நான் எழுதுகிறேன்..மாலை சூடிய மணநாள்..

 

'சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா'என்று கண்ணால் பேசிய அந்தநாள் ஞாபகம் மனதில் வந்ததே!


இருமனம் கலந்து ஒரு மனதாய் இணைந்த எங்கள் 46வது  திருமணநாள் இன்று! திருமணம் என்றதுமே முதலில்நினைவுக்கு வருவது பெண் பார்த்த நாள்தானே! அந்த அனுபவம்
சுவையான சுகமான அனுபவமாச்சே!

என் கணவர் என்னைப் பெண் பார்க்க வந்தபோது என் வயது பதினெட்டு. நாங்கள் இருந்தது முசிறியில். 'எனக்கு அதுக்குள்ள கல்யாணம் வேண்டாம்'என்றாலும் காது கொடுத்துக் கேட்பாரில்லை!

அன்று பொங்கல். நானும் என் தம்பிகளும் வாசலில் கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
வாசலோடு போய்க் கொண்டிருந்த ஒருவர்..70 வயதிருக்கும்... நாங்கள் இருந்த வீடு தன் உறவினருடையது என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார். என் அப்பாவிடம் எங்கள் குடும்ப விபரங்களைக் கேட்டார். தான் குடந்தையை அடுத்த உமையாள்புரம் என்றார்.

என் அம்மா அவரை நமஸ்காரம் செய்யச் சொல்ல (அந்நாட்களில் பெரியவர்கள் வந்தால் நமஸ்கரிக்க சொல்வது வழக்கம்) "பொண்ணுக்கு என்ன வயசு?வரன் பார்க்கறேளா"
என்று கேட்க, என் அப்பாவும்
"18 வயசு. பார்த்துண்டி
ருக்கேன். நல்ல வரன்
கிடைத்தால் முடித்து விடலாம்" என்றார்.


"எனக்கு தெரிந்த நல்ல பையன் இருக்கான்.  திருச்சி பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை." என்று கையிலிருந்த ஜாதகமும் கொடுத்து விட்டு என் ஜாதகமும் வாங்கிச் சென்றார்.

என் அம்மாவுக்கு வங்கிப் பணியாளர் என்றதும் ஒரே சந்தோஷம்.இந்த இடம் முடிய வேண்டும் என்று கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டார்!

என்அம்மா வழித் தாத்தாதான் எங்கள் குடும்பத்தில் ஜாதகப் பொருத்தம் பார்த்து சொல்பவர் "ஜாதகம் நல்ல பொருத்தம். ப்ரொசீட் பண்ணு" என்று பதில்
எழுதிவிட்டார்!

அவர்களும் ஜாதகம் பொருந்தியிருப்பதால் பெண் பார்க்க வருவதாக சொல்லி
விட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு வருடமாகவே ஜாதகம் பார்க்க ஆரம்பித்தாலும் இதுவரை பெண்பார்க்கும் வரை வந்ததில்லை.ஜாலியா வேளாவேளைக்கு சாப்பிட்டு தூங்கி அம்மா, அப்பா,
தம்பிகளோடு என்ஜாய் பண்றதை விட்டு வேறு வீட்டுக்கு போய்..அவர்கள் எப்படியோ என்னவோ... சமைத்து வீட்டு வேலைகளை செய்து கொண்டு...
நினைக்கவே பயமாக, பதட்டமாக  இருந்தது.

பையனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட தீர்மானித்தேன்! என் அம்மா, அப்பா குடும்பத்தில் இதுதான் முதல் பெண்பார்க்கும் நிகழ்ச்சி என்பதால் என் சித்தப்பாவும், மாமாவும் முதல்நாளே வந்துவிட்டார்கள்.

என் அம்மா பஜ்ஜி ஸொஜ்ஜி வேண்டாமென்று மைசூர்
பாகும்..தயிர்வடையும் செய்திருந்தார்.

மதியம் மாப்பிள்ளையுடன் அவர் அம்மா, அக்கா, தாத்தா திருச்சியிலிருந்து வருவதாக ஏற்பாடு. என் மாமனார் என் கணவர் பிறந்த சில மாதங்களிலேயே மறைந்து விட்டதால் என் மாமியாரின் அப்பாதான் இவரை வளர்த்தார்.

நான் பட்டுப் புடவை கட்ட விரும்பாததால் நைலக்ஸ் புடவைதான் கட்டியிருந்தேன்.எந்த ஸ்பெஷல் மேக்கப்பும் கிடையாது.(அப்படியாவது வேண்டாமென்று சொல்லிவிடுவார்களா என்ற எண்ணம்!!)


என் மாமா,
சித்தப்பா,தம்பிகள் அருகிலிருந்த பஸ்ஸ்டாப்பிற்கு சென்று என் கணவர் குடும்பத்தாரை அழைத்து வந்தனர். வந்ததும் அவரவர் ஊர் பற்றிய விசாரிப்புகள்..குடும்ப விசாரணைகள்!

அடுத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நமஸ்காரம்! அதன்பின்  டிஃபன்,காபி சாப்பிட்டபின் பெண் பார்க்கும் நிகழ்ச்சி..அட..அன்றைய கதா நாயகியாகிய என்னைப் பார்க்க அவர்களுக்கு என்னவொரு ஆவல்!

"எங்காத்து பிள்ளைக்கு பாட்டு ரொம்பப் பிடிக்கும்.பாடத் தெரிஞ்ச பெண்தான் வேண்டும் என்றதால்
தான் உங்கள் பெண்ணை பார்க்க வந்தோம்" என்றார் என் மாமியார்!

அந்நாளில் பாடச் சொல்வது எதற்கென்றால் குரல் எப்படி இருக்கு, வாய் திக்காமல் பேசுகிறாளா என்பதெல்லாம் தெரியவாம்!

முதலில்  'வாதாபி  கணபதிம்' பாடினேன்.இன்னொரு பாட்டு பாடச்சொல்லி தாத்தா கேட்க..'மாமவ பட்டாபி'.

முதலிலேயே என் மாமா 'பையனை நன்னா பாத்துக்கோ' என்று சொல்ல..நானும் நன்றாக அடிக்கடி பார்த்தேன்! என்னைவிட கலராக,
தலையில் நிறைய முடியுடன்
(இப்போ தேடிக் கொண்டி
ருக்கிறேன்!) நல்லவராக இருப்பார் எனத் தோன்றியது!! அவரோ பாட்டை ரசிக்கும் சாக்கில் பாவையையும் ரசித்தார்! அப்பாடா..நம்ம வேலை முடிந்தது என்று
உள்ளே சென்றுவிட்டேன்!

தாத்தா தவிர மூவர் கூட்டணி கொல்லைப்புறம் சென்று குசுகுசுவென்று பேசிவிட்டு வந்தார்கள்! பெண் பிடித்து விட்டது என்று சொல்ல கௌரவக் குறைவு! ஆனால் லௌகீகம் பேச ஆரம்பித்து விட்டார்கள்!

என் மாமியார்,நாத்தனார் என் அம்மாவிடம் பேச..அப்படியே என் நீண்ட தலைமுடி சவுரியா என்று இழுத்துப் பார்த்து தெரிந்து கொள்ள..(இன்று அந்த நீளம் அடர்த்தி எல்லாம் போயே போச்..!)தாத்தா வீட்டை சுற்றிப் பார்க்க..பாவப்பட்ட அன்றைய ஹீரோ பேச ஆளின்றி உட்கார்ந்திருந்தார்!

என் மாமா பக்கத்து அறையில் மூடியிருந்த சன்னல் கதவை லேசாகத் திறந்து என்னை மாப்பிள்ளை
யைப் பார்த்துக் கொள் என்றார். நான் பார்க்கும்போது..
ஜன்னல் ஓரமாய் மின்னல் போல வந்தாய் என்று அவரும் பார்க்க..அண்ணலும் நோக்கினார்..இவளும் நோக்
கினேன்! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து கனவுகள் வசமாயிற்று!


பெரியவர்கள் எல்லா விஷயமும் பேசி முடித்து..அப்பவே தெரிந்து விட்டது..இவர்களுக்கு பெண் ஓ.கே. என்று! ஆனாலும், "என் தம்பி கொஞ்சம் யோசிச்சு
சொல்றேங்கறான்"என என் நாத்தனார் பந்தா விட..(இன்னமும் அந்த பந்தாகுறையவில்லை!)

தாத்தா என் அம்மாவிடம்
"தயிர்வடை நன்னாருக்கு.
இன்னொண்ணு கொடுங்கோ"
என்று வாங்கி சாப்பிட...என் மாமியார், நாத்தனார் முகம் கடுகடு! (வீட்டுக்கு வந்து தாத்தா அவர்களிடம் டோஸ் வாங்கியதை பிறகு சொன்னார் என் கணவர்!)

"பொண்ணைக் கூப்பிடுங்கோ.என் தம்பி நன்னா பாத்துக்கட்டும்" என்று என் நாத்தனார் சொல்ல..மறுபடி நமஸ்காரம். என் மாமா "நீங்க என் மருமாளோட பேசறேளா?"
அவர் தன் அம்மா, அக்காவை ஆவலுடன் நோக்க அவர்களோ "அதெல்லாம் எதுக்கு? அப்றம்தான் ஆயுள் பூரா பேசப்போறாளே" (நான் அவரை பேசி மயக்கிடு
வேன்னு பயமோ!) என்று சாமர்த்தியமாக கட் சொல்ல..
நம்மாளு முகம்...
பாவம்..காற்று போன பலூனாகி விட்டது!!

பஸ் ஏற்றி விட அவர்களோடு போன மாமா "என் மருமாளைப் பிடிச்சிருக்கா?" என்று ரகசியமாக இவரைக் கேட்க..ஆம் என்று சொன்னதை வீட்டுக்கு வந்து சொன்ன மாமாவுக்கு  ஒரே சந்தோஷம்!

"ஏன் மாமா..அவரைக் கேட்டேளே..என்னைக் கேக்கலியே" என்றேன் கோபமாக!

"நாங்க உனக்கு நல்லதுதான் பண்ணுவோம். பேங்க்ல வேலை. (அப்பல்லாம் பேங்க் வேலைக்கு மவுசு ஜாஸ்தியாச்சே!) ஆஃபீஸர் ப்ரமோஷன் ஆறு மாசத்துல கிடைச்சுடுமாம்" என்று என் அம்மாவும் அப்பாவும் கோரஸ் பாட...

"ஜெய்சங்கர், சிவகுமார்
மாதிரிலாம் பையன் இருக்கணும்னு நினைக்காதே. அவரும் நல்ல உயரம்.கிருதா பெல்பாட்டம்னு ஃபேஷனா இருக்கார். ரொம்ப மரியாதையா பேசறார். வேற என்ன வேணும் உனக்கு?அவருக்கு உன்னை பிடிச்சிருக்கு" என்றார் என் மாமா!

"எனக்கு கல்யாணமே வேண்டாங்கறேன்" என்றேன்.

"பையன் நன்னா இருக்கான். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்" என்று என் சித்தப்பா பின்பாட்டு பாட...

"என் தம்பிகளோ அத்திம்பேர் சூப்பர்" என்று ஸேம்ஸைட் கோல் போட...

ஹ்ம்ம். இந்த வலை இல்லாட்டால்  இன்னொரு
வலையில் மாட்டிக் கொள்ளத்தானே வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் சம்மதித்தேன்!

திருமணம் நிச்சயமாகி பத்திரிகை அடித்ததும் முதல் பத்திரிகையை எனக்கு அனுப்பியிருந்தார் என்னவர்!

பெண் பார்த்தபின் அவரை மாப்பிள்ளை அழைப்பு அன்றுதான் பார்த்தேன். காரில் பெண்ணை ஏற்றிக் கொள்ளும்படி அவர் நண்பர்கள் சொல்ல, 82 வயதான எங்கள் இருவரின் தாத்தாக்களும்
...முறைப்படி காலை ஊஞ்சலுக்கு பின்பே இருவரும் இணைந்து உட்காரலாம்...என்றதால் இவருக்கு கொஞ்சம் வருத்தம்! பெரியோர் ஆசியுடன் திருமணம் முடிந்து திருச்சியில் வாழ்க்கை ஆரம்பம்.
இப்பொழுது கும்பகோணத்தில் வாழ்க்கை!

கண்கள் நோக கண்களால் ஒருவரை ஒருவர் நோக்குவதையே நோக்கமாகக் கொண்டு கண்களால் பேசிக் கொள்வது எங்களுக்கு கை(கண்)வந்த கலை!!


பெண் பார்த்த அன்று அண்ணல் நோக்கிய அந்த சில நிமிடங்கள் கண்கள் கலந்தபோது காதல் திருக்கோலம் கொண்டு மன்மத பாணங்களால்  ஆசையில் மனம் தடுமாற 'தொப்'பென்று சம்சார சாகரத்தில் விழுந்தவளை இன்றுவரை பாசத்துடன் கைதூக்கி, ஆசையுடன் அரவணைத்து,  நேசத்துடன் காதலித்து 'உன் கண்ணால் என்னை அன்றே கட்டிவிட்டாயடி...உன் சின்னப் புன்னகையால் என்னை விழ வைத்தாயடி...உன் அன்புக்கு நான் அடிமை'என்று மோகித்து இன்றுவரை  இறையருளுடன் இனிய நாதமான, ரசனையான வாழ்க்கையே  எங்கள் சுகமான தாம்பத்யம்!💑

கருத்துகள்