நினைவலைகள்..13



எனக்கொரு மகன் பிறந்தான்!


என் முதல் மகனைக் கருவுற்றபோது நான் இருந்தது உத்தர பிரதேசத்திலுள்ள மதுராவில். என் தந்தை பணி புரிந்தது நாகர்கோவிலில்! காஷ்மீர் - கன்யாகுமரி எட்டாம் மாதம் பிரயாணம் செய்வது கடினம் என்பதால்  ஆறாம் மாதமே வளைகாப்பு சீமந்தம் முடித்து  நான் அம்மா வீடு வந்தாச்சு! ஒன்றரை வருடம் கழித்து அம்மா வீடு வந்ததால் ஒரே குஷி! மகன் பிறந்தது மார்கழி கடைசியில் ஜனவரி 4ம் தேதி. அதுவரை நான் வாசலில்  தினமும் பெரிய கோலம் போடுவேன்.

அன்று மதியம் முதலே ஒரு மாதிரி சோர்வாக இருந்தாலும் சொல்லத் தெரிவில்லை. வலியும் அதிகமில்லையா அல்லது எனக்கு எப்படி வலிக்கும் என்று தெரியவில்
லையோ? அன்று இரவு 9 மணிக்கு எல்லோரும் படுத்து விட்டோம். திடீரென்று வயிற்றில் 'பட்' என்று ஏதோ சத்தம் கேட்க, தண்ணீர் வெளிவருவது போல் தோன்ற, அம்மாவைக் கூப்பிட்டேன்.

எனக்கு ஏதோ தவறாகி விட்டது என்ற பயம் வந்து விட்டது. என் அம்மாவும் பயந்து விட்டார். உதவிக்கு இருந்த மாமி..பனிக்குடம் உடைந்து விட்டது. குழந்தை பிறந்துவிடும். ஆட்டோ கூப்பிட்டு வாங்கோ...என்றார் அப்பாவிடம். என்னை 'காலை அகட்டாமல் இணைத்து வைத்துக் கொள். குழந்தை கீழே விழுந்துவிடும்' என்று வேறு பயமுறுத்தி விட்டார். அவசரமாக மருத்துவமனைக்கு சென்றோம். நர்ஸ் டாக்டருக்கு ஃபோன் செய்து அவர் வந்து நார்மல் டெலிவரிக்கு முயற்சித்தார். முடியவில்லை.
குழந்தை இறங்கவில்லை. ஊசி போட்டும் வலியில்லை.
முன்பே அட்மிட் ஆகியிருக்க வேண்டும் என்றார்.

தண்ணீர் முழுதும் போய்
விட்டதால் குழந்தைக்கு மூச்சு விடுவது சிரமமாகிவிடும்.
அதனால் உடன் Forceps போட்டு எடுக்க வேண்டும் என்றார். நான் எவ்வளவோ முயற்சி செய்து முக்கியும், தலை கீழிறங்கி தங்கி விட்டதால் Forcepsல் குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்து வெளியில் எடுத்தார்.

ஆண் குழந்தை என்றார். இன்னும் சற்று நேரமாகி இருந்தாலும் சிசேரியன் ஆகியிருக்கும் என்றார். குழந்தை அழவில்லை. எனக்கு பயமாகி விட,  நர்ஸ் ஊசி போட்ட பின்பே அழுதான். குழந்தையை என்னிடம் காட்டியபோது தலை நீளமாக இருந்தது. டாக்டர் தலையில் ஆயுதத்தால் இழுத்ததால் நீண்டிருப்பதாகவும், அழுத்திக் குளிப்பாட்டினால் சரியாகும்
என்றார். எனக்கோ ஏகப்பட்ட தையல்கள். வலி தாங்க முடிய
வில்லை.

மூன்றாம் நாள் என் கணவர் வந்தார். குழந்தை அவரைப் போலவே இருப்பதாக சொன்னதைக் கேட்டு ஒரே சந்தோஷம். இப்பவும் இருவரும் ஒரே அச்சாக இருப்பார்கள். என்னிடம்
..என்னை ஏமாற்றி விட்டாயே...என்றார் பாவமாக!அவருக்கு பெண் வேண்டும் என்று ஆசை. இரண்டாவதும் மகனாகி மூன்றாவதாகத்தான் என் பெண் பிறந்தாள்!

ஆறு நாட்கள் ஆஸ்பத்திரி வாசம். ஏழாம் நாள் டிஸ்சார்ஜ். என் பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் 'நம்மிடமிருந்தா இந்தக் குழந்தை வந்தது' என்று ஆச்சரியப் படுவேன். அடுத்த குழந்தைகளுக்கு லேசாக வலிப்பது போல் இருக்கும் போதே  ஆஸ்பத்திரிக்கு கிளம்பிவிடுவேன்!


மாம்ஸ்ப்ரஸ்ஸோவால் நான் மறந்திருந்த நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நன்றி மாம்ஸ்ப்ரஸ்ஸோ🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1