நினைவலைகள்..14




பிறந்த நாள்..இன்று பிறந்தநாள்..!


நான் சிறுமியாக இருந்த நாட்களில் எல்லாம் பிறந்த நாள் கேக், பார்ட்டி, வெளியில் சாப்பாடு இதெல்லாம் கிடையாது. புதிய ஆடை வாங்கித் தருவார்கள். அம்மா வீட்டில் பாயசம் செய்வார். கோயிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து அர்ச்சனை செய்து வருவோம். என்  வகுப்பில் படிக்கும் நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு
சாக்லேட் கொடுப்பேன். என் பிறந்த நாள் மே மாதம் வரும் என்பதால் வகுப்பு விநியோகம் கிடையாது!

திருமணத்துக்கு பின்னும் ஏதாவது ஸ்வீட் செய்து புதிய புடவை வாங்கிக் கொள்வேன். கடந்த 2017ல் எனக்கு அறுபது வயது முடிந்தபோது சஷ்டியப்த பூர்த்தி செய்து வைத்தனர் என் கணவரும் குழந்தைகளும். என் இரண்டு  பிள்ளைகள், பெண் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். என் நட்சத்திர
நாளன்று ஹோமம், ஜபத்துடன் விமரிசையாக சஷ்டி
அப்த பூர்த்தி நடை பெற்றது.

அடுத்த இரண்டு நாளில் என் பிறந்த தேதி வந்தது. அன்றுதான் என் கடைசி மகனுக்கும் பிறந்தநாள். என் மகள் ஏற்பாட்டில் எல்லோரும் ஹோட்டல் சென்று கேக் வெட்டி கொண்டாடினோம்!


என்னால் மறக்க முடியாத பிறந்தநாள் ஜெர்மனியில் நான் கொண்டாடிய என்பதை விட, என் பிள்ளை, மருமகள், பேத்திகளால் கொண்டாட வைக்கப்பட்ட  பிறந்த நாள்! நான் அங்கு சென்றபோது எனக்கு 60 வயது ஆரம்பம். அதற்காக என் மருமகள் ஸ்பெஷல் கேக் செய்திருந்தாள். என் பிறந்த நாளுக்காக என் வாழ்நாளில் நான் வெட்டிய முதல் கேக் அது!


அங்கு நம்மைப் போல் மாலை கேக் வெட்டும் விழா கிடையாது. முதல் நாள் இரவு நான் உறங்கியதும் என் மருமகளும், பேத்திகளுமாக பிறந்த நாளுக்கான வாசகங்கள் தோரணங்களைக் கட்டி ரெடியாக வைத்திருந்தார்கள். என் மருமகளே விதவிதமாக கேக்குகள் செய்வாள். காலை எழுந்து வரும்போதே டேபிளில் கேக் பரிசுப் பொருள்கள் எல்லாம் தயாராக வைத்துவிட்டு,  என் கண்ணை மூடிக் கொண்டு வரச் சொன்னார்கள். வந்ததும் கண்ணைத் திறக்க Happy Birthday பாட்டைப் பாடி கேக்கை வெட்டச் சொன்னார்கள்!  என் குட்டிப் பேத்தி எப்ப கேக் சாப்பிடலாம் என்று ஆசையாக உட்கார்ந்திருந்தது! எல்லோரும் hug and wish செய்த பின் பரிசுகள் தரும் நேரம்! என் பெரிய பேத்தி மிக அருமையாக ஓவியம் வரைவாள். என்னை ஓவியத்தில் வடித்துக் கொடுத்தாள். சின்ன பேத்திகள் இருவரும் சின்ன
பரிசுப் பொருள்கள் தந்தார்கள்!



நான் அவர்கள் வீட்டில் ஏதாவது புதிதாக சாமான்கள் வாங்கியிருந்தால் அதை நன்றாக இருக்கே என்று சொன்னால் போதும், என் மருமகள் மறுநாளே அதை வாங்கி வந்து எனக்கு கொடுத்து விடுவாள்! அதுபோல் நான் ஆசைப்பட்ட பொருள்களை வாங்கி gift pack செய்து வைத்திருந்தாள்.


எல்லோரும் கிஃப்ட் கொடுத்தபின் என் மருமகள் என் கணவரிடம்...நீங்க அம்மாக்கு என்ன கொடுத்தீர்கள்...என்றாள்! அவர் சாமர்த்தியமாக...நானே அவளுக்கு கிஃப்ட்தானே..
என்றார்!

என் பிள்ளை தன் பங்குக்கு எங்கள் எல்லோரையும் அருகிலிருந்த இந்தியன் ரெஸ்ட்டாரெண்ட்க்கு சாப்பிட அழைத்துச் சென்றான்!  வெளிநாட்டில் கொண்டாடிய இந்தப் பிறந்த நாள் மறக்க முடியாததாக இன்றும் மனதில் மகிழ்ச்சி தருவதாக உள்ளது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1