பயணம்(100வரி)

 



பெரிய பெரிய காடு தாண்டி மலை தாண்டி ஒரு இடம் அழைத்துப் போகிறேன். வரியா அம்மா? என்றான் சிங்கப்பூரிலிருந்த என் கடைக்குட்டி பிள்ளை! எந்த இடம் என்று கூட கேட்காமல் கிளம்பினேன். எந்த இடத்தையும் சுற்றிப் பார்ப்பதில் எனக்கு அலாதி ஆசை!

அது கம்போடியா நாட்டிலுள்ள ஆயிரம் லிங்க நதி.
உலகிலேயே மிகப் பெரிய இந்து  ஆலயமான அங்கோர்வாட் ஆலயம்  'காம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ளது. உலகின் 'எட்டாவது அதிசயம்' எனப் புகழப்படும் அங்கோர்வாட் ஆலயம் உயர்ந்து, நிமிர்ந்து, வானளாவ நின்று நம் இந்தியக் கலாசாரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. யுனெஸ்கோவினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக   திகழ்கிறது.

முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக காம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது காம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1400) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்போடியாவில் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை கொண்டிருந்த இவ்வூர் அங்கோர் என்ற நகரம் அந்நாளில் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகவும் 'க்மேர்' பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியது.

இங்கு அரசாண்ட மன்னர்கள் சைவம், வைணவம், பௌத்தம் என்று பல மதங்களை கடைப் பிடித்தனர். ஆலயங்களையும் ஒவ்வொரு விதமாக, வித்தியாசமாகக் கட்டியுள்ளனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் சிவபக்தனாக விளங்கினான்.

நாம்குலேன் என்ற மலையில் நதியில் பல சிவலிங்கங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றவன்.'பால் ஸ்பீன்' (Khbal Spean) மற்றும் 'நாம் குலேன்' (Khnam Kulen)  என்ற மலைகளில் ஓடும் நதி 'ஆயிரம் லிங்க நதி' எனப்படுகிறது. பாம்புப் புற்றுகளும், கிரீச்சிடும் பல பூச்சிகளும் நிறைந்த கரடு முரடான காட்டு மலைப் பாதையில் சுமார் 2 கி. மீட்டர் ஏறிச் சென்றால், தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் ஒரேவடிவில் ஏகப்பட்ட லிங்க வடிவங்கள். இது தவிர நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி என்று கடவுளர் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. 

இந்நதி கம்போடியாவின் மிகப் புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்நதி நீரே நாட்டின் பல தேவைகளுக்கு உதவுகிறது.இந்த தெய்வச் சிற்பங்களின் வழியே ஓடி வரும் இந்த நீரால் நாடும்,மக்களும் புனிதம் அடைவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இப்படிப்பட்ட தெய்வ உருவங்கள் அங்கு செதுக்கப் பட்டதாம்.

காடும் மேடும் கடந்து இம்மலை ஏறிச் செல்வது சற்று கடினம் என்றாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம். கம்போடியா செல்பவர்கள் கண்டிப்பாக கண்டு ரசிக்க வேண்டிய இடம் இது.ஒரு அழகிய அருவியும், புத்தர் ஆலயமும் உள்ளது. 
ராதாபாலு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1