சுய சம்பாத்யம் சுகமே!



எனக்கு வேலைக்கு போகும் ஆசை உண்டு. பதினொன்றாம் வகுப்பில் 78% மதிப்பெண் வாங்கி மேலே பட்டப் படிப்பு படித்து பெயருக்கு பின்னால் டிகிரி போட்டுக் கொள்ள ஆசை!


என் அப்பா தனியார் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தார். அந்நாளில் வங்கி ஊழியர்களின் குழந்தைகளில் ஒருவருக்கு அதே வங்கியில் வேலை தரும் முறை இருந்தது. அதனால் நான் அப்பா வங்கியில் பணி புரிந்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை!

என் சம்பாத்தியத்தில் பெற்றோர்,  உடன் பிறந்தோருக்கு ஏதாவது வாங்கித் தர ஆசை!

ஹ்ம்ம்..எத்தனை ஆசை இருந்து என்ன பயன்? என் பெற்றோர் மேலே படிக்க அனுமதிக்கவில்லை. இந்தப் படிப்பு போதும் என்று சொல்லி விட்டதுடன் இருபது வயதுக்குள் திருமணம் செய்யவும் முடிவெடுத்து விட்டார்கள். அதனால் நானே சம்பாதிக்கும் ஆசை அப்பவே புஸ்வாணமாயிற்று!

எனக்கு பார்த்த முதல் பையனே எனக்கு கணவரானார். புகுந்த வீட்டினரும் வேலைக்கு போகாத பெண்ணே வேண்டுமென்று பார்த்ததால் நான் அவர்களுக்கு Okயாகி விட்டேன்!

அப்பொழுது நிறைய வார மாதப் பத்திரிகைகள் வரும். எனக்கு படிப்பதில் இருந்த ஆர்வத்தால் எல்லா புத்தகங்களும் வாங்கிப் படிப்பேன். என் இருபத்து மூன்றாம் வயதில் மங்கையர் மலரில் பிரசுரமான ஒரு கட்டுரைக்கு இருபது ரூபாய் பரிசு கிடைத்தது. என் முதல் சம்பளம் அதுதான்! எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. எல்லோரிடமும் பெருமை அடித்துக் கொண்டேன்.

என்னவரிடம் சொன்னபோது..நீ சம்பாதிப்பது பெரிதல்ல. மிக நன்றாக எழுதியிருக்கிறாய். தொடர்ந்து நிறைய எழுது..என்றார். ஆஹா..இந்த வார்த்தைகள் எனக்கு பூஸ்ட்! அந்தக் கட்டுரையைப் படித்த என் உறவினர்கள் கடிதம் எழுதி பாராட்டினார்கள். என்னிடமிருந்த எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தேன்.

அதன்பின் நான் எழுதிய பல கட்டுரைகள் பிரசுரமாகி பரிசுப்பணம் தவிர குக்கர், புடவைகள், பாத்திரங்கள் என்று நிறைய பரிசு வாங்கினேன். மங்கையர் மலரில் கொலுப் போட்டிக்கு கிடைத்த ரூ.5000 மதிப்புள்ள புடவைப் பரிசு மறக்க முடியாதது.

பெரும்பாலான கட்டுரைகள், கதைகள், சமையல் குறிப்புகள்,ஆலய தரிசனக் கட்டுரைகள், வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் பிரசுரமாக எனக்கு கிடைத்த பணத்தை சேர்த்து வைத்து என் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித் தருவேன்.
என் அம்மாவுக்கு அன்னையர் தினத்தன்று ஒரு புடவை வாங்கிக் கொடுத்தேன். அம்மா கண்கலங்கி விட்டார். அப்பாவுக்கு வேஷ்டி சட்டை வாங்கிக் கொடுத்தபோது சந்தோஷப் பட்டார்.

என் கணவரிடம் ஒருமுறை நான் சம்பாதித்த பணம் இவ்வளவு என்று சொன்னவுடன்...நான் சம்பாதிக்கும் பணம் அத்தனையும் உன்னுடையதுதானே?..
என்றார்!

...இருந்தாலும் நான் எழுதி சம்பாதித்தால் எனக்கு பெருமைதானே...என்பேன். என் கணவரும், என் குழந்தைகளும் அவர்கள் நண்பர்களிடம் நான் ஒரு எழுத்தாளர் என்று இன்றும் பெருமையாக சொல்வார்கள்.

குழந்தைகளுக்கு பரிசுகள் தந்தாலும் என் பணத்தில் என் கணவருக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கும் ஆசையை என் மகளிடம் சொல்ல நானும் அவளுமாக நகைகடைக்கு சென்று ஒரு மோதிரம் வாங்கி அவரது 55ம் வயது பிறந்தநாளுக்கு பரிசாகக் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியில் என்னைப் பாராட்டினார். 'உன் பணத்தில் எனக்கு மோதிரம் போட்டு 'மோதிரக் கையால் பாராட்டு வாங்கி விட்டாய்' என்று கூறினார்!

இப்பவும் நான் புத்தகங்களில் எழுதிக் கொண்டிருப்பதோடு முகநூலிலும் சில தளங்களில் என் அனுபவங்களை எழுதுவதுண்டு. மாம்ஸ்ப்ரஸ்ஸோவில் சேருவதற்கு காரணம் என் தோழி ராதா நரசிம்மன். நானும் அவரும் இருபது வருடங்களாக கடிதம் மூலம் நண்பர்களாகி, இன்றுவரை நேரில் பார்த்துக் கொள்ளாத தோழிகள்! அவர் மாம்ப்ரஸ்ஸோ பற்றி அவர் முகநூல் டைம்லைனில் பகிர்வதைப் பார்த்துதான் நான் இதில் இணைந்தேன்.

மிக சுவாரசியமான தலைப்புகள்..தினம் ஒரு சிந்தனை..வார இறுதி எழுத்து..வீடியோக்கள் என்று மிக அருமையான தளம். எழுதத்தான் நேரம் போதவில்லை! இன்று என்ன தலைப்பில் எழுத வேண்டும் என்று பார்ப்பதிலேயே ஆர்வம் அதிகமாகிறது.

எனக்கு இதில் 1000ரூ. பரிசு கிடைத்ததை சொன்னபோது என் வீட்டார் மிக மகிழ்ச்சி அடைந்தார்கள். என் குட்டிப் பேத்தி இப்பவே..உனக்கு கிடைச்ச ப்ரைஸ்ல எனக்கு பார்பி பொம்மை வாங்கித் தரயா..என்று கேட்க ஆரம்பித்து விட்டாள்! மாம்ஸ்ப்ரஸ்ஸோவிற்கு நன்றி! நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)