நினைவலைகள்..8


பயணம் பலவிதம்..!


அழகழகான வித்யாசமான நகரங்களை சுற்றிப் பார்க்கும் பயணங்களுக்கு முடிவு ஏது?அவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் பலப்பல!

தமிழ்நாட்டில் வங்கி அதிகாரியான என் அப்பாவுடன் சென்னை, ஈரோடு, வேலூர், கரூர், முசிறி, நாகர் கோவில் என்று சுற்றிப் பார்த்ததோடு ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் குடந்தை, தஞ்சை, ஊட்டி, திருப்பதி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி,
மேட்டூர், சாத்தனூர் என்று தமிழகத்தின்  பல ஊர்களுக்கும் அப்பாஅம்மா தம்பிகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த நாட்கள் இன்று நினைவில் மட்டுமே!

கண்டு ரசித்த பிரபலமான இடங்கள் பலப்பல!
வணங்கி வரம் வேண்டிய திருக் கோயில்கள் நிறைய்...ய! அப்பொழுதெல்லாம் மொபைல் காமிரா இல்லாததால் இன்றுவரை கண்டு ரசித்த காட்சிகள் கண்ணிலும் மனதிலும் மட்டுமே தெரிகிறது!

திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டைத் தாண்டி கணவரோடு பல ஊர் வாசம்..பல இடங்களுக்கு பயணம். உத்திரப் பிரதேசம் (மதுரா ஆக்ரா) மகாராஷ்டிரம் (மும்பை கோலாப்பூர்)  பிள்ளைகளுடன் கர்நாடகா (பெங்களூர்) மத்திய பிரதேசம் (போபால்)பஞ்சாப்(சண்டிகர்)பெண்ணோடு  பீகார் (சமஸ்திபூர்), ஆந்திரா (ஹைதராபாத்) என்று பல மாநில வாசம்..!

பிள்ளைகள் வெளிநாடு சென்றதும் சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, லண்டன் என்று நினைத்தே பார்க்காத பல நாட்டுப் பயணங்கள்! சென்ற ஆண்டு ஸ்காட்லாந்து, செக்கஸ்லோ
வாகியா, போலந்து செல்வதாக இருந்த பயணங்கள் கொரோனாவால் ரத்தாகி விட்டன. இனி எப்போதோ?

சிறு வயது முதலே தனியாகச் சென்று பழக்கமில்லாத நான் 30 வருடங்களுக்கு முன் ஒருமுறை சென்னையிலிருந்து என் குழந்தைகளுடன் தனியாக  தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு ரயிலில் வந்தேன். அச்சமயம் நாங்கள் இருந்தது பாபநாசத்தில்.
என் கணவருக்கு அம்முறை எங்களுடன் வரமுடியவில்லை. எனக்கு ஒரே டென்ஷன்!

என் கணவர் பலமுறை...கவனமா பார்த்துண்டே வா. கும்ப
கோணத்திற்கு அடுத்தது பாபநாசம். ரயில் இரண்டு நிமிடமே நிற்கும். நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன். கும்பகோணத்தி
லேயே ரெடியாகி விடு...என்று படித்துப் படித்து  பல முறை சொன்னார்.

குடந்தையில் என் கம்பார்ட்மெண்ட்டே காலி. ஒருவரும் இல்லை. நானும் அவர் சொன்னபடி  ரெடியாகி  குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டே வர, ரயில் நின்றது. வெளியில் ஒரே கும்மிருட்டு. ஒரு ஆளும் இல்லை. ஸ்டேஷன் பெயரும் தெரியவில்லை. கேட்கவும் ஆளில்லை. என் கணவர் நின்ற இடத்திலிருந்து நிறைய தூரம் தள்ளி ரயில் நின்றதால் அவர் வேகமாக வந்தும் நான் ரயில் கதவருகில் நின்றது தெரியவில்லை. அப்பொழு
தெல்லாம் மொபைலும் கிடையாது. ரயில் கிளம்பி விட்டது.

நான் இறங்காததைப் பார்த்து என் கணவர் பயந்து போய்  அவருடன் வந்த நண்பர்களிடம் சொல்ல அவர்களில் ஒருவர் ஸ்லோவாகச் சென்ற ரயிலில் டக்கென்று ஏறி செயினைப் பிடித்து இழுக்க, அடுத்த இரண்டு நிமிடத்தில் ரயில் நின்றது. நான் கதவருகில் நின்று பார்க்க 2,3 பேர் ஓடி வருவது தெரிந்தது. என் கணவர் குரல் கேட்டது.

ஒரு குலுங்கலுடன் ரயில் நிற்க என் கணவரும் அவர் நண்பர்களும் 'சீக்கிரம் இறங்குங்க' என்று சொல்லி, என் குழந்தைகளை இறக்கி விட்டு சாமான்களையும்
வாங்கிக் கொண்டனர்.
நானும் அவசரமாக குதித்ததில் காலில் சிராய்ப்பு. பிளாட்
பாரத்தை விட்டு ரயில் நகர்ந்து விட்டதால் அந்த இடம் உயரமாகி விட்டது.

ஏதோ விபத்தோ என்று பயந்து ரயில்வே அலுவலர் ஓடிவர அவருக்கு தெரிந்தவரான  என் கணவரின் நண்பர் விஷயத்தை விளக்கினார். அந்த நாளில் அந்த ஸ்டேஷன் பெயர் எழுதிய போர்டின்மேல்  ஜீரோ வாட் பல்பு போல் ஒன்று இருந்ததால் எனக்கு ஸ்டேஷன் பெயர் தெரியவில்லை. இப்பொழுது எப்படி இருக்கோ தெரியவில்லை!

என் கணவரின் நண்பர் என்னைப் பார்க்கும் போதெல்லாம்...ரயில் நிக்கும்போது இறங்காம  செயினைப் பிடித்து இழுத்து இறங்கின VIPயாச்சே நீங்க...என்று கேலி செய்வார்! அதன்பின் பல இடங்களுக்கும் தனியாகச் செல்ல பழகிக் கொண்டாலும் இந்த சம்பவம் இன்றுவரை மறக்கவில்லை.

இன்னொரு முறை நான் மட்டுமே தனியாக போபாலிலிருந்து சேலத்திற்கு ரயில் பயணம் 2nd AC யில்.  திரும்ப வரும் போது என் எதிரில் 65 வயது பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் திருப்பதி செல்வதாகவும் ரேணிகுண்டாவில் இறங்க வேண்டும் என்றும் சொன்னார். அத்துடன் வளவளவென்று பேச்சு வேறு. அவர் குடும்பக் கதைகளை சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு போரடித்து விட்டது. ஏதோ பேசணுமே என்று, ..உங்கள் மனைவி திருப்பதி தரிசனத்திற்கு வரவில்லையா.. என்றபோது,..அவளுக்கு என்னோடு வரவே பிடிக்காது. எப்பவும் எனக்கு எதிர்மாறாகத்தான் பேசுவாள். ஏதோ நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..
என்றார். எனக்கு இது மாதிரி பேசுபவர்களைப் பிடிக்காது. இன்னொரு பெண்ணிடம் பரிதாபம் சம்பாதிக்க தன் மனைவியைப் பற்றி குறைவாகப் பேசும் ஆண்கள்    ஜொள்ளு பேர்வழிகளாக இருப்பார்கள் என்பது என் அனுமானம். நான் பிறகு பேச்சை நிறுத்திவிட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டேன்.

மேலே இருவரும் படுத்துறங்கி விட்டனர். இரவு சாப்பிட்டதும் நான் போர்த்தி படுத்து விட்டேன். எதிர்ப் பெரியவர் குட்நைட் சொன்னவர் மேலும் ஏதோ பேச ஆரம்பித்தார். எனக்கு மனதில் ஒரு பயம் வந்து விட்டது. இவர் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் என்பது அவர் பேசிய சில விஷயங்களிலிருந்து புரிந்தது. இவர் இரவில் தொட்டு விடுவாரோ, என்ன செய்வாரோ என்ற பயத்தில் கம்பளியை தலை வரை மூடிப் படுத்தும் தூங்க முடியவில்லை. எந்த ஆணையும் நம்ப முடியாதே!

அது முதல் நான் தனியாக ரயிலில் பயணம் செய்வ
தில்லை. இப்பொழுதெல்லாம் ரயிலிலேயே பயணம் செய்வதில்லை!! எனக்கு மிகவும் பிடித்த ஆகாய விமானப் பயணம்தான். விமானம் மேலே எழும்புவதும் மேகங்களுக்கிடையில் செல்வதும் எனக்கு மிகப் பிடித்த அனுபவம். விமான ஓட்டியின் திறமை என்னை வியக்க வைக்கும். ஒருமுறை அந்த விமானியை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்பது என் ஆசை!


கருத்துகள்