நினைவலைகள்1...மனம் கவர்ந்த புகைப்படம்..

 


நினைவலைகள்1...மனம் கவர்ந்த புகைப்படம்..


ஐரோப்பாவின் அழகில் மயங்கினேன்!

பதினைந்து வருடம் முன்பு என்னுடைய முதல் வெளிநாட்டு பயணம். ஆகாயவிமானத்தில் 14 மணி நேரம் போனதே பிரமிப்பு. ஃப்ராங்க்ஃபர்ட்டில் இறங்கியதும்..நாமா ஐரோப்பா வந்துள்ளோம்..என்று என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்! அதன்பின் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, இத்தாலி,லண்டன் என்று பல நாடுகள் சுற்றிப் பார்த்தாலும் முதல் காதல் முதல் முத்தம் போல் இந்தப் பயணமும் நினைவில் நின்ற மறக்க முடியாத பயணம்!

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்!பாரிஸும் ஸ்விஸ்ஸும் போகாமல் வருவதில்லை என்று முடிவு செய்து போனேன். அவற்றோடு என் பிள்ளை அழைத்துப் போன வேறு சில அற்புதமான இடங்களும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர்; பச்சைப் புல்வெளிகள்; கலப்படமில்லாத சுத்தமான காற்று; சத்தமில்லாத சுற்றுப்புறம்! இவற்றை அனுபவிக்க ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு செல்ல வேண்டும். அந்த சுகத்தையும், அமைதியையும், (போக்குவரத்து நெருக்கடியான இடங்களில்  கூட எந்த வாகனத்திலிருந்தும் ஹார்ன் சத்தம் கேட்பதில்லை) ஒழுங்கையும், சட்டத்தை மக்கள் தவறாது கடைப்பிடிப்பதையும் பார்த்து எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் கூட தீரவில்லை.

என் மூத்த மகன் ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட்டில் உள்ள மாக்ஸ் பிளான்க் யூனிவர்சிடியில் வேலையில் இருந்தான். அவனைப் பார்க்கச் சென்ற நான், அப்படியே ஜெர்மனியையும் சுற்றிப் பார்த்தேன். ஜெர்மனியின் பல இடங்களைச் சுற்றிப்பார்த்த என்னை மிகவும் கவர்ந்தது 'பிளாக் ஃபாரெஸ்ட்' என்ற இடம்தான். அடர்த்தியான ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைப்பகுதி. சிறிய கிராமங்கள் பளிச் வீடுகளுடன் காட்சியளிக்
கின்றன.


ஜெர்மனியின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பிளாக் ஃபாரெஸ்டின் மையப் பகுதியான 'டிரைபெர்க்'
என்ற இடத்தில் உள்ளது. வெள்ளி வண்ண
அருவியின் அழகும்,
வேகமும், கருநிற கிரானைட் பாறைகளின் வழியே விழும் நேர்த்தியும் நம்மை
'ஆ'வென்று வாயைப் பிளக்க வைக்கிறது! வெள்ளை வெளேரென்ற பளிங்கு போன்ற தண்ணீர் 'ஹோ'வென்ற சத்தத்துடன் 163 மீட்டர் ஆழத்தில் வந்து விழுவதை ரசிக்க பல கோணங்களிலும் இடங்களை அமைத்துள்ளனர்.

ஒவ்வொரு இடத்திலும் அருவியின் தோற்றம் வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது. நாம் செல்லும் வழியெங்கும் அந்த இடங்களைப் பற்றி ஜெர்மனிலும், ஆங்கிலத்திலும் எனாமல் பிரிண்ட்களை வைத்துள்ளதால், நாம் அதைப் படித்து அதன்படி செல்ல வசதியாக உள்ளது, கோடை நாட்களில் இங்கு பல வர்ண வாண வேடிக்கைகள் நடப்பது கண் கொள்ளாக் காட்சி.

இம் மலையிலுள்ள பெரிய அணில்கள் சற்றும் பயப்படாமல் நம்மருகில் வந்து நாம் கொடுக்கும் கடலையை வாங்கிக் கொள்கின்றன. இதற்காக டிக்கட் கொடுக்கும் இடத்தில் கடலையும் விற்கப்படுகிறது!

உலகின் மிகப்பெரிய குக்கூ கடிகாரம் இங்குதான் உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய அறையிலிருந்து வெளிவந்து கூவும்.
'குக்கூ' பறவையின் ஒலியைக் கொண்ட இந்த கடிகாரத்தின் அளவு நம்மை பிரமிக்க வைக்கிறது.


அதன் பெண்டுலமே நம் உயரத்துக்கு உள்ளது. அதனுள் சென்று அது செயல்படும் விதத்தை நாம் காண முடியும். பக்கத்திலுள்ள கடைகளில் அதே போன்ற அமைப்பில் மிகச் சிறிய அளவிலிருந்து விதவிதமான அலங்காரத்துடன் கடிகாரங்கள் விற்கப்படுகின்றன. இக்கடிகாரம் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டுள்ளது.

டிரைபெர்கின் அருகில் டோனகுல்லா என்ற கிணறு ஒன்று உள்ளது. இது டோனா நதியின் முகத்துவாரமாகும். அந்தக் கிணற்றில் நீர் ஊறும் வேகத்தைப் பார்க்க வேண்டுமே? அந்தத் தண்ணீர் வெளியேற கிணற்றினுள் கீழே வழியுள்ளது. இந்த இடத்தில் நாம் ஏதாவது மனதில் நினைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து திரும்பி நின்றபடி காசை கிணற்றினுள் போட வேண்டுமாம்! அட! இது போன்ற நம்பிக்கைகளுக்கு எந்த நாட்டு மக்களும் விதி விலக்கல்ல போலிருக்
கிறது! கிணற்றினுள் ஏகப்பட்ட யூரோ நாணயங்கள். நானும் நம் நாட்டு ரூபாய் நாணயத்தைப் போட்டு விட்டு வந்தேன். யூரோ மதிப்பு அதிகமாச்சே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு