பெண் திருமண ஷாப்பிங்..!



நினைவலைகள்..7


எனக்கு ஒரே செல்லப் பெண். மும்பையில் மருத்துவம் படித்து வந்தாள். அவளுடையது காதல் திருமணம். மாப்பிள்ளையும் அதே கல்லூரியில் சீனியர். கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வருடம் காதல் வந்து விட்டது. பையன் குடும்பம் சிங்க மராட்டியர்கள்! பையன் மிகவும் மரியாதையானவன். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுக்கு என் மகளின் நீண்ட தலைமுடி, மூக்குத்தி, ஒல்லி உடம்பு எல்லாம் பிடித்துவிட வந்தது காதல்! சின்ன சின்ன ஆசை படத்தில் மதுபாலா மாதிரி பெண் இருக்க ஆசையாம்! அதனால் இவளைக் கண்டதும் மயங்கி காதலில் விழுந்து விட்டான். 'மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன்' என்ற கொள்கையோடு  இவளை மணக்க ஹீரோ ரேஞ்சில் அவன் எதுவும் செய்வதாக சொன்னான் என்பாள் வேடிக்கையாக!

பழகிய வரையில் மிக நல்ல குணமுள்ள தைரியமான பையன் என்பதால் எங்களுக்கு சம்மதம். அவர்கள் வீட்டிலும் சம்மதிக்க திருமணம் நிச்சயித்தோம்.

என் பெண்ணுக்கு காலையில் தமிழ் முறையிலும் அதையடுத்து மராட்டிய முறையிலும் திருமணம்! என் மகளுக்கு மராட்டிய வழக்கப்படி  என்ன சீர் செய்வது எப்படி திருமணம் செய்வது என்று கேட்ட போது, 'உங்கள் வழக்கப்படி செய்யுங்கள்' என்று சொல்லி விட்டனர். தாலியைப் பற்றிக் கேட்டபோது அவர்கள் செலவில் கருகமணியில் கோர்த்து அவர்களே செய்து விடுவதாக சொல்லி விட்டார்கள்.

என் மகளுக்கு வேண்டிய நகைகளை வாங்க நான்கைந்து பெரிய கடைகளுக்கு சென்றோம். என் திருமணத்தின் போதெல்லாம் என்  பெற்றோர் விருப்பத்திற்கு
தான் நகை வாங்கினார்கள். என் மகள் தனக்கு தானே பார்த்து வாங்க ஆசைப் பட்டாள். எங்கள் முறை தாலி செய்ய அங்கு நம் தமிழ்நாட்டுக் கடைகள் குறைவு. அதனால் அதற்கான கடையைத் தேடி தாலி வாங்கியபோது அங்கிருந்த வேறு சில நகைகளும் மிகப் பிடித்ததால் அங்கேயே வாங்கினோம். தானாவில் இருந்த ஒரு பிரபல நகைக் கடையில் நெக்லஸ் வாங்கினோம். மீனாகாரி முறையில் செய்த மிக அழகாக நெக்லஸ்.  ஒரு long necklace டாலருடன் வாங்கிக் கொண்டாள். மாப்பிள்
ளைக்கு மோதிரம் செயின் வாங்க அவரும் வந்தார்.
திருமண நகைகளை இன்னமும் மெருகு குறையாமல் பத்திரமாக வைத்திருக்கிறாள்.

அடுத்து புடவைகள். மும்பையில் நம்ம டைப் பட்டு புடவைகள், டிசைன்கள்  கிடைக்காது. அதனால் நானும் என் பெண்ணும்  சென்னை வந்தோம். அங்கு போத்தீஸ், சென்னை, குமரன், நல்லி என்று எல்லா கடைகளையும் ஒரு சுற்று வந்து கிட்டத்தட்ட பத்து புடவைகளுக்கு மேல் வாங்கினாள் என் பெண். என் அம்மா, தம்பி, என் பிள்ளை எல்லோரும் அவளுக்கு ஒவ்வொரு புடவை வாங்கிக் கொடுத்தார்கள். எங்கள் வழக்கப்படி நிச்சயதார்த்தம் ஊஞ்சல் நலங்கு கிரகப்ரவேசம் முகூர்த்தத்திற்கு என்று ஏழெட்டு புடவைகள் வாங்கினோம். ரிசப்ஷனுக்கு  மும்பையில் டிசைனர் புடவை வாங்கினோம். அதற்கு ஏற்ற மாதிரி மாப்பிள்ளைக்கும் மேட்சாக ரிசப்ஷன் டிரஸ். இப்படி பார்த்து பார்த்து வாங்கவே ஒரு மாதமாயிற்று.

அந்த சந்தோஷ நாட்களை நினைத்தால் இன்றும் மகிழ்ச்சி பொங்குகிறது. மீண்டும் வராத அந்த இனிய நாட்களைப் பற்றி புகைப் படங்களில் பார்த்து அவற்றைப் பற்றிய நினைவுகளே இந்த கொரோனா நாட்களில்  எங்களின் பொழுதுபோக்கு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1