கோடை விடுமுறை நினைவுகள்!கோடை விடுமுறை நினைவுகள்!


படிக்கும்போது  விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது?

ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..!

என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்து விடுவார்கள்.என் பாட்டி சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஏழு குழந்தைகளையும் என் தாத்தா  தானே வளர்த்தார். பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்!

நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான்  செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா!

இரவு ரயிலில்தான் பிரயாணம்..
ரயிலில் ஏறியதும் என் அம்மா
அப்பா கீழ் இரண்டு சீட்களில் என்  சிறிய தம்பிகளுடன்  படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்!

சீட்களுக்கு கீழே எங்கள் டிரங்குப் பெட்டிகள்! அவற்றுக்கிடையே நடமாடும் கரப்பான்பூச்சிகளைப் பார்த்தால் பயத்தில் தூக்கமே வராது. இன்று நினைத்துப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது!

ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு மாட்டுவண்டி யில்தான் செல்வோம். அதில் பின்னால் உட்கார எனக்கு எப்பவும் இடம் கிடைத்ததில்லை! முன்னால் என் அம்மாவும், நானும்..பின்னால் என் அப்பா தம்பிகள்.

காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஜாலியாக உட்கார்ந்து வரும் தம்பிகளைப் பார்க்க எனக்கு கோபமும் அழுகையும் வரும்!

வாசலும் கொல்லையும்...தாழ்வாரமும் திண்ணையும்...ரேழியும் முற்றமுமாக.
என் தாத்தா வீடு மிகப் பெரியது. கொல்லையில் மாட்டுக் கொட்ட
கையில் எப்பவும் 2,3 மாடுகள் உண்டு.

கூடத்தின் நடுவில் பெரிய அகல ஊஞ்சல். அந்த ஊஞ்சலில் ஆடுவதற்கே எங்களுக்குள் சண்டை நடக்கும். சில சமயம் அடிதடி கூட நடக்கும்!

எங்கள் தாத்தா வீடு குடந்தை பக்தபுரி தெருவில். தாத்தா வக்கீல். அவருக்கு தனி அறை. அங்கு நாங்கள் செல்ல அனுமதி கிடையாது. கதவருகில் நின்று எட்டிப் பார்ப்போம்.

அவர் கட்சிக் காரர்களிடம் கண்டிப்பாக பேசுவது பிரமிப்பு என்றால்...அவன் கூண்டில் நின்று எதிர்க்கட்சி வக்கீல் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லிக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கும்!

வெள்ளைவெளேர் பஞ்சகச்ச வேஷ்டியும்..கருப்பு கோட்டும்..
தலையில் டர்பனும்..கையில் கேஸ்கட்டுமாக தாத்தா செல்வதைப் பார்க்க பெருமையாக இருக்கும். அந்தத் தெருவில் இருந்த நிறைய வக்கீல்கள் என் தாத்தாவிடம்தான் டர்பன் கட்டிக் கொள்ள வருவார்கள்!

தாத்தா மிகவும் கண்டிப்பு. அவர் பெண், பிள்ளைகளே அவரிடம் மிக பயந்து மரியாதையாகப் பேசுவார்கள். தாயில்லாத குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவே தங்களிடம் மிக கண்டிப்பாக நடந்து கொள்வதாக அம்மா சொல்வார். தாத்தா கோர்ட்டுக்கு சென்றபின்பே எல்லாரும் குரல் உயர்த்தி ஜாலியாகப் பேசுவார்கள்! மே மாதம் கோர்ட் விடுமுறை விட்டதும் வீடே அமைதியாகி விடும்..!

ஒருநாள் நாங்களும் கோர்ட் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தாத்தாவிடம் பயந்து கொண்டே கேட்க...அங்கு வந்து சத்தம் எல்லாம் போடக்கூடாது. பேசாமல் அமைதியாக இருக்கணும்...என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

கம்பீரமாக நடக்கும் அவர் 'எங்கள் தாத்தா' என்று கர்வமாக  உடன் செல்வோம்!

அங்கு அனைவரும் அவருக்கு
கொடுக்கும் மரியாதையை விழி உயர்த்தி பார்த்து மகிழ்வோம்!

அங்கு தாத்தா வாதாடுவதை வாய் பிளந்து பார்த்து ரசிப்போம்!
ஆனால் எங்கள் குடும்பத்தில் எவருமே வக்கீலாகவில்லை.

அக்ஷய திரிதியை 12 கருடனுக்கு என் அப்பா அழைத்துச் செல்வார். சுவாமி தரிசனம் செய்கிறோமோ இல்லையோ...கடைகடையாக நீர்மோர் பானகம் வாங்கிக் குடிப்போம்!

இடையில் ஒருநாள் சுவாமிமலை ட்ரிப்..எங்கள் குலதெய்வம் சுவாமிநாதன் தரிசனம்..அங்கிருந்த எங்கள் சின்னதாத்தா வீட்டுக்கு சென்று தோப்பு துரவெல்லாம் சுற்றி வருவோம்!

காலை நேரங்களில் அந்தக்கால பெரிய மர்ஃபி ரேடியோவில் நியூஸ் கேட்க அத்தனை பெரியவர்களும் கூடத்தில் ஆஜராகி விடுவார்கள். என் தாத்தாவின் தங்கை பெண் சரோஜ் நாராயணசாமி. அந்தக் காலத்தில் நியூஸ் படிப்பதில் அவர் மிகவும் பிரபலம்.அவர் நியூஸ் படிப்பதும் மிக அழகாக இருக்கும்.

கொல்லை கிணற்றடியில்தான் குளியல்! தண்ணீர் இழுத்து குளிக்கும் சுகம் இருக்கே...இன்று தேட வேண்டியிருக்கு🙁

மதியம் எல்லோருமாக பல்லாங்குழி..
தாயம்..கேரம்போர்ட்..ட்ரேட் என்று விளையாடி மகிழ்வோம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சித்தியுடன் காவேரி பாலம் தாண்டிச் சென்று கல்லூரியை (பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் கல்லூரி!) சுற்றிப் பார்த்து விட்டு காவேரிக்கு சென்று மணலில் விளையாட்டு...!

மாலை சுவாமியிடம் தீபம் ஏற்றியதும் எல்லா பெரியவர்களுக்கும் வரிசையாக நமஸ்காரம்...அந்தக்கால எக்ஸர்சைஸ்!

எங்கள் தம்பிகள் வெளியில் சென்று விளையாடு
வார்கள்.எங்களுக்கு
வெளியே போய் விளையாட தடா! கொல்லைப்புறம் பாண்டி
விளையாட மட்டுமே அனுமதி! பாட்டு..தையல்..கோலம்..
நடனம்..ஸ்லோகம்
என்று எங்கள் அம்மாக்கள் சொல்லித் தருவார்கள்.

இரவு எல்லாருக்குமாக சாதம் பிசைந்து அம்மாவோ, பெரிமாவோ கையில் போட்டுக் கொண்டே அவர்களின் அந்தநாள் கதையைச் சொல்ல...சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டே வயிறு நிறைந்தது கூடத் தெரியாமல் நாங்கள் சாப்பிடுவோம்!

கூடத்தில் எல்லோரும் வரிசையாகப் படுக்க வேண்டும். எதிரில் திறந்த முற்றம். வாசல் பக்கம் இருக்கும் காமிரா உள்ளில் பெண்கள்...வாசல் திண்ணையில் ஆண்கள்...
ஊஞ்சலில் எங்கள் தாத்தா படுத்துக் கொள்வார்.

என் மாமா,மாமி அங்கு திருடன் வந்த கதையெல்லாம் சொல்ல..எங்களுக்கு இரவு தூக்கமே வராது!

கொல்லையில் மாடு விடாமல் கத்தினால்...பாம்பு வந்திருக்கும்...
என்று என்மாமா ஒரு கழியும், அரிக்கேன் விளக்கும் எடுத்துச் சென்று பார்த்து விட்டு வருவார்.

சில நேரம் பாம்பு சாக்கடை வழியே உள்ளே வந்து அடித்த கதை
யெல்லாம் சொல்ல..பயத்தின் உச்சிக்கே சென்று விடுவோம் நாங்கள்!

அப்பொழுதெல்லாம் வெளிச்சமான லைட்டே பார்த்ததில்லை! ட்யூப் லைட் கிடையாது. எல்லா அறைகளும் அரையிருட்டாக இருக்கும். கூடம் தாண்டி சமையலறை செல்லும் வழியில் இருக்கும் ஸ்டோர் ரூமில் எப்பவும் கரப்பான்பூச்சி..பாச்சை..
பல்லி நடமாட்டம்தான்! அந்த ரூமை நான் ஓடித்தான் கடந்து செல்வேன்!

சமயத்தில் பால் தயிரில் கூட கரப்பு நீச்சலடிக்கும்! மாமி அதை அநாயாசமாக தூக்கிப் போட்டு விட்டு உபயோகப் படுத்துவார்! அதைப் பார்க்கும்போது அருவெறுப்பாக இருக்கும்....சந்தோஷமாக எல்லாரும் அரட்டையுடன் உட்கார்ந்து சாப்பிடும்போது அந்த கரப்பு விஷயமே மறந்து போகும்!

அன்று பெரிய மால்களோ..தீம் பார்க்குகளோ...ஹோட்டல்களோ கிடையாது. வீட்டு சாப்பாடும்..
கோயில்களுக்கு செல்வதும்தான் பொழுதுபோக்கு! அதுவே மனதுக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுத்தது.

சென்னையிலிருந்து செல்லும் எங்களுக்கெல்லாம் அங்கு கொல்லைக் கோடிக்கு செல்லும் அந்தநாளைய கழிவறை மிகப் பெரிய பிரச்னை!

இரவில் ஃபேன் கிடையாது..விசிறி
தான். ஆனாலும் வெய்யில் காலத்தில் இன்றுபோல் வேர்த்து வழிந்து அவதிப் பட்டதில்லை!

எந்த இடத்துக்கும் நடந்துதான் சென்றோம்.கால் வலித்ததில்லை.
உச்சி வெயிலும் சுட்டதில்லை!

நம் உறவுகளுடன் இருக்கும்போது கிடைக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் வெயிலும் உறவானது!

நாங்கள் ஊருக்கு கிளம்பும்போது என் தாத்தா தன் பெண்களைக் கட்டி அணைத்துக் கண் கலங்கும்போது அவரின் பாசம் வெளிப்படும்.

அன்று சென்னைக்கும் குடந்தைக்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள்...பல அசௌகரியங்கள்..ஆனாலும் மனம் அடுத்த கோடை விடுமுறைக்கு குடந்தை செல்ல  நாட்களை எண்ண ஆரம்பிக்கும்!

அந்த நாட்களின் மறக்காத நினைவுகளில் மனம் இன்றும் லயிக்கிறதே!

அந்த நாட்களின் சந்தோஷத்தை எண்ணி இன்றும் ஏங்குகிறதே!

இன்றும் நாங்கள் ஒன்று சேரும்போது அந்தநாள் ஞாபகங்களைப் பேசி மகிழ்வோம்!

நாங்கள் விளையாடிக் களித்த என் தாத்தாவின் வீடு இன்னும் அப்படியே இருக்கிறதா...
மாற்றிக் கட்டியிருப்பார்களா என்று பார்க்க இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். வெளியில் க்ரில் கேட்டும், க்ரில் சன்னல்களும் தவிர அப்படியே சிறிதும் மாறாமல்  இருப்பதைக் கண்டு ஆச்சரியம்!


அதற்கு எதிரில் இருக்கும் வீட்டில்தான் நான் பிறந்தேன். தற்சமயம் பஹோலா என்ற பெயரில் இருக்கும் அன்றைய ஹோமியோபதி ஆஸ்பத்திரி.

அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பழைய நினைவுகள் மனதில் வந்தன. அன்று எங்களுடன் இருந்து இன்று மறைந்து விட்டவர்களை எண்ணிக் கண்கள் கலங்கி விட்டேன்.

கூட வந்த என் கணவர்...
வாழ்க்கைன்னா அப்படித்தான். இன்னிக்கு இருப்பது நாளைக்கு இல்லாமல் போகும்...என்று தத்துவம் பேசினார்.

...இந்த வீடு இருக்கே.அது மாறியிருந்தால் எனக்கு இவ்வளவு emotions இருக்காதோ...என்றேன். வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

சென்ற மாதம் அங்கு சென்றபோது அந்த வீடு இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப் போவதாக அறிந்தபோது மனம் சற்று கஷ்டமாக இருந்தது.

மறக்காத நினைவுகளாய் மனதுக்கடியில் கிடைந்த நினைவுகளைத் தட்டி எழுப்பி வெயிலோடும் சுற்றங்களோடும் உறவாடிய அந்த நாட்களை திரும்பிப் பார்க்க வைத்த மாம்ஸ்பிரஸ்ஸோவுக்கு  நன்றிகள் பல🙏

வெயிலோடு உறவாடி
உறவோடு விளையாடி
சிறியோரும் பெரியோரும்
பரிவோடு உரையாடி
தெரியாத கதைகளும்
அறியாத கலைகளும்
சிரிப்போடும் களிப்போடும்
சிறப்பாக சிலிர்ப்பாக
கருத்தாகக் கேட்டு
பெருமையுடன் குதூகலித்து
பிரியா விடை பெற்று
திரும்பச் செல்லும்
அருமையான நாட்களை
இன்று நினைத்தாலும்
இருவிழிகள் கலங்குகிறதே!கருத்துகள்