கசப்போ..இனிப்போ..

 



நான்எழுதுகிறேன்..

#இனிப்பு..
பயங்கர அனுபவம்..

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அப்பொழுது நாங்கள் திருச்சியில் இருந்தோம். திருச்சிக்கு
அருகில் சிறிது தூரத்தில் பாலையூர் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. அங்கு சில கொய்யா, சப்போட்டா மரங்கள் இருப்பதால் அவ்வப்போது சென்று பார்த்து வருவோம்.

என் பெண் வயிற்றுப் பேரனும், பேத்தியும் வந்திருந்தபோது அங்கு சென்று வரலாமென்று  சாப்பாடு முடித்து மதியம் ஒரு மணிக்கு எங்கள் நேனோ காரில் கிளம்பினோம். பேரனோடு ஜாலியாக வம்படித்துக் கொண்டு போனபோது எங்கள் தோட்டத்திற்கு செல்ல 10,15 நிமிடங்களே இருக்கும். திடீரென்று வண்டியில் ஏதோ வித்யாசமான சத்தம் வந்தது. என் கணவர் ப்ரேக் போட முயற்சித்தும் க்ளட்ச் வேலை செய்யாததால் முடியவில்லை.  வேகமும் குறைக்க முடியாதபோது என் கணவரும் சற்று பயந்து விட்டார்.

என் பேத்தி பின்னால் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.என் பேரன் பயந்து...தாத்தா என்னாச்சு வண்டியை நிறுத்து...என்று கத்தினான்.  நானோ பயந்து கடவுளை யெல்லாம் கூப்பிட ஆரம்பித்தேன். காரின் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் போய் அடுத்த நொடி அதன் இஷ்டத்துக்கு ஓடி ஒரு பெரிய சத்தத்துடன் வலப்பக்கம் கவிழ்ந்து விட்டது. நான் சாய்ராம் என்றும் என் பேரன் ஜய்பஜ்ரங்பலி என்றும் கத்திவிட்டோம்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. அந்த அரை நொடியில் ஆயிரம் எண்ணங்கள். 'நாம் போனாலாவது பரவாயில்லை. அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால்' என்று நினைவு வேறு.கார் விழுந்து தலைக்கு மேல் நாலு சக்கரமும் சுற்றி நின்றுவிட, 'அட..நாம் உயிரோடு இருக்கிறோமா' என்று நினைத்தவள், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று பயந்து கொண்டே பார்த்தேன். நெஞ்சு படபடப்பு.

கார் அப்படியே தலைகீழாக எதிரில் இருந்த மரம் தடுத்ததால் கீழே உருண்டு விழாமல் நின்று கொண்டிருந்தது. என் கணவரும் பேரனும் சீட்டிலிருந்து கீழே விழுந்து மெதுவாக எழுந்து முன் பக்கம் நின்றிருந்தார்கள். நானும் என் பேத்தியும் கார் கவிழ்ந்ததால் கீழே விழுந்து விட்டோம். பேத்தி மலங்க மலங்க அரை தூக்கத்தில் விழித்து ' பாட்டி என்ன ஆச்சு?' என்றது.

கதவைத் திறந்து கீழே இறங்கலாமென்றால் எந்த லாக்கும்  திறக்க முடியவில்லை. கொஞ்சம் ஆடினாலும் கார் ஆடி கீழே விழுந்து விடுமோ என்று பயம். தெருவில் யாரும் இல்லை. காரின் கதவுகளில் நாங்கள் வேகமாகத் தட்ட சத்தம் கேட்டு ஏழெட்டு பேர் ஓடி வந்தார்கள்.

ஒருவர் பலமாக கதவைத் திறக்க முயல, முடியாததால் , 'உள்ளே எத்தனை பேர் இருக்கீங்க? யாருக்காவது அடி பட்டிருக்கா?'என்று கேட்க, அப்பதான் அந்த நினைவு வந்து பார்க்க, அதிசயம்..நாலு பேருக்கும் ஒரு கீறல் இல்லை. என் மனமோ என் வசமே இல்லை. பயத்தில் உடல் நடுங்க 'கிருஷ்ணா சுவாமிநாதா சாய்ராமா எதுவும் ஆகாமல் காப்பாத்து'என்று சுலோகங்களை சொல்ல ஆரம்பித்தேன்.

'கண்ணாடியைத் திறங்கம்மா' என்று ஒருவர் சொல்ல, முடியவில்லை என்று சைகை காட்டினோம். மீண்டும் முயற்சிப்போம் என்று திறக்க..என்ன அதிசயம்..
கண்ணாடி திறந்து கொண்டது.

என் கணவரும் பேரனும் மெதுவாக வெளியிலிருப்பவர்கள் உதவியுடன் வெளியே குதித்து விட்டனர். பேத்தியை தூக்கி இறக்கியாச்சு. என்னால் சாய்ந்திருந்த சீட்டில் ஏறிக் காலை வெளியில் வைக்க முடியவில்லை. கவிழ்ந்து விட்டதால் மேலிருக்கும் கண்ணாடி கீழே வந்துவிட்டது. வெளியிலிருந்தவர்...பயப்படாதீங்க என் காலில் ஏறி மெதுவா இறங்குங்க...என்றபடி தன் காலால் தாங்கிக் கொண்டார். அந்த நேரம் அவர் தெய்வமாகத் தெரிந்தார். கீழே ஒரே முள்செடிகள்..ஏப்ரல் மாதம்..நல்ல வெயில். என் செருப்புகள் காரில் அவிழ்ந்து விட்டதால் சூட்டில் நிற்க முடியவில்லை.

கார் விழுந்த இடத்திற்கு பின்னால் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. எங்கள் கார் விழுந்தபோது மதிய சாப்பாட்டு மணி அடிக்க பிள்ளைகள் வெளி மைதானம் வந்தபோது எங்கள் சத்தம் கேட்டு ஏதோ விபத்து என்று சொல்ல பள்ளி வேலையாட்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கூடிவிட்டனர். அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் எங்கள் யாருக்கும் ஒரு காயம் கூட படாதது. இன்னும் சற்று முன்போ தாமதமாகவோ நடந்திருந்தால் எல்லோரும் வகுப்புகளில் இருந்திருப்
பார்கள். இதுவும் கடவுள் செயல்தானே?

நாங்கள் பத்திரமாக வெளியில் வந்ததும் 10 பேராக காரைத் தள்ளி மேலே கொண்டு நிறுத்தி விட்டார்கள். 'மரம் இருந்ததால் வண்டி உருளவில்லை. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்குமோ.

'நீங்க கும்புடற சுவாமிதான் உங்களை ஒரு காயம் கூட படாமல் காப்பாத்தியிருக்கு' என்றபோது எனக்கு சரியான நேரத்தில் வந்து உதவிய அவர்களும் தெய்வமாகத் தெரிந்தார்கள்.

இந்த கசப்பான இந்த சம்பவம் இறையருளாலும் எங்கள் நல்லநேரம் மற்றும் அதிர்ஷ்டத்தாலும்  இனிதாக மாறியதை உணர்ந்து கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு