மறக்க முடியாத முத்தம்






உங்கள் கருத்து உங்கள் எழுத்து.. மறக்க முடியாத முத்தம் (பெற்றதும் கொடுத்ததும்)


சிறிதும் யோசித்திராத வித்யாசமான தலைப்பு இது. இதுவரை எழுதாத தலைப்பில் இன்று முதல்முறையாக எழுதியுள்ளேன்!தலைப்பைக் கொடுத்த ஜெயந்திக்கு நன்றி.


பிறந்த அன்று முதல் நம்மைக் கையில் தூக்குபவர்க
ளெல்லாம் முத்தம் கொடுப்பார்கள்! அம்மாவோ தினம் ஆயிரம் முத்தம் தருவாள். பல சந்தர்ப்பங்களில் அம்மாவும், சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அப்பாவும் முத்தம் தருவார்கள்.

அந்நாட்களில் ஓரளவு வயதானபின் அப்பாக்கள் இந்நாளைப் போல் முத்தம் தர மாட்டார்கள். ஆண் குழந்தைகளுக்கு அம்மா முத்தம் தருவது கூட குறிப்பிட்ட வயது வரைதான்! என் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்ந்த குழந்தைகளை அடிக்கடி கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதைப் பார்த்து சிரித்தே விடுவேன்!

முத்தக் காட்சிகள் அந்தக் காலத் திரைப் படங்களில் வந்ததில்லை. காதல், முத்தம் என்ற வார்த்தைகள் பாட்டில் வந்தாலே பாடக் கூடாது என்று தடா! அதனால் யாருக்கும் முத்தம் கொடுத்ததில்லை. என் சித்தி ஒருவர் இப்பவும் எங்களைப் பார்க்கும்
போதெல்லாம் கட்டி அணைத்து வாயைக் கன்னத்தில் அழுத்தி முத்தம் தருவார். கன்னம் முழுக்க எச்சிலாகி விடும்!  அவரைக் கண்டாலே நாங்கள் ஓடி விடுவோம்! என் தம்பி விளையாட்டாக ..பாவம் சித்தப்பா ஏக்கமா பார்க்கிறார். இது மாதிரி அவருக்கு கிடைப்பதில்லையோ...என கிண்டல் செய்வான்!

முத்தம் பெற்ற வரிசையில் என்னால் மறக்க முடியாதது என் திருமணம் முடிந்தவுடன் என் அம்மா என்னைக் கட்டியணைத்து, என்னைப் பிரியும் கஷ்டத்தில் அழுது கொண்டே அழுத்தமாக என் கன்னத்தில் கொடுத்த முத்தம்! அம்மா எனக்கு பல நேரங்களில் முத்தம் கொடுத்திருந்தாலும் அந்த முத்தம் மட்டும் இன்னமும் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்து விட்டது.

அந்த நிமிடம் என் மனம் படபடக்க அழுகை வந்தாலும் மிகக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டேன். நானும் அழுதால் அம்மா இன்னும் மோசமாகி விடுவார் என்ற பயம். ஒவ்வொரு முறை நான் பிறந்த வீடு வந்தாலும் திரும்பும்போது அம்மா கட்டியணைத்து முத்தமிட்டு கண்கலங்கி விடை கொடுப்பார்.

என் குழந்தைகளுக்கு பிறந்தது முதலே நிறைய முத்தங்கள் கொடுத்தாலும், என் மகள் டாக்டர் பட்டம் பெற்றபோதும், திருமணத்தன்றும் மகிழ்ச்சியில் கொடுத்த முத்தங்கள் உண்டு! பேரன் பேத்திகளுக்கு கொடுத்த முத்தங்களோ கணக்கிலடங்காது!

மறக்க முடியாத நான் கொடுத்த முத்தம்..யோசித்ததுமே மனதில் வந்து கிளுகிளுப்பையும் காதலையும் இன்றும் வரவழைக்கும் முத்தம்..அதுவும் முதல்முதலாக எனக்கு  உறவாகி விட்ட ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாத பேசி அறியாத பழகாத புது ஆளாக வாழ்வில் வந்த என்னவருக்கு கொடுத்ததுதான்!

எனக்கு திருமணமானபோது வயது பத்தொன்பது.
திருமணமான புதிதில் இது மிகக் கஷ்டமான ஒன்றாக இருந்தது! திருமணம் பற்றி ஓரளவு தெரியுமே தவிர இந்த முத்தவகை பற்றிய அறிவில் ஜீரோ! பாவப்பட்ட மனிதர் அதற்காக எனக்குப் பாடமெல்லாம் எடுத்து என்னைத் தேற்றியதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இப்பவும் ஜாலிமூடில் இருக்கும்போது தான் எனக்கு பாடம் எடுத்ததைப் பற்றி சொல்லி கிண்டலடிப்பார். 'என்ன..மூட் வந்தாச்சா' என்று நானும் கலாய்ப்பேன்! பிறகென்ன..பிரேமையில் யாவும் மறந்தோம்தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு