அகல்யாவின் ஆசை..(100 வரிக்கதை)அகல்யாவின் ஆசை....

"எங்கப்பாவை ஏன் கூப்பிடக் கூடாதுனு சொல்லுங்க.." என்று ஸவிதா கேட்டபோது அவள் பாட்டி ஜானகி பதில் சொன்னாள்.


"இங்க பாரு ஸவிதா. உங்கப்பா உனக்காக இதுவரைக்கும் என்ன செய்திருக்கார்? அவர் வரதில எங்களுக்கு இஷ்டமில்ல."


"அதெப்படி சொல்றீங்க. எங்கப்பாவோட எனக்கு இன்று வரைக்கும் தொடர்பு இருக்கு. என்னிடம் அவர் பாசமாதான் இருக்கார். அவர் வந்தாதான் நான் கல்யாணம் செஞ்சுப்பேன்." சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் ஸவிதா.


சுந்தரம் ஜானகிக்கு மலர்விழி ஒரேமகள். மிக செல்லமாக வளர்ந்தவள். இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு  மலர்விழிக்கும் மாதவனுக்கும் மிக அருமையாக திருமணம் நடைபெற்றது. மாதவன் அரசாங்க வேலையில் இருந்தான். 


மாதவனின் பெற்றோர் கேட்ட சீர்களுடன் அதிகமாகவே செய்து சிறப்பாக திருமணம் நடத்தி வைத்தார் சுந்தரம். திருமணமான அடுத்த மாதமே கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள் மலர்விழி. 


மாமியார் தன்னை மிகவும் மோசமாக நடத்துவதாகவும் அத்தனை வேலைகளையும் தானே செய்ய வேண்டியிருப்பதால் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் சொல்லி அழுதாள். அவளை சமாதானம் செய்து கொண்டுவிட்டனர்.


மலர்விழி இரண்டு வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தபோது மாதவன் அம்மா பிள்ளைதான் பிறக்க வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிக் கொண்டிருந்தார். ஸவிதா பிறந்ததும் பெண் குழந்தை என்றதால் பார்க்கக் கூட வரவில்லை. மாதவனும் அவன் அம்மா சொல்லே வேதம் என்றிருந்தான். மலர்விழியிடம் ஆதரவாக பேசக்கூடவில்லை.


பெற்ற குழந்தையைக் கூட பார்க்க வராததால் மனமுடைந்த மலர்விழியின் உடல்நிலை கொஞ்சநாளில் மோசமாகி ஸவிதா பிறந்த எட்டு மாதத்தில் இறந்து விட்டாள். அவள் இறந்தபோது வந்தவர்கள் குழந்தையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. அடுத்த இரண்டு மாதத்தில் மாதவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிந்தது. 


ஸவிதா தாத்தா பாட்டியிடமே வளர்ந்தாள். அவளுக்கு மூன்று வயது இருக்கும்போது மாதவன்  குழந்தையைப் பார்க்க வந்தான். மலர்விழியை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக கண்கலங்கினான். 


அவன் அம்மாவின் கொடுமை தாங்காமல் இரண்டாம் மனைவி விவாகரத்து பெற்று விட்டதாகவும், தன் பெற்றோர் தம்பியிடம் சென்று விட்டதாகவும் சொன்னான். 

ஸவிதாவை மாதம் நான்கைந்து நாட்கள் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்புவதாகச் சொன்னபோது சுந்தரத்தினால்  தட்டமுடியவில்லை.

ஸவிதாவும் மாதவனிடம் மிகவும் ஒட்டிக் கொண்டுவிட்டாள். 

"நான் உன் அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டேன் ஸவி" என்று மாதவன் அழுதபோது, 

"நடந்ததை மறந்துவிடுங்கள் அப்பா. இனி நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்றாள் ஸவிதா.

ஸவிதா கல்லூரிப் படிப்பு முடித்து பெங்களூரில் வேலை கிடைத்துவிட, சுந்தரம் ஜானகியும் அவளோடு இருந்தனர்.

மாதவன் மலர்விழியைக் கஷ்டப்படுத்தியதை பெற்றவர்களால் மறக்க முடியாததால்தான் அவள் திருமணத்திற்கு மாதவனை அழைக்க வேண்டாம் என்று கூறினார்கள். 

ஸவிதாவின் ஆசைப்படி மாதவன் முன்னிலையில் திருமணம் ஜோராக நடந்தது.

கருத்துகள்