வைராக்கியம்(100வரிக்கதை)

 


வைராக்கியம்


"அம்மா தாத்தாவும் பாட்டியும் ஏன் பேசிக்கறது இல்ல?"வானதி சங்கரியிடம் கேட்டாள்.

"என்ன கேட்ட? அதுவா..
அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையாச்சே..
கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு. எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கும்."

"அவங்களுக்குள்ள அப்படி என்ன சண்டை? நீங்களும் மாமாவும்  தடுக்கலயா?"

"சொல்றேன் வானதி. உன் பாட்டிக்கு ஒரு தம்பி..அதான் என் மாமா. சுப்புனு பேரு. உங்க தாத்தா அப்ப  நிறைய சம்பளத்தில நல்ல வேலைல இருந்தார். என் மாமாவுக்கு படிப்பு ஏறல. அதோடு கெட்ட சகவாசம் நிறைய. சரியா படிக்காம வேலையும் இல்லாம இருந்தான்."

"அவருக்கு தாத்தா உதவிருக்கலாமே?"

"அதுல வந்தது தான் வினை. மாமா என் தாத்தா பாட்டிகிட்ட அடங்க மாட்டார். அவங்களை எதிர்த்து பேசுவார்."

"ஐயோ பாவம்."

"அவங்க,  தாத்தாகிட்ட சுப்பு மாமாவுக்கு ஏதாவது உதவி செய்யச் சொன்னாங்க. உங்க தாத்தா  அவரை கூப்பிட்டு நிறைய அறிவுரை சொன்னார்."

"ரொம்ப சுவாரசியமா சினிமா கதை மாதிரி சொல்றியே!"

"எங்க அப்பாவும் மச்சினனுக்கு ஏதாவது உதவி செய்ய நினைச்சு என்ன தொழில் செய்ய முடியும்னு கேட்டார். அவரும் ஒரு மளிகைக் கடை வைத்து தரச் சொன்னார்."

"என்னம்மா நீ? தாத்தாவும் பாட்டியும் ஏன் பேசறதில்லனு கேட்டா ஏதேதோ கதை சொல்றயே?"

"ஒரு லட்ச ரூபாய் செலவழித்து மளிகைக் கடை  வைத்துக் கொடுத்தார். அதையும் சரியா
நடத்தல்ல என் மாமா. கெட்ட சகவாசம் அதிகமாகி கடையும் நஷ்டமாகி அந்தக் கடனை அடைக்கவும் முடியல. உங்க தாத்தா அவரைக் கேட்டபோது அவர் தாறுமாறா பேசிட்டார்".

"அப்படியா? அப்புறம் என்ன ஆச்சு?"

"எங்கம்மா மாமாவுக்கு ஆதரவா 'அவன் ஏதோ சின்னப் பையன். இன்னொரு தடவை வேற ஏதாவது வியாபாரத்துக்கு பணம் கொடுங்க'ன்னாங்க.இது தாத்தாவுக்கு பிடிக்கல".

நடுவில ஒருநாள் என் மாமா தண்ணியைப் போட்டுட்டு வந்து என்னை தனக்கு கல்யாணம் பண்ணித் தரும்படிக் கேட்டார்."

"அச்சோ? பிறகு என்ன ஆச்சு?"

"எங்கப்பாவுக்கு இஷ்டமில்ல. ஒரு அயோக்கியனுக்கு என்னைக் கல்யாணம் பண்ணித் தரமாட்டேனுட்டார்".
'நம்ம பெண்ணைக் கல்யாணம் செஞ்சு வச்சு அவனை நம்ம வீட்லயே வச்சுக்கிட்டா ஒழுங்கா மாறிடுவான். நீங்க என் தம்பியை நம்பல. எங்க வீட்டு மனுஷங்களை உங்களுக்கு பிடிக்கலனல்லாம் பாட்டி அழவே ஆரம்பிச்சுட்டாங்க".
எனக்கு மாமாவை சுத்தமா பிடிக்காது. பயந்துகிட்டே இருந்தேன். எங்கம்மா மட்டும்  அவங்க வீட்டுக்கு போனப்போ அவங்களும், மாமா என்னைக் கல்யாணம்பண்ணினா மாறிடுவார்னு ஏத்தி விட்டிருக்காங்க".

ஒருநாள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் அதிகமாகி 'உன் தம்பியைப் பற்றி இனிபேசினா நீ இந்த வீட்டில இருக்க வேண்டாம். உங்க வீட்டுக்கு போய்டு. என் குழந்தைகளை நான் வளர்த்துக்க
றேன்'னு தாத்தா சொல்ல அம்மா நாலைஞ்சு நாள் ரொம்ப அழுதாங்க. அப்பறம் சாதாரணமா இருந்தாங்க. ஆனா உங்க தாத்தா அதுக்கு பிறகு அவங்க கூட பேசறதை சுத்தமா நிறுத்திட்டாங்க. பாட்டி எவ்வளவோ பேச முயன்றும் எதுவும் நடக்கல".

"உன் கல்யாணம் எப்படி நடந்தது?"

"எங்கப்பாவோட நண்பர் மகன்தான் உங்கப்பா. அப்பாவே எல்லா ஏற்பாடும் பண்ணி கல்யாணம் முடிந்தது. உங்க மாமா வேலை கிடைச்சு வெளியூர் போய்ட்டார். அவருக்கும் தாத்தாதான் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சார்.நான் வெளியே வந்ததும் அவங்க பேசிப்பாங்கனு நினைச்சேன். ஆனா தாத்தா வைராக்யமா பேசவே இல்ல. பாட்டி ரொம்பவே ஃபீல் பண்ணினாங்க".

"நீ சொல்லி மாத்திருக்கலாமே?"

"அப்பாகிட்ட மன்னிக்க சொல்லி கேட்டேன். அப்ப அவர் 'உங்கம்மாவை என் உயிருக்கு மேல நேசிச்சவன் நான். ஆனா என்னோட மனசு புரியாம அவளோட உதவாக்கரை தம்பிக்கு பெற்ற பெண்ணையே கல்யாணம் பண்றதா சொன்னதை என்னால ஜீரணிக்க முடியல. எனக்கு வெறுத்துப் போச்சு'னு சொன்னப்போ அவர் மனசு எவ்வளவு காயப் பட்டிருக்கும்னு புரிஞ்சுது.நானும் அவரை அதுக்கு மேல வற்புறுத்தல".

"இதில இவ்வளவு விஷயம் இருக்கா? நீ எப்படிம்மா? நம்ம அப்பா ஸைடா? உங்க அம்மா அப்பா பக்கமா?"

"கடைசியா என் தலைலயே கை வக்கறியா நீ? நானும் உன் அப்பாவும் சேர்ந்து பேசிதான் எந்த முடிவும் எடுப்போம். உன் தாத்தா பாட்டிகிட்டருந்து நான் கத்துக்கிட்ட பாடம் இது!"


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1