நினைவலைகள்..13


நாளாம் நாளாம் திருமண நாளாம்!


ஏப்ரல் ஐந்தாம் நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள்...என் திருமண நாள்!1976 ம் ஆண்டு என் 18ம் வயதில் இந்த நாளில்தான் நான் திருமதி யாக மாறினேன். என் அம்மாவும்,  அப்பாவும்
என்னைப் பிரிய மனமின்றி  திருமணம் செய்து கொடுத்து
விட்டு கலங்கிய கண்களுடன் நின்றது இன்னும் என் கண்களில் கண்ணீரை நிறைக்கிறது.

திருமணத்தன்று என் கணவருடன் அதிகம் பேச முடியவில்லை. காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்ததால் சோர்வு வேறு. தம்பியிடம் என்ன பேசி மயக்கி  விடுவேனோ என்ற பயத்தினால் என் நாத்தனார்
என் பக்கத்திலேயே இருந்தார்!

எங்கள் திருமணம் முசிறியில் நடந்தது. என் கணவர் பணி புரிந்தது திருச்சியில். இரண்டுக்கும் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரமே! என் பெற்றோருக்கு மிக்க சந்தோஷம், பெண்ணை அடிக்கடி பார்க்கலாமே என்று! பாவம் என் அம்மாவின் சந்தோஷம் நிலைக்க வில்லை. அடுத்த எட்டே மாதத்தில் என் கணவருக்கு மதுராவுக்கு மாற்றலாக அங்கு சென்று விட்டோம்.

திருமணத்திற்கு மறுநாள் காரில் முசிறியிலிருந்து திருச்சி கிளம்பினோம். காரில் என் பெற்றோர், நாத்தனார் எங்களுடன் வந்தனர். மற்ற உறவினர்கள் பஸ்ஸில் திருச்சி கிளம்பிச் சென்றனர். வழியில்
குணசீலம் ஆலயத்தின்
அருகில் கார்பழுதாகிவிட்டது. அன்று நல்ல முகூர்த்தம் என்பதால் எல்லா பஸ்களும் ஃபுல். டிரைவர் சரி செய்தும் முடியாததால் என் நாத்தனார் போக மனமின்றி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக (தம்பியை விட்டுப் போக மனமில்லையாம்!) பஸ்ஸில் சென்றார்.

இக்காலம் போல கால்
டேக்ஸியோ, மொபைல்
ஃ போனோ இல்லாத காலமாச்சே? இறைவனை தரிசித்து எங்கள் மணவாழ்வைத் தொடங்க வேண்டும் என்று எங்களைத் தடுத்தாட் கொண்டார் போலும்பெருமாள்! குணசீலம் ஶ்ரீ பிரசன்னவெங்கடேசப்
பெருமாளை
தரிசனம் செய்து விட்டு,
பஸ்ஸில் திருச்சி வந்து சேர்ந்தோம். அன்று முழுதும் திருமணம் விசாரிக்க வந்தவர் களுடனே  பொழுது
போய்விட்டது.

மூன்றாம் நாள்  திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு சென்றபோது
தான் நாங்கள் பேசிக் கொண்டோம். அங்கு ஒரு குரங்கு என் கையிலிருந்த அர்ச்சனைத் தட்டைப் பிடுங்க என் கணவர் என்னை அணைத்து பிடிக்க..முதல் ஸ்பரிசம்!  (முதலிரவில் தொடவில்லையா என்று யோசிக்காதீங்க! அவர்கள் வீட்டு முறை என்று அதுவே ஒரு மாதம் கழித்துதான் நடந்தது!)

நான்காம் நாள் என் நாத்தனாரும் திருச்சியில் இருந்ததால் அங்கு விருந்து!அதற்கடுத்த நாள் படம் போனோமே! என்ன படம் தெரியுமா....மன்மதலீலை ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருந்தது! நாங்கள் போனதென்னவோ சம்பூர்ண ராமாயணம்! கூட்டம் இல்லாத படம்.  மனம் விட்டு பேச வசதியாக இருந்தது.

எப்படியோ நினைவில் மட்டுமே இருந்த ஐந்து நாட்களை எழுத்தில் வடிச்சாச்சு! நினைவும் ஒரு சுகமே!

மறுநாளிலிருந்து சமையலறையை என்வசம் ஒப்படைத்த என் மாமியார் 'ஹாயாக' போய் ஹாலில் அமர, நான் திக்கித் திணறி சமையல் கற்று அதில் தேர்ந்து நள பாக நாயகியாகி இன்று வரை சமையலறையும் நானும்...நானின்றி நீயில்லை நீயின்றி நானில்லை...என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அங்குள்ள அடுப்பும் பாத்திரங்களும் கூட நான் சொல்வதைத் தான் கேட்கும்!அவ்வளவு க்ளோஸ் நாங்க!

இப்பவும் என் மருமகள் சொல்வாள்..அம்மா இந்த குக்கர் விசில் வர மாட்டேங்கற்து. நீங்க வந்து சொல்லுங்கோ..என்பாள்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1