இனிப்போ..கசப்போ..



நான் எழுதுகிறேன்..

கசப்பு..

ஈன்ற பொழுதின்
பெரிதுவந்தேன்..

எங்கள் குடும்பம் நடுத்தர வசதிகளைக் கொண்ட குடும்பம். எனக்கு நான்கு குழந்தைகள். என் கணவர் வங்கி அதிகாரி என்றாலும் ஒவ்வொரு மாதமும் வரவுக்கு அதிகமாகவே செலவாகும். குழந்தைகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படித்தார்கள். எங்கள் உறவினர்களின் குழந்தைகள் CBSE, ICSE syllabus பள்ளிகளில் படித்தார்கள். அதனால் அவர்கள் படிப்பே மிக உயர்வு என்பார்கள். அந்த அளவுக்கு மெட்ரிகுலேஷன் படிப்பு இருக்காது என்பார்கள்.

அத்துடன் IITயில் படிப்பது தம் குழந்தைகளால் மட்டுமே முடியும் என்றும், வெளிநாட்டு படிப்பு, வேலை என்பதெல்லாம் என் குழந்தைகளால் நினைத்தே பார்க்க முடியாது என்று சொல்வதைக் கேட்டு மிகவும் மனக்கஷ்டப் படுவேன்.

என் மகள் டாக்டருக்கு படிக்கப் போகிறேன் என்றபோது பரிகாசமாக...டாக்டர் படிப்பா! அதற்கெல்லாம் சூட்கேஸ் (லஞ்சம்) கொடுத்தால்
தான்  படிக்க முடியும். அதுவும் நம்ம communityக்கு அதெல்லாம் கிடைக்காது...என்று என் குழந்தைகள் எதிரிலேயே சொல்வார்கள். இது போன்று என் உறவுகள் பேசிய கசப்பான வார்த்தைகள் என் குழந்தைகளை எப்படியாவது சாதிக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதியை எனக்குள் ஏற்படுத்தியது.

இதெல்லாம் கேட்க எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். 'என்ன உறவினர்கள் இவர்களெல்லாம். இப்படி பேசுகிறார்களே' என்று என் கணவரிடம் சொல்லி வருத்தப்படுவேன். நான் அவர்களிடம் சவால் விட முடியாது முதலாக வருவார்கள் என்றோ என்ஜினியர், டாக்டராக வருவார்கள் என்றோ. கடவுளிடம் மட்டுமே வேண்டுவேன்.

சாதாரண தமிழ் மீடியம் படித்த என்னையே என் அம்மா மாநில முதலாவதாக வர வேண்டும் என்று நன்கு படிக்க சொல்லி ஊக்கம் கொடுப்பார். அது
போல் நானும் என் குழந்தைகள் ஆறாம் வகுப்பு படித்ததிலிருந்தே நன்கு படித்து மாநில முதலாக வர வேண்டும் என்று சொல்வேன். அவர்களும் முதல் இரண்டு ரேங்க்களை எடுப்பார்கள். ஆனால் மாநில முதல் கிடைக்குமா என்பது எனக்கு சந்தேகமாகவே இருந்தது.

மேலும் வங்கியில் என் கணவரின் இட மாறுதலால் இரண்டு வருடங்கள் மட்டுமே ஒரு ஊரில் இருப்போம்.
சிவகாசி,பாபநாசம், கும்பகோணம், மதுரை, ஈரோடு கோலாப்பூர், மும்பை என்ற பல ஊர்களில் படித்தார்கள். எல்லா பள்ளிகளிலும் முதலிடத்தை விடாமல் படித்தது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஒருவராவது மாநில முதலிடம் பெற்று என்னை பரிகசித்தவர்
களிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

என் மூத்த மகன் +2வில் பொறியியல் க்ரூப் எடுத்து  மாநில மூன்றாவதாகவும், பள்ளி முதலாவதாகவும்  வந்தபோது நான் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை.  புகழ் பெற்ற  BITS பிலானியில் B.Tech படித்து ஜெர்மனியில் M.S மற்றும் Ph.D முடித்து பெர்லினில் கல்லூரி பேராசிரியராக இருக்கிறான்.

அடுத்தவன் அதே பள்ளியில் காமர்ஸ் க்ரூப் எடுத்து படித்தான். பள்ளி தலைமை ஆசிரியை science group எடுத்துக் கொண்டால் மாநில ரேங்க் கிடைக்கும் என்றபோது, தான் காமர்ஸ் எடுத்தே மாநில ரேங்க் பெறுவதாக தைரியமாகக் கூறி படித்து, சொன்னபடியே மாநில முதலாவதாக வந்து என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்தான்.


அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி மற்றும் திரு.சேஷனிடம் பரிசுகள் பெற்றதுடன், KKR பாமாயில் கம்பெனியாரிடமிருந்து மாருதி கார் பரிசாகப் பெற்றான். அவனது புகைப்படம் தமிழ்நாடு முழுதும் அத்தனை செய்தித் தாள்களிலும் பிரசுரமாயிற்று. M.B.A. முடித்து Education Consultant ஆகவும் சொந்தக் கம்பெனியும் நடத்துகிறான்.

மகள் முதலிலிருந்தே டாக்டராகும் ஆசையில் படித்தவள். +வில் 95% பெற்று மும்பை Grant Medical Collegeல் (அச்சமயம் மும்பையில் இருந்தோம்.)படித்து டாக்டரானாள். நாங்கள் சூட்கேஸெல்லாம் கொடுக்கவில்லை! நான்கு வருடத்திற்குமாக  மொத்தமாக 10000ரூ. Feesதான் கொடுத்தோம்.


கடைக்குட்டி மகன் மும்பையில் B.E. படித்து மெரிட்டில் IITயில் M.Tech படித்து லண்டனில் இருக்கிறான்.குழந்தைகளுக்கு இறையருளும், நானும் என் கணவரும் கொடுத்த ஊக்கமும், அவர்களின் நம்பிக்கையும், முழுமுயற்சியும் அவர்களை மிகச் சிறப்பான படிப்பு, வேலை இவை கிடைக்கக் காரணமாயிற்று என்பது என் எண்ணம்.

இதில் முக்யமான விஷயம் என் குழந்தைகளால் சாதாரண பள்ளிகளில் படித்து செய்ய முடியாது என்று சொன்னவர்களின் எந்தக் குழந்தையும் என் குழந்தை
களைப் போல் படித்து முதலாக வரவில்லை. அன்று என் குழந்தைகளால் முடியாது என்றவர்கள் என்னிடமே...உன் குழந்தைகளின் புத்திசாலித்தனம் மிக அதிகம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்து விட்டார்களே...என்று பாராட்டுகிறார்கள். இதை நினைத்து நான் இன்றும் பெருமை கொள்கிறேன்.என்னை துச்சமாகப் பேசியவர்கள் முன் நான் இன்று பெருமையுடன் நிற்பதன் காரணம் நாம் படிக்கும் பள்ளிகள் மட்டுமல்ல..நம் குழந்தைகளை நாம் ஒழுக்கம், நேர்மை இவற்றுடன் நல்ல முறையில் உருவாக்குவதுதான் அவர்களை சிறந்தவர்களாக்குகிறது.

என் குழந்தைகளைப் பற்றிய நினைவுகளை மீட்டெடுத்து மீண்டும் எழுத வைத்தமைக்கு மாம்ஸ்ப்ரஸ்ஸோவுக்கு நன்றி🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)

பெயர்