புடவைகள் பலநிறம்!
புடவைகளின் நிறங்களில் மயங்காத மகளிர் உண்டோ! என் அம்மாவிற்கு மஸ்டர்ட், கருப்பு இரண்டு வண்ணங்களும் மிகப் பிடித்தமானவை. நான் சிறு குழந்தையாய் இருந்தபோது ஒரு தீபாவளிக்கு என் அம்மா அதிகவிலை கொடுத்து..50ரூ...அதுவே அந்த காலத்திற்கு அதிகமாச்சே.. அந்த மஸ்டர்ட் கலர் பட்டுப் புடவை ஆசைப் பட்டு ஆயிரம் முறை யோசித்து வாங்கினாராம்.
நான் சின்னக் குழந்தையாய் இருந்தபோது என் அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு தூங்குவேனாம். ஒருமுறை அப்படித் தூங்கியபோது அந்தப் புடவை தலைப்பை வாயில் வைத்துக் கடித்து விட்டேனாம். அதைப் பார்த்த என் அம்மா மிகவும் வருத்தமாகி விட்டாராம். அதுமுதல் என் அம்மா பழைய புடவை ஒன்றை சிறிதாக வெட்டி வைத்துக் கொண்டு நான் தூங்கியதும் தன் புடவையை எடுத்துவிட்டு அந்த துணியை கொடுத்து விடுவாராம்! அதன் பிறகு நிறைய மஸ்டர்ட் கலர் புடவை வாங்கினாலும் அந்த அழகு எதிலும் வரவில்லை என்பார்! இன்றும் மஸ்டர்ட் வண்ணப் புடவையைக் காணும்போது அம்மா நினைவு மனதை அழுத்தும்.
எனக்கு ப்ரௌன் தவிர மற்ற அத்தனை வண்ணங்களும் பிடிக்கும். ஒவ்வொருமுறையும் புதிய வண்ணங்களையே வாங்குவேன். என் கணவருக்கு பிடித்த நிறம் ரோஜா நிறம். புடவை வாங்கப் போனால் என் கணவர் முதலில் ரோஸ்தான் எடுப்பார். ரோஸ் கலந்ததாகவாவது இருக்க வேண்டும் என்பார். அவருக்கு பிடித்தது ஒன்றும் எனக்கு பிடித்தது ஒன்றுமாக இரண்டு புடவை வாங்கி விடுவேன்! ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!!
கருப்பு வண்ணப் புடவை எனக்கு பிடிக்கும். என்னவரோ கருப்பை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார்! அது ஒரு கலரா என்பார். என் மருமகளின் வளைகாப்பு புடவையை அவள் எனக்கு கொடுத்துவிட, என் கருப்பு ஆசையைத் தீர்த்துக் கொண்டேன்!
மல்டிகலர் புடவை வாங்க ரொம்ப நாளாக ஆசைப்பட்டும் கிடைக்க வில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பட்டுப் புடவை எக்ஸிபிஷனில் மனதுக்கேற்ற மாதிரி கிடைக்க உடன் வாங்கி விட்டேன். எங்கு போனாலும் என் முதல் choice அந்தப் புடவைதான்! Light weight புடவைகள் அணிய இலகுவாக இருக்கும். கூடியவரை அவற்றைதான் வாங்குவேன். Golden colour புடவை பார்த்தபோது மிக அழகாக இருந்தது. விலை அதிகமானாலும் வாங்கிவிட்டேன்! அதை பாராட்டாதவர் இல்லை. அந்த நேரங்களில் மிக பெருமிதமாய் உணர்வேன்!
சிங்கப்பூரில் என் மகன் இருந்தபோது அங்கு பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு கிடைக்கும் ஜப்பான் புடவைகள் மிக அழகான வண்ணங்களில் அணிவதற்கு மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் 4 புடவைகள் பல தினுசுகளில் வாங்கி வருவேன்.
வெளிநாடுகளுக்கு செல்லும்போது சல்வார், ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்தாலும் விதவிதமாய் வண்ண வண்ணப் புடவைகளை மேட்சான designer blouseகளுடன் அணியும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். புடவைக்கு ஏற்ற கண்ணாடி வளையல்கள் மேலும் அழகு சேர்க்கும். என் புடவையை தொட்டுப் பார்த்து பாராட்டிய வெளிநாட்டினர் பலர்.
'வண்ணங்களே எண்ணங்களாய்' என்ற பதிவில் என் வண்ண வண்ணப் புடவைகளைப் பற்றி எழுதவைத்த மாம்ஸ்ப்ரஸ்
ஸோவிற்கு நன்றி🙏
கருத்துகள்
கருத்துரையிடுக