வார இறுதி எழுத்துத் திருவிழா அகல்யாவின் ஆசை

 வார இறுதி எழுத்துத் திருவிழா

அகல்யாவின் ஆசை

"வீட்டை கவனிச்சுகிட்டு பிள்ளைகளை பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு எதுக்குநீ சம்பாதிக்கணும்னு நினைக்கிறே?"

ராஜேஷ் கேட்டபோது அகல்யா ஆச்சரியமாகப் பார்த்தாள்.

"ஏங்க அப்படி கேக்கறீங்க? நான் படிச்ச படிப்பு வீணாகாது. கிடைக்கும் சம்பளம் நம்ப தேவைகளுக்கு உதவுமே!"

"வேண்டாம் அகல். எனக்கு இஷ்டமில்ல. குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகற்து. இப்போ நீ குழந்தையோட அவசியமா இருக்க வேண்டிய நேரம். வேணுமானா கொஞ்சநாள் கழிச்சு போகலாம்."

"அத்தைதான் சொன்னாங்க, நீ படிச்ச படிப்பு வீணாக வேண்டாம். நான் குழந்தையை உன்னைவிட நல்லா பார்த்துப்பேன். ஏதோ ஒரு பத்தாயிரம் சம்பளம் வந்தாலும் உன் செலவுக்காவது ஆகுமேனு".

"அப்போ இது எங்கம்மா ஐடியாவா? அதான பார்த்தேன். என் தங்கச்சியும் கூட இருந்து உனக்கு ஏத்தி விட்டிருப்பாளே?"

"ஆமாங்க. அதில் எதுவும் தப்பில்லையே?என் நல்லதுக்கு தான் சொல்றாங்க?"

"ஆமாம்..ஆமாம். ரொம்ப நல்லது. என் அண்ணன் அண்ணி ஏன் தனியா இருக்காங்கனு யோசிச்சியா?"

"உங்க அண்ணி எந்த வேலையும் செய்யாம குழந்தையை வச்சுகிட்டே இருப்பாங்களாம். அத்தைதான் எல்லா வேலையும் செய்வாங்களாம். அவங்களை ரொம்ப திமிர் பிடிச்சவனு சொன்னாங்க".

"அவங்க ரொம்ப நல்லவங்க. இந்த வீட்டு வேலைகளை அத்தனையும் அவங்கதான் செய்வாங்க. அம்மா கை அசைக்கமாட்டாங்க.
அவங்களுக்கு சிஸேரியன் டெலிவரி. மூன்று மாதத்திலயே இங்க கொண்டு வந்து விட சொல்லிட்டாங்க. குழந்தை பிறந்ததும் முன்பு மாதிரி அதிக வேலைகளை செய்ய முடியாம கஷ்டப்பட்டாங்க. எனக்கு ரொம்ப பாவமா இருக்கும். நான் உதவி பண்ணினா அம்மாவுக்கு பிடிக்காது."

" உங்க அம்மாவா இப்படி? நம்பவே முடியல."

"அண்ணி வேலை செய்வாங்களா? குழந்தையைப் பார்ப்பாங்களா? குழந்தை தூங்கும் நேரம் வேலைகளை முடிப்பாங்க. எங்கம்மா தனியா இருந்தப்போ வேலைக்கு ஆள் இருந்தா. அண்ணன் கல்யாணத்துக்கு அப்பறமா நிறுத்திட்டாங்க."

"உங்க அண்ணன் எதுவும் சொல்ல மாட்டாரா?"

"அவன் சொன்னா 'உங்களையெல்லாம் எப்பிடி வளர்த்தேன். நான் எங்காவது ஹோம்க்கு போறேன்'னு அழுது பயமுறுத்துவாங்க."

"அப்படிப் பட்டவங்களா அவங்க? ஆச்சரியமா இருக்கு!"

"எங்கப்பா இல்லாததால நாங்க மனைவிகள் வந்தபிறகு அவங்களை மதிக்க மாட்டோம்னு தானாகவே நினைச்சுகிட்டுதான் வீட்டு நிர்வாகத்தை தன் கையிலயே வச்சுக்கணும்னு இப்படி செய்யறாங்க."

"உங்க அண்ணன் எப்படி தனியா போனார்?"

"அண்ணனும் பொறுத்துப் பார்த்தார். அண்ணி பட்ட பாடுல குழந்தைக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாம போச்சு. அந்த நேரம் அண்ணனுக்கு  வேற ஊருக்கு மாற்றல் ஆச்சு. அம்மா அண்ணனை மட்டும் அங்க போகச் சொல்ல, நான்தான் அண்ணியின் கஷ்டங்களை அண்ணன்ட்ட சொல்லி அவங்களையும் கூட்டிப் போகச் சொன்னேன். இப்ப அவங்க நிம்மதியா இருக்காங்க".

"நான் வேலைக்கு போனா உங்கம்மா குழந்தையை நல்லா பாத்துக்க மாட்டாங்களா?"

"நீ நினைக்கிற மாதிரி நல்ல மனசு அவங்களுக்கு கிடையாது. வயசான காலத்துல அவங்களை தனியா விட்டுட்டு போறதும் நமக்கு நல்லா இருக்காது. இப்ப உனக்கு புரிஞ்சுதா?"

"ஓ.கே.சரிங்க இனி வேலைக்கு போக ஆசைப்பட மாட்டேன். அத்தையை நான் சமாளிச்சுக்கறேன்."

"உனக்கு சம்பாதிக்க ஆசை இருந்தா வீட்டிலருந்தே சம்பாதிக்க ஒரு வழி இருக்கு. என் ஃப்ரெண்ட் சங்கரின் மனைவி Mompressoனு ஒரு தளத்தில உறுப்பினரா இருக்காங்களாம். அதில் நிறைய போட்டிகள் உண்டாம். அவங்க அதில் எழுதி, பாடி, ஆடி  வெற்றி பெற்றால் பரிசுகள் நிறைய உண்டாம். அவங்க பொழுதும் உபயோகமா போகுதுனு சொன்னாங்க".

"ஓ..அப்போ அந்த அக்காவைக் கேட்டு நான் அதுல சேர்ந்துக்கறேன்".

"அதைத்தான் சொன்னேன் குழந்தையோட என்னையும் கவனிச்சிகிட்டு ராணியாட்டம் இருன்னு" என்று கண்களில் காதலுடன் பேசிய ராஜேஷைப் பார்த்து,"அதல்லாம் இப்போ இல்ல. குழந்தை எழுந்துட்டான்" என்றபடியே நகர்ந்தாள் அகல்யா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1