நினைவலைகள்..11



முதன்முதல் சைக்கிள் ஓட்டிய அனுபவம்..

விழுந்து விழுந்து எழுந்தேன்!


நான் சின்னப் பெண்ணாய் இருந்த நாட்களில் எங்கள் வீட்டில் சைக்கிள் கிடையாது. என் தம்பிக்கு பத்து வயதான பின் தான் சைக்கிள் வாங்கினார் என் அப்பா. அப்பவும் அவர் மட்டுமே ஓட்டுவார். நாங்கள் அந்த சமயம் சென்னையில் இருந்தோம். என் தம்பிக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க அருகில் இருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லும் போது  நானும் செல்வேன்.

என் அம்மாவுக்கு பெண்ணும் சைக்கிள் கற்று ஓட்ட வேண்டும் என்ற ஆசையால் என்னையும் அனுப்பி கற்றுக் கொள்ள சொல்வார். நானும் கற்றுக் கொண்டேன். ஆனாலும் என்னை என் வீட்டில் தனியே சைக்கிள் ஓட்ட அனுப்பிய தில்லை!

அதன் பின் படிப்பு முடிந்து திருமணம். என் கணவர் வேலை நிமித்தம் உத்தர பிரதேசத்திற்கு மாற்றல்! சைக்கிள் ஓட்டும் ஆசை காணாமலே போயிற்று! என் கணவர் ஸ்கூட்டர் வாங்கி விட்டதால் ஜாலியாக அவரை அணைத்தபடி பின்னால் அமர்ந்து பயணம்!

குழந்தைகள் பிறந்து அவர்களும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டார்கள். அச் சமயம் எல்லா பெண்களும் TVS 50 ஓட்டியதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்தது. என் குழந்தைகளுக்கும் பனிரெண்டு வயதானதால் என் கணவர் பின்னால் அவர்களுக்கு உதவும் என்ற எண்ணத்தில் வாங்கினார்.

நான் சைக்கிள் ஓட்டியிருப்
பதால் எனக்கு சுலபமாக ஓட்ட வரும் என்றவர், ஒருநாள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு சென்று என்னை ஓட்டச் சொல்லி பின்னால் அமர்ந்து கொண்டார். நானும் இருபத்தைந்து வருடங்களுக்கு
முன்னால்  சைக்கிள் ஓட்டிய பெருமையில் கெத்தாக  கிளம்பி விட்டேன். 'நான் பின்னால் உட்கார்கிறேன்' என்று என் கணவர் பின்னால் அமர, நானும் சற்று வேகம் எடுக்க பேலன்ஸ் போய் இருவரும் வண்டியோடு கீழே விழுந்தோம்! நல்ல வேளை யாரும் தெருவில் இல்லை!

பாவம்..என் கணவருக்கும் காலில் சிராய்ப்பு! 'நீ நன்றாக ஓட்டுவாய் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேனே' என்றார்!  'என்னால் முடியாது. வேண்டாம்'  என்று நான் பின் வாங்க, என் கணவர்
..உன்னால் வண்டி ஓட்ட முடியும். நான் கற்றுத் தருகிறேன்..என்று கற்றுக் கொடுத்தார்.

நாங்கள் மதுரையில் இருந்த போது என் கணவருக்கு வங்கியில் அடிக்கடி வெளியூர் பயணம் வரும் என்பதால் நான் தான் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு விட்டு அழைத்து வருவேன்.ஆரம்ப நாட்களில் இரண்டு பேரை பின்னால் உட்கார்த்தி அழைத்துப் போகும் போது சற்று கஷ்டமாக இருந்தாலும் பின்பு பழகி விட்டது. ஆனாலும் என் பிள்ளைகள் சற்று பயந்த படிதான் உட்காருவார்கள்!

வண்டி ஓட்டும் போது மிக பெருமையாக இருக்கும். நாமும் ஆண்களுக்கு சரியாக வண்டி ஓட்டுகிறோம் என்ற மகிழ்ச்சி! ..நீங்க வண்டி ஓட்டுவேளா..என்று ஆச்சரியப் படுபவர்களுக்கு முன்னால் ஒரு சந்தோஷம்...!

ஒரு முறை  நான் வண்டி ஓட்டிக் கொண்டு செல்லும் போது நடு வழியில் ஒரு எருமை மாடு வர, நான் ஹாரன் அடித்தும் அது நகரவில்லை. அது நின்று விட்டது,  நகராது என்ற எண்ணத்தில் நான் முன்னால் வர, அதுவும் அதே நேரம் நகர, அதன் பின்புறம் இடித்து வண்டி பேலன்ஸ் தப்பி கீழே விழ சைலன்சர் என் காலில் சுட்டு, காயம் ஆற இரண்டு மாதமாயிற்று. என் பிள்ளைகள்..என்னம்மா விழுப்புண் பட்டதா.. என்று கிண்டலடித்தார்கள்!

இதுபோல நானும் ஏறி இறங்கி விழுந்து எழுந்து சில வருடங்கள் வண்டி ஓட்டியபின் என் பிள்ளைகளே ஓட்ட ஆரம்பிக்க...ஜாலியாக பின்னால் உட்கார்ந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்! இப்போதெல்லாம் கார் பயணம்தான்!

என்றோ ஓட்டிய சைக்கிள் பயண நினைவை எழுத்தில் கொண்டுவர உதவிய மாம்ஸ் ப்ரஸ்ஸோவுக்கு நன்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)