நினைவலைகள்..3..
முதல் மேடை அனுபவம்
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..!
மறந்த நினைவுகளை தூசி தட்டி மனதில் கொண்டு வரும் நல்ல ஒரு தலைப்பு! ஆனால் கண்ணிலும் மனதிலும் தெரியும் காட்சிகளுக்கு சாட்சியாக புகைப்படம் இல்லையே!
சிறு வயதில் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டு விழா நிகழ்ச்சிக்காகவும் மேடை ஏறி நடித்தது உண்டு.. பாடியதும் உண்டு! ஆனால் ஐம்பது வருடம் கழித்து இப்படி ஒரு கேள்விக்கு பதிவு எழுத வேண்டும் என்று தோன்றவில்லையே! அந்த நாளில் காமிராவும் இல்லை..புகைப்படமும் இல்லை. கண்ணில் மட்டுமே காட்சிகள் தெரிகிறது!
நான் பாட்டு கற்றுக் கொண்ட போது ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சபாவில் ஸ்ரீ தியாக
ராஜ உத்சவம் நடக்கும். அதில் பக்க வாத்தியங்களுடன் தவறாமல் பாடிப் பரிசு பெற்றதுண்டு.
அதன்பின் மேடை ஏறியது என் நாற்பது வயதுக்கு மேல் ஒரு கம்பெனியின் மேனேஜிங் டைரக்டராக! என் கணவர் நடத்திய கம்ப்யூட்டர் சென்டரில் நான் நிர்வாக அதிகாரி.
குடந்தையில் ஆரம்பித்த அந்த சென்டரை ஆரம்பித்து வைத்தவர் அங்கு அச்சமயம் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி. அதில் கடவுள் வாழ்த்து பாடியதும் நானே! பின்பு மேடையில் அமர்ந்து விழாவில் பங்கு கொண்டு பேசியதும், வந்தவர்களுக்கு நினைவுப் பரிசு அளித்ததும் நானே! அதன்பின் அங்கு நடந்த ஆண்டுவிழாக் கொண்டாட்
டங்களிலும் நிறைய மேடை ஏறியதுண்டு.
மேடையில் பரிசு வாங்கிய மறக்க முடியாத, பெருமையான அனுபவம் என் இரண்டாவது மகன் மும்பையில் Crisil என்ற கம்பெனியில் வேலை செய்தபோது அங்கு Best Employee என்ற விருது கொடுத்தார்கள். அச்சமயம் என் பேத்தி பிறந்தாள். அவளைப் பார்க்க அவன் சென்னை சென்றிருந்ததால் நான் அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டேன்.
நான் மும்பையில் வாஷிஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் உறுப்பினராக இருந்தேன். அங்கு ஆண்டு விழாக்களில் திரைப்படப் பாடல்களைப் பாடுவோம். அரங்கு நிறைந்த அந்த விழாவில் நானும் என் கடைசி மகனும் இணைந்து இசைக் கருவிகளுடன் (Orchestra) அந்தி மழை பொழிகிறது' பாடலைப் பாடினோம். மிகவும் ரசித்த மக்களின் கைதட்டல் கேட்டபோது மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது!
பரிசு கொடுத்த அனுபவமும் உண்டு! என் பேத்திகளின் பள்ளியில் வருடா வருடம் Grand Parents Day நடக்கும். அச் சமயம் அங்கு பரிசு வழங்க தாத்தா பாட்டிகளை அழைத்து பரிசு தரச் சொல்லி கௌரவிப்பார்கள். அந்த நேரம் அந்தக் குழந்தைகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்க்கும்போது மனம் மிக குதூகலிக்கும்!
அட..இப்பவும் பரிசு வாங்கிக் கொண்டிருக்கிறேனே மாம்ஸ்ப்ரஸ்ஸோவில்! மேடை, மைக், அரங்கம் இல்லாவிட்டாலும் இதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை உண்டா? என் எழுத்துக்கு மட்டுமன்றி என் குழந்தைகள், பேரன் பேத்திகளின் திறமைக்கும் பரிசு கிடைக்கும்போது பெறும் உற்சாகம் இன்னும் இன்னும் எழுதவும், ஆடவும், பாடவும் தோன்றுகிறது! Gold Blog Badge, Gold Story Badge, Gold Badge winner இவற்றைப் பெறும்போது தங்கமே கிடைத்தாற் போல் மனம் குதூகலிக்கிறது!
இது போல நல்ல வித்யாசமான தலைப்புகளில் எழுதத் தூண்டும் மாம்ஸ்ப்ரஸ்ஸோவிற்கு நன்றிகள் பல!
கருத்துகள்
கருத்துரையிடுக