்க முடியாமல் கத்தி விட்டேன். என்னுடன் வந்த மாமிதான் ஒவ்வொரு பிரசவத்திற்கும் உடனிருப்பார். அவரே பயந்து போய் 'இப்படி துடிக்கிறாயே? ' என்று என்னை ஆசுவாசப் படுத்தினார். முதல் பிரசவத்தின்
போதெல்லாம் சத்தமே போடாதவள் இப்படி வலியில் துடிக்கிறாளே என்று என் அப்பா அழுதே விட்டார்.
டாக்டர் வந்து பிரசவ வார்டுக்குள் போய் பத்து நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டது. 'உனக்கு அழகா பையன் பிறந்திருக்கான் பார்' என்று டாக்டர் சொன்னதும் சந்தோஷம்! நானா வலியில் அந்த சத்தம் போட்டேன் என்று எனக்கே ஆச்சரியம்!
பிரசவத்திற்கு மறுநாள் கை காலெல்லாம் அசைக்க முடியாத அளவு வலி. எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. மூன்றாம் நாள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக சொன்ன டாக்டர் காய்ச்சலால் உடம்பு நெகிழ்ந்து விட்டதால் செய்ய முடியாது என்றார். பின்பு ஐந்தாம் நாள் உடம்பு நார்மலானதும் செய்தார். அதன்பின் ஏழு நாட்களுக்கு பின்பே வீட்டுக்கு வந்தேன். பதினோராம் நாள் செய்ய வேண்டிய புண்யாவசனம் இந்தப் பிள்ளைக்கு பதிமூன்றாம் நாள்தான் நடந்தது.
எங்கள் வீட்டின் கடைக்குட்டி எனக்கு செல்லப் பிள்ளை. இப்போது லண்டனில் பணிபுரிகிறான். இன்னொரு ஸ்பெஷல் எங்கள் இருவருக்கும் ஒரேநாளில் பிறந்தநாள்! மகன் வேலைக்குப் போகும் வரை இருவருமாக ஜாலியாகக் கொண்டாடுவோம்.
இரண்டு வருடங்களாக கொரோனாவால் கோவிலுக்குக் கூட செல்ல முடியவில்லை. என் அறுபதாம் வயதில் என் பிள்ளை குடும்பத்தோடு வர, இருவருமாக கேக் வெட்டி கொண்டாடினோம்!
இன்று என் 64ம் பிறந்தநாளில் ஆயகலைகள் அறுபத்து நாலில் ஏதோ ஐந்தாறு கலைகளில் திறமை பெற்றிருப்பதை நினைத்து சந்தோஷப் படுகிறேன். இன்றைய ஸ்பெஷல் செவன்கப் கேக். புதிய புடவையுடன் கொண்டாடி
யாச்சு. அடுத்த ஆண்டிற்குள் கொரோனா விலகி நாடும் நாமும் நலம் பெற வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.
கருத்துகள்
கருத்துரையிடுக